Published:Updated:

சாரதாவும் சினேகாவும் ஒண்ணா படிச்சவங்க!

வே.கிருஷ்ணவேணி, படம்: எம்.உசேன்

சாரதாவும் சினேகாவும் ஒண்ணா படிச்சவங்க!

வே.கிருஷ்ணவேணி, படம்: எம்.உசேன்

Published:Updated:

சாரதா பாட்டிக்கு வயது 66. சொந்த ஊர் மதுரை. அவர் பேத்தி சினேகாவுக்கு வயது 14. பெற்றோருடன் வசிப்பது சென்னையில். ஆறு வருடங்களுக்கு முன் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஹிந்தி படிக்க ஆரம்பித்து, பிராத்மிக் எனும் ஆரம்பகட்டம் தொடங்கி, 8 பரீட்சை களையும் எழுதி முடித்து, இன்று இருவரும் ‘ஹிந்தி பண்டிட்’ ஆகிவிட்டார்கள்!

தன் பேத்தியைப் பார்க்க சென்னை வந்திருந்த சாரதாவிடம், `‘சுவாரஸ்யமா இருக்கே..!’’ என்றோம். `‘சுவாரஸ்யம் மட்டுமில்ல... தன்னம்பிக்கை தரும் விஷயமும்கூட!’’ என்று ஆரம்பித்தார் சாரதா...

‘‘நான் பி.எஸ்ஸி, பயாலஜி கிராஜுவேட். 28 வருஷம் இந்தியன் வங்கியில ஸ்பெஷல் அசிஸ்டென்டா வேலை பார்த்துட்டு, வி.ஆர்.எஸ் வாங்கிட்டேன். ஓய்வுனு உட்கார ஆரம்பிச் சுட்டா அப்புறம் உட்கார்ந்து, எழறதுகூட சிரமமாத்தான் தெரியும்கிறதால வீட்டில் வேலைகள் முடிச்சுட்டு ஓவியம், டெய்லரிங், டிசைனிங், எம்ப்ராய்டரி எல்லாம் கத்துக்கிட்டேன். அப்படியே சின்ன வயசுல விட்டுப் போன ஹிந்தி கிளாஸ் ஆசையும் வந்தது. அப்போதான் சென்னையில என் பேத்தி சினேகாவும் ஹிந்தி கிளாஸ்ல சேர்ந்திருக்கிறதா சொன்னா. `சரி, ரெண்டு பேரும் சேர்ந்து படிப்போம்’னு, நான் மதுரையில ஒரு சென்டர்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்!’’ என்ற பாட்டியை ஃபாலோ செய்தார் பேத்தி...

சாரதாவும் சினேகாவும் ஒண்ணா படிச்சவங்க!

‘‘அப்போ நான் மூணாவது படிச்சுட்டு இருந்தேன். பாட்டிக்கு அப்ப வயசு 60. ‘பாட்டி... அது அப்படியில்ல’னு நான் ஏதாச்சும் திருத்தினா, ஈகோ எல்லாம் இல்லாம ‘ஓ.கே-டா செல்லம்!’னு சிரிப்பாங்க. ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் சந்தேகம்னா போன்ல, ஸ்கைப்லனு பேசி தெளிவுபடுத்திக்குவோம். எக்ஸாம்னா நாங்க ரெண்டு பேரும் கம்பைண்டு ஸ்டடி பண்றதைப் பார்த்து, ‘பாட்டி, பேத்தின்னா இப்படியில்ல இருக்கணும்!’னு எல்லோரும் எங்களை பெருமையா பேசுவாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இதுக்காகவே ஹிந்தி சினிமா பார்க்கிறது, ஹிந்தி கதைகள் படிக்கிறதுனு ஒரே ஜாலிதான். எல்லாத்துக்கும் மேல, ஒரு நிமிஷத்தைக்கூட வீணாக்காத டைம் மேனேஜ்மென்ட்டை பாட்டிக்கிட்ட கத்துக்கிட்டேன்!’’

- பாட்டியின் கழுத்தைக் கட்டிக் கொள்கிறார் பேத்தி.

‘‘ஆறு வருஷத்துல 8 பரீட்சைகளையும் முடிச்சு, இப்போ நானும் என் பேத்தியும் ஹிந்தி பண்டிட் ஆயிட்டோம். எனக்கு ஹிந்தி கத்துக்கொடுத்த ஆசிரியர் அடுத்ததா என்னை எம்.ஏ., ஹிந்தி படிக்கச் சொல்லியிருக்காங்க. அதோட, ஹிந்தி கிளாஸும் எடுக்கப் போறேன். மதுரைக்குப் போனதும் போர்டு மாட்டிட வேண்டியதுதான்!’’ - சாரதா சொல்ல...

‘‘பண்டிட் ஆன பாட்டி... தலைப்பு நல்லாயிருக்கா..?’’ - குறும்பாகக் கேட்கிறார், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் சினேகா!