Published:Updated:

எம்.ஜி.ஆருக்கே தானம்கொடுத்த லீலாவதி, இப்போது..!

ஒரு மெடிக்கல் ஆட்டோகிராஃப்

எம்.ஜி.ஆருக்கே தானம்கொடுத்த லீலாவதி, இப்போது..!

ஒரு மெடிக்கல் ஆட்டோகிராஃப்

Published:Updated:

மிழகம் கொண்டாடிய நடிகர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இவர் நோய்வாய்ப்பட்டபோது. இவருக்கு  தன் சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுத்த லீலாவதியை, இந்தத் தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. 30 ஆண்டுகள் கடந்தபோதிலும், அந்த நாளையும் அந்த நிமிடத்தையும் இன்னும் நினைவலைகளில் தாங்கி நிற்கும் லீலாவதி, எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியின் மகள்.

எம்.ஜி.ஆருக்கே தானம்கொடுத்த லீலாவதி, இப்போது..!

‘உறுப்புதானம் செய்யலாம்’ என்பதை அன்றே செய்துகாட்டிய உதாரண மனுஷி. முக்கியமாக சிறுநீரக தானம் செய்தவர்கள், அதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்று உலகுக்கு உரத்துச் சொல்லும் ரோல்மாடல். தற்போது சென்னையில் செட்டிலாகிவிட்ட லீலாவதியைச் சந்தித்தோம்.

‘‘எங்க பெற்றோர் சக்ரபாணி, மீனாட்சி அம்மாவுக்கு நாங்க 10 குழந்தைங்க. சித்தப்பா ராமச்சந்திரன், அப்பாவோட மூத்த குழந்தை மாதிரி. நாங்க அவரை ‘சேச்சா’னுதான் (மலையாள ‘செறியச்சன்' என்பதன் மருவு) கூப்பிடுவோம். எல்லோரும் கூட்டுக் குடும்பமா சென்னையில் வசித்தோம். சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாருமே எங்க அப்பா, சேச்சாவை... ‘பெரியவர்’, ‘சின்னவர்’னுதான் சொல்வாங்க. அப்பா மட்டும்தான் அவரை ‘ராமச்சந்திரா’னு முழுப்பெயர் சொல்லி, வாய்நிறையக் கூப்பிடுவார். எங்களுக்கு சேச்சானாலே சிம்ம சொப்பனம்... சேச்சாவோ அப்பா பேச்சுக்கு மறுபேச்சுப் பேச மாட்டார். ஆனா, எங்க கன்ட்ரோல் அவர் கையில்தான். அவர் முறைச்சார்னாலே நடுங்கிடுவோம். வீட்டில் தமிழில்தான் பேசணும்; மலையாளம் கூடாது. சமையல்காரர், டிரைவர் எல்லாரையும் ‘அண்ணே’ன்னு மரியாதையாதான் கூப்பிடணும். எங்க அம்மா மீது சேச்சாவுக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் உண்டு!’’ எனும் லீலாவதிக்கு, படிப்பு முடித்த கையோடு, திருச்சூரைச் சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாதனுடன் திருமணம் முடிந்திருக்கிறது.

‘‘சேச்சா அரசியலில் தீவிரமானது, ராமாவரம் தோட்டத்துக்குக் குடிபோனது எல்லாம் என் கல்யாணத்துக்குப் பிறகுதான். எங்க வீட்டில் எல்லா கல்யாணமும் அவர் மேற்பார்வையில்தான். தோட்டத்துக்குப் போனாலும், எங்களுக்கு எது ஒண்ணுனாலும் அவரைக் கேட்டுத்தான் செய்வோம். என் பிரசவத்தப்போ, சிசேரியன்னு சொன்னதும் இரவெல்லாம் ஆஸ்பத்திரியிலேயே இருந்து, குழந்தை பிறந்ததும்தான் வீட்டுக்குப் போயிருக்கார் சேச்சா. காலையில் என்னைப் பார்க்க வந்தவர் என் தலையை வருடி, ‘நேத்து எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமாம்மா?’னு சொன்னப்போ, நான் நெகிழ்ந்துட்டேன். அவர் முதல்வராகி ரொம்ப பிஸியானாலும்கூட எங்களிடம் அதே அன்போடும் கண்டிப்போடும்தான் இருந்தார்...’’

 - சற்று நிறுத்தியவருக்கு, 80-களில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிப்பு பற்றிப் பேசும்போது குரல் கம்முகிறது.

எம்.ஜி.ஆருக்கே தானம்கொடுத்த லீலாவதி, இப்போது..!

‘‘அப்போலோவில் அட்மிட்டாகி இருந்த சேச்சாவுக்கு சர்க்கரை நோய் காரணமா கிட்னி ஃபெயிலியர் ஆயிட்டதாகவும், `டிரான்ஸ்ப்ளான்ட்’ பண்றதுக்கு கிட்னி தேவைப்படறதாகவும் சொன்னாங்க. எங்க குடும்பத்தில் நாங்க எல்லோருமே அவருக்கு கிட்னி கொடுக்கிறதுக்கு ரெடியாக இருந்தோம். நான் போறதுக்கு முன்னாலயே, எல்லாருக்கும் டெஸ்ட் பண்ணிப் பார்த்திருக்காங்க. அதில் எங்க சுகுமார் அண்ணனுடையது 98% பொருந்தியிருந்தாலும், அவருக்கும் லேசா சர்க்கரை அறிகுறி இருந்ததால, நிராகரிச்சுட்டாங்க. எனக்கு டெஸ்ட் பண்ணிப் பார்த்து, என்னுடைய கிட்னியைப் பொருத்தலாம்னு சொன்னப்போ எனக்கு ரொம்ப சந்தோஷம். என் கணவரும் மகிழ்ச்சியோடு சம்மதிச்சார். நாங்க 10 பிள்ளைங்கள்ல நான்தான் அவருக்கு கிட்னி தரப்போறேன்ங்கிறது எனக்குப் பெரிய பெருமையா மட்டுமில்லாம, நன்றிக்கடனாகவும் தோணுச்சு!

ஆனா, இதெல்லாம் சேச்சாவுக்குத் தெரியாது. ஆபரேஷனுக்காக அவரை அப்போலோவிலிருந்து, நியூயார்க் புரூக்ளின் ஹாஸ்பிட்டலுக்கு மாத்தினப்போ... நானும் போனேன். சர்ஜரிக்கு முன்னே என்னை அங்கே பார்த்தப்போ, ‘நீ ஏன் இங்கே வந்திருக்கே... உனக்கு என்ன உடம்புக்கு?’னு சைகையிலேயே கேட்டார். ‘உங்களைப் பார்க்கத்தான்’னு சொல்லிச் சமாளிச்சிட்டேன். 30 வருஷம் முன்னால, அது பெரிய மருத்துவ முயற்சி. நல்லபடியா முடிஞ்சது. அமெரிக்காவில், ஆபரேஷன் பண்ணின டாக்டர் ஃப்ரீட்மேன் ஏற்பாடு செய்திருந்த ‘கெட் டுகெதர்’ல, ‘உறுப்பு தானம் செய்ததன் மூலமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க ஒரு நல்ல மெசேஜை எடுத்துட்டுப் போறீங்க!’னு அவர் சொன்னதை என்னால மறக்கவே முடியாது. எவ்வளவு பெரிய, சிறந்த செய்தியை நாட்டுக்குச் சொல்ற தூதராகும் வாய்ப்பை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கார்! 

எம்.ஜி.ஆருக்கே தானம்கொடுத்த லீலாவதி, இப்போது..!

ஆனா, சேச்சாவுக்கு அவர் சென்னைக்கு வந்ததும், பேப்பரில் ‘லீலாவதிக்கு நன்றி!’்னு வந்திருந்த விளம்பரங்களைப் பார்த்துட்டுதான், விவரம் தெரிய வந்தது. என்னை உடனே வரச்சொன்னார். போனப்போ, கோபத்தின் உச்சியில் அவர் முகம் ஜிவுஜிவுனு சிவப்பு ரோஜா மாதிரி இருந்தது. வீட்டில் யார்கிட்டேயும் பேசல; சிரிக்கல. ‘உர்’னு முகத்தை வெச்சுக்கிட்டு இருந்தவர், என்னைப் பார்த்ததும் என் கைகள் ரெண்டையும் பிடிச்சுக்கிட்டு, பேசமுடியாமல் அழுதுட்டார். எனக்கும் கண்ணீர் கொட்டுச்சு. என் உடல்நிலையை விசாரிச்சு, கொஞ்சம் கொஞ்சமாத்தான் சமாதானம் ஆனார். அவருக்குப் பொருத்திய கிட்னி நல்லா வேலை செய்துச்சு. அதுக்கப்புறம் சில வருஷங்கள் நல்லா இருந்தார்’’ என்றவர்,

‘‘கிட்னி கொடுத்ததால, எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. நமக்கு இருக்கிற ரெண்டு கிட்னிகளில், நல்லா வேலை செய்ற ஒரு கிட்னி இருந்தாலே போதும், ஆயுள் முழுக்க ஆரோக்கியமா இருக்கலாம். இப்போ உறுப்புதானம் செய்றது பத்தின கவுன்சலிங் பண்றேன்!’’ எனும் லீலாவதிக்கு இரு மகள்கள். கணவர் காலமாகிவிட்டார்.

‘‘அறுவை சிகிச்சை தழும்பைப் பார்க்கும் போதெல்லாம் சேச்சா ஞாபகம் வந்து, இப்பவும் கண் கலங்கறதைத் தவிர்க்க முடியல. மக்களால் மிக அதிகமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதருக்கு உறுப்பு தானம் கொடுத்தன் மூலமா, இந்தப் பிறவி எடுத்த பயனை அடைஞ்சிட்டதாகத்தான் நினைக்கிறேன்!’’

- கண்களில் நீர் திரையிட, நா தழுதழுக்கிறார் லீலாவதி.

‘கொடுத்து’ வைத்தவர்!

பிரேமா நாராயணன்  படம்: சு.குமரேசன்