Published:Updated:

டாஸ்மாக் போர்...

சித்ரவதைக்குப் பின்னும் சீற்றம் குறையாத மாணவிகள்!க.தனலட்சுமி, படங்கள்: பா.அருண்

டாஸ்மாக் போர்...

சித்ரவதைக்குப் பின்னும் சீற்றம் குறையாத மாணவிகள்!க.தனலட்சுமி, படங்கள்: பா.அருண்

Published:Updated:

பாலியல் பலாத்கார குற்றவாளிகள், படுபாதக கொலைகாரர்கள், ஊழல் பெருச்சாளிகள் போன்றவர்களையெல்லாம்கூட கிட்டத்தட்ட சல்யூட் அடிக்காத குறையாகவே அழைத்துச் செல்கிறது நம் காவல்துறை. அதேசமயம், நீதிக்காகவும், நேர்மைக்காகவும் போராடுபவர்களை தேசவிரோதிகள் போல சித்திரித்து, தன் கொடூரக் கரங்களால் நசுக்குகிறது.

அரக்கத்தனமான நம் போலீஸின் இத்தகைய போக்குக்கு சமீபத்தில் இரையாகிப்போனார்கள்... இந்நாள் மாணவிகளான கனிமொழி, ஜான்சி மற்றும் முன்னாள் மாணவிகளான நிவேதிதா, வாணிஸ்ரீ, ரூபாவதி! ஆனால், அத்தகைய கொடூரத்தை நேரில் சந்தித்த பிறகும், அவர்களின் நெஞ்சுரம் துளியும் குறையாமல், அடுத்தகட்ட போராட்டத்துக்கு அவர்கள் தயாராகிக்கொண்டிருப்பதுதான்... பிரமிக்க வைக்கிறது!

இவர்கள் செய்த குற்றம்... தமிழகக் குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கும் `டாஸ்மாக்’ மதுக்கடைகளுக்கு எதிராக போராடியதுதான்!

‘புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி’ எனும் அமைப்பைச் சேர்ந்த இவர்கள், கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை, பச்சையப்பன் கல்லூரி அருகே நடந்த மதுவிலக்குப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, இவர்களிடம் காவல்துறையினர் மனசாட்சியின்றி கேவலமாக நடந்துகொண்டதை மீடியாக்களில் பார்த்து பதைபதைத்தோம். 38 நாட்கள் கழித்து, செப்டம்பர் 10 அன்று ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

டாஸ்மாக் போர்...

‘‘ `இன்னிக்கும் குடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்துகிடக்காம என் பையன் ஒழுங்கா வீடு வந்து சேரணுமே’, `குடல் வெந்துபோச்சுனு டாக்டர் சொல்லியும் இந்த மனுஷன் தினம் பாழாப்போன சாராயத்தைக் குடிக்காம வரமாட்டேங்கிறாரே’, `அப்பா குடிச்சிட்டு வந்து இன்னிக்கும் அம்மாவை அடிப்பாரா...’ - இன்று தமிழ்நாட்டின் பல குடும்பங்களிலும் மாலையானாலே பதைபதைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பெண்கள். இந்நிலையை மாற்றத்தான் இரண்டு மாதங்களாக தமிழ்நாடு முழுக்க மதுவிலக்குப் பிரசாரத்தை நடத்திவந்தோம். இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி மதுவிலக்குப் போராட்டத்தில் சசிபெருமாள் அய்யா இறந்துபோக, போராட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல பச்சையப்பன் கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து அக்கல்லூரி முன் திரண்டோம்.

கல்லூரியின் பின்பக்கமிருந்த டாஸ்மாக் கடையை உடைத்து அகற்ற ஆரம்பித்தோம். போலீஸ், எங்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். தடுக்கப்போன எங்களை, பெண் என்றும் பார்க்காமல் கீழே தள்ளி கையிலும், காலிலும் மாற்றி மாற்றி அடித்தார்கள். தகாத வார்த்தைகளால் திட்டி பூட்ஸ் காலால் வயிற்றிலும், நெஞ்சிலும் உதைத்தார்கள். வலி தாங்க முடியாமல் நிவேதிதா மயக்கமாக... கை, காலைப் பிடித்து இழுத்து, துப்பட்டாவை இழுத்துப் போட்டு, கண்ட இடத்தில் கையை வைத்து ஆண் போலீஸார் தரதரவென்று வேனுக்கு இழுத்துச் சென்றார்கள். நாங்கள் தடுத்து குரல்கொடுத்ததும்தான், பெண் போலீஸ் வந்து தண்ணீர் தரவே அனுமதித்தார்கள். மீடியாக்கள் எங்கள் போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவது தெரிந்தும் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டார்கள்!’’

- கோபம் கொப்புளிக்கிறது ஜான்சிக்கு.

‘‘காவல்துறை மட்டுமல்ல, நீதித்துறையின் அலட்சியமும் எங்களைக் காயப்படுத்தியது...’’ - ஆற்றாமையுடன் ஆரம்பித்த நிவேதிதா, ‘‘வெறும் சார்ட் பேப்பரோடும், பேனரோடும் போராட்டத்துக்குச் சென்றிருந்த எங்களை, கடுமையான ஆயுதங்களோடு போலீஸாரை திட்டமிட்டு தாக்க முயற்சி செய்ததாக எஃப்.ஐ.ஆர்-ல் கையெழுத்திடச் சொல்லிக் கொடுமைப்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துப் போனது இரவு பத்தரை மணிக்குதான். போலீஸ் எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது, அவதூறாகப் பேசியதை எல்லாம் மாஜிஸ்திரேட்டிடம் கூறினோம். எதையும் காதில் வாங்காமல், ரிமாண்ட் செய்துவிட்டார். அடிபட்ட காயங்களுக்கு சிகிச்சை கேட்டோம். இரவு பன்னிரண்டரை மணிக்கு மேல் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெயருக்கு இரண்டு பாராசிட்டமால் மாத்திரைகளைக் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பிவிட்டார்கள்’’ என்று கொந்தளித்தார்.

டாஸ்மாக் போர்...

‘‘சிறையில், ஜெயிலர் உமாசங்கர் எங்களை இன்னும் கேவலமாக நடத்தினார்’’ என்ற வாணிஸ்ரீ, ‘‘பதிவுக்காக சாதி, மதம் கேட்டபோது, ‘எங்களுக்கு சாதி, மதம் இல்லை. அதுதான் எங்கள் அமைப்பின் கொள்கை’ என்றோம். உடனே அவர், ‘சாதி, மதமில்லையா? அப்போ எந்த கேஸ் போட்டாலும் எவனும் கேட்க வரமாட்டான், ரொம்ப வசதியா போச்சு’ என்று சொல்லி, அநாகரிகமாக நடந்துகொண்டார். மகளிர் சிறையினுள் ஓர் ஆண் காவலாளி வருவதற்கே அனுமதி இல்லாதபோது, சிறைக்குள் வந்து அரசியல் கைதிகளாக உள்ள பெண்களிடம் மோசமாக நடந்துகொண்ட அவர் மீது வழக்குப் பதிவு செய்தோம். ‘உமாசங்கர் என்று ஒருவர் எங்கள் துறையிலேயே இல்லை’ என்று அந்த வழக்கையே தள்ளுபடி செய்ய வைத்தது காவல்துறை!’’

- அதிர்ச்சிகள் இன்னும் முடியவில்லை....

‘‘சிறைக்குள் மூத்த வழக்கறிஞர் ஒருவரை எங்களிடம் பேசவைத்து, ‘தப்பான கேஸ்ல போட்டுட்டா வாழ்க்கையே போயிடும். இந்தப் போராட்டத்தைக் கைவிட்டுருங்க’ என்று மிரட்டியது காவல்துறை. நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது, வாகனத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்த என்னை எழச் சொன்னார்கள். நான் மறுக்க, 40 கிலோவில் இருக்கும் என் மேல் 70 கிலோ இருந்த பெண் போலீஸ் அமர்ந்தார். அதைக் தட்டிக் கேட்ட மற்ற நால்வரையும் கன்னத்திலும் வாயிலும் அறைந்து, முடியை கழுத்தைச் சுற்றி நெரித்தார்கள். இதையெல்லாம் மாஜிஸ்திரேட்டிடம் சொன்னபோது, ‘அடிச்சாங்களா? எங்கே... ரத்தக் காயத்தை காட்டுங்க பார்ப்போம்’ என்று மட்டும் சொன்னார். நல்ல காரியத்துக்காகப் போராடிய எங்களுக்கு ஏன் இத்தனை அவமானம், அலைக்கழிப்புகள், தண்டனை?’’ என்று வாணிஸ்ரீ ஆவேசமாகக் கேட்கும் கேள்விக்கு என்ன பதில்?
 

இந்தக் கல்லூரி மாணவிகளுக்குப் பண பலமோ, அரசியல் பலமோ இல்லை. ஆனாலும், இந்த ஏழை மாணவிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் மட்டுமல்ல, டெல்லியிலும்கூட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

1990-ல் ஆந்திராவில் பெண்களின் போராட்டத்தைப் பார்த்து நடுங்கித்தான் அப்போதைய முதல்வர் ராம ராவ் மதுவிலக்கை அமல்படுத்தினார். பெண்கள் நினைத்தால் எதுவும் முடியும் என்றால், தமிழகத்திலும் முடியும்தான். அதற்கான காலம் வராமலா போய்விடும்?!

குடியால் நிரம்பும் கஜானா!

குடிவெறிக்கு அண்ணனை பறிகொடுத்தவர் ரூபாவதி. ‘‘இந்தப் பாழாய்ப்போன குடிக்கு தங்கள் வீட்டு உயிர்களை அள்ளிக்கொடுத்த பெண்களில் நானும் ஒருத்தி! என் அண்ணன் மது குடித்துக் குடித்தே மஞ்சள்காமாலை வந்து ஒரு வருடத்துக்கு முன் இறந்துவிட்டான். கோவையில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருத்தி குடித்துவிட்டு பள்ளிக்குச் சென்றாள். ஆசிரியர் விசாரிக்க, ‘எங்கப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த எனக்கு வேற வழி தெரியல. அவரைக் கூப்பிட்டு, நான் இப்படிப் பண்ணிட்டேன்னு சொல்லுங்க, என்னைப் பள்ளியைவிட்டு நிறுத்துங்க. அப்பவாச்சும் அவர் திருந்துவாரானு பார்க்கலாம். அதுவும் இல்லைனா நான் விஷத்தைதான் குடிக்கணும்!’ என்றாள்.

உயிர் இழப்புகள், குடும்பங்கள் சிதைவது ஒருபக்கம், பள்ளிக் குழந்தைகளின் கைகள் வரை சாராயம் கிடைக்கும் சமூகச் சீரழிவு ஒரு பக்கம்... இப்படித்தான் குடியால் தன் கஜானாவை நிரப்ப வேண்டுமா இந்த அரசு?’’ என்று வெடித்தார் ரூபாவதி.

பாவக் காசு!

‘‘டாஸ்மாக் வருமானத்தில் பாவக் காசை எண்ணும் அரசே... நீ மிக்ஸி, கிரைண்டர் என்று எங்களுக்கு எந்த இலவசமும் தரவேண்டாம். ஒரு ரூபாய் அரிசி தந்து இன்னொரு பக்கம் பலருக்கும் வாய்க்கரிசி போடவேண்டாம். மதுவை மட்டும் விலக்கினால் போதும்... பலரின் வாழ்க்கை தன்னால் விளங்கிவிடும்!’’

- கனிமொழியின் வார்த்தைகளில் ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல்!