Published:Updated:

படித்தது, பத்தாம் வகுப்பு... கொடுப்பது, பத்து பேருக்கு வேலைவாய்ப்பு!

படித்தது, பத்தாம் வகுப்பு... கொடுப்பது, பத்து பேருக்கு வேலைவாய்ப்பு!

படித்தது, பத்தாம் வகுப்பு... கொடுப்பது, பத்து பேருக்கு வேலைவாய்ப்பு!

படித்தது, பத்தாம் வகுப்பு... கொடுப்பது, பத்து பேருக்கு வேலைவாய்ப்பு!

Published:Updated:

சுகாதாரத்தைக் குறிக்கும் வகையில் ‘சுகா’ என்ற பெயரில் சிறுதானிய உணவுப் பொருட்களை பாக்கெட் செய்து, கடந்த ஐந்து வருடங்களாக விற்பனை செய்து வருகிறார் திருவையாறு ராஜேஸ்வரி ரவிக்குமார். பத்தாம் வகுப்போடு படிப்பு முடிந்துவிட்ட போதிலும், இன்று 10 பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்து, மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறும் முதலாளியாக உயர்ந்திருக்கும் ராஜேஸ்வரியைச் சந்தித்தோம்...

‘‘திருமணத்துக்கு அப்புறம், படிப்பை பாதியில விட்ட வருத்தத்தை ஈடுகட்ட, பொது அறிவு சார்ந்த தகவல்களை நாளிதழ், வார இதழ்னு தேடிப் படிச்சு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் எனக்கு இயற்கை உணவுகள், சிறுதானிய உணவுகள் எல்லாம் தெரிய வந்தது. அது பத்தின தகவல்களை நிறைய சேகரிச்சேன்.

படித்தது, பத்தாம் வகுப்பு... கொடுப்பது, பத்து பேருக்கு வேலைவாய்ப்பு!

ஒருமுறை நவதானியக் கஞ்சி வெச்சு கணவருக்குக் கொடுத்தேன். பொதுவா சுவையில் கண்டிப்பா இருக்கிற அவர், அதை ‘சூப்பர்!’னு சொன்னதும், அந்த முதல் பாராட்டு இன்னும் விதவிதமான சிறுதானிய உணவுகளை என்னை செய்து பார்க்க வெச்சது. அவர் டிடர்ஜென்ட் சோப் டீலரா இருக்கிறதால, எங்க வீட்டுக்கு வந்து சோப்பு வாங்கிட்டுப் போவாங்க பெண்கள் பலர். அவங்க எல்லாம், ‘அக்கா... ஏதாச்சும் வேலை, வருமானத்துக்கு வழி இருந்தா சொல்லுங்க’னு சொல்லிட்டுப் போவாங்க. அவங்களைப் பயன்படுத்தி சிறுதானிய பாக்கெட் உணவுகளைத் தொழிலா பண்ற ஐடியா கிடைச்சது!’’ எனும் ராஜேஸ்வரி, கிரவுண்ட் வொர்க் செய்திருக்கிறார், நிதானமாக.

‘‘தொழிலின் நுணுக்கங்களைத் தெரிஞ்சுக்கவும், முறைப்படி செய்யவும் தஞ்சாவூர்ல இருக்கிற ஐ.ஐ.சி.பி.டி-யில (IICPT - Indian Institute of Crop Processing Technology), உணவுப் பொருட்கள் விற்பனையை ஆரம்பிப்பது, தொழிலை விரிவுபடுத்துவதுனு பலதரப்பட்ட ஆலோசனை களைப் பெற்றேன். அடுத்ததா, விற்பனைக்கான உணவுப் பொருட்கள் பேக்கிங்கில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் அதுக்கான அனுமதியை, எஃப்.எஸ்.எஸ்.எ.ஐ-யிடம் (FSSAI - Food Safety and Standards Authority of India) பெற்றேன்.

பிறகு, ஆயிரம் ரூபாய் முதலீட்டில் அஞ்சு வருஷத்துக்கு முன்ன ‘சுகா டயட் நேச்சுரல் ஃபுட்ஸ்’ ஆரம்பிச்சேன். சிறுதானியங்களை தேனி, ராமநாதபுரம், கோவை போன்ற இடங்களில் இருந்து வாங்கிட்டு வந்தேன். தெரிஞ்சவங்க, உள்ளூர் கடைகள்னு கொஞ்சம் கொஞ்சமா மார்க்கெட்டில் ஸ்திரமானேன்...’’

- படிப்படியாக தன் வளர்ச்சியைச் சொல்லும் ராஜேஸ்வரி, குழந்தைகள், பெரியவர்கள், பருமனானவர்கள், சர்க்கரை நோயாளிகள், சுவை விரும்பிகள் என்று அவரவரின் தேவைக்கேற்ப வகைப்படுத்தி தன் உணவுப் பொருட்களை பாக்கெட் செய்கிறார்.

‘‘சர்க்கரை நோயாளிகளுக்காக நான் பிரத்யேகமா தயாரிச்ச வரகு, வெந்தயம் சேர்ந்த பொங்கல் மிக்ஸை, ‘ப்ரீ க்ளினிக்கல் ரிப்போர்ட்’காக சாஸ்திரா யுனிவர்சிட்டியில கொடுத்தேன். ‘சுகர் ஏற்றப்பட்ட எலிக்கு இதைக் கொடுத்தபோது, சுகர் லெவல் குறைய ஆரம்பிச்சது. இதை சர்க்கரை நோயாளிகள் சுகர் கன்ட்ரோலுக்கு தாராளமாச் சாப்பிடலாம்’னு அவங்க ரிப்போர்ட் கொடுத்தாங்க. உடல் எடை குறைய விரும்புறவங்களுக்கு கொள்ளு, பார்லி, சோயா (உடலுக்குத் தேவையான நல்லகொழுப்பு இதில் இருப்பதால் இதையும் சேர்க்கிறோம்) இவற்றை சேர்த்து அரைச்ச பாக்கெட் மாவு இருக்கு. இரவு இதைக் கஞ்சியா காய்ச்சிக் குடிக்கும்போது, கெட்ட கொழுப்புகள் கரையும். இன்னும் விதவிதமா கொடுக்கிறதால, வாடிக்கையாளர்களுக்கு பஞ்சமே இல்லை’’ - படபடவெனத் தகவல்கள் தந்தவர்,

‘‘என் தயாரிப்பில் வரும் உணவுப் பொருட்கள்ல பிரிசர்வேட்டிவ் கலக்கிறதில்ல. அப்படி செய்தா, அதில் வியாபாரம்தான் இருக்குமே தவிர, ஆரோக்கியம் இருக்காது. வெறும் காசுக்காக பண்ற தொழில், நீண்ட நாள் நிலைக்காது!’’

- அசத்தலாக முடித்தார் ராஜேஸ்வரி!

வே.கிருஷ்ணவேணி  படங்கள்: க.சதீஷ்குமார்