Published:Updated:

அன்பு உள்ளம்... ஆண்டவன் இல்லம்!

கோ.ராகவிஜயா, படம்: உ.கிரண்குமார்

அன்பு உள்ளம்... ஆண்டவன் இல்லம்!

கோ.ராகவிஜயா, படம்: உ.கிரண்குமார்

Published:Updated:

பெண்களின் அன்புக்கும் அரவணைப்புக் கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு... சிறப்புப் பள்ளி ஆசிரியைகள். எல்லையற்ற பொறுமை, அளவில்லா அன்பு, சகிப்புத்தன்மை, கலையுணர்வு என்று கட்டமைந்த மனது அவர்களுடையது!

வெவ்வேறு வகையான உடல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டு, சராசரி குழந்தை களைப் போல இல்லாமல் சிறப்பு கவனம் தேவைப்படும் இந்தக் குழந்தைகளுக்கு அதிக சிரத்தையோடு பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களை இந்த சமுதாயத்துக்குள் வாழ அனுப்பி வைப்பது சுலபமான விஷயமல்ல. ஆனாலும், ஒரே ஒரு வார்த்தையைப் புரியவைக்க அதைப் பாடலாக, கவிதையாக, நடனமாக, ஓவியமாக, விளையாட்டாக, நாடகமாக குழந்தைகளுக்கு கடத்திச் செல்லும் அவர்களின் மெனக்கெடல், ஈடற்றது. இவர்கள், இக்குழந்தைகளின் இரண்டாம் தாய் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது, சென்னையில் சமீபத்தில் ‘அர்விந்த்’ அமைப்பு நடத்திய ‘ஆடுகளம் - 2015’ நிகழ்ச்சி. ஆட்டிஸம், டௌன் சிண்ட்ரோம் உட்பட பல்வேறு மனநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ‘அர்விந்த்’ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு உள்ளம்... ஆண்டவன் இல்லம்!

நடக்கவே சிரமப்படும் குழந்தைகளைத் தங்களின் பலநாட்கள் பயிற்சி மூலம், மார்ச் ஃபாஸ்ட் தொடங்கி ரன்னிங் ரிலே வரை ஓட வைத்த ஆசிரியைகளின் முயற்சியும், நிகழ்ச்சியில் அவர்களை அந்த ஆசிரியைகள் உற்சாகப்படுத்திய விதமும்... கிரேட்! இன்னொரு பக்கம் எல்லா குழந்தைகளும் போட்டி மனப்பான்மை, வெற்றி இலக்கு என்பதை எல்லாம் புறந்தள்ளியவர்களாய், தங்கள் சக போட்டியாளர்களையும் உற்சாகப் படுத்திக்கொண்டே விளையாடியது... அவர்களின் உலகுக்கேயான அழகு. பங்குபெற்ற அனைத்துக் குழந்தைகளுக்குமே வெற்றியாளர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது, அசத்தல்!

அமைப்பின் இணை நிறுவனர் சுதா ஆத்மராஜ், ‘‘ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறன் இருக்கும். அதைக் கண்டறிந்து, ஊக்கப்படுத்தி, உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். சொல்லப்போனால், இந்தக் குழந்தைகளின் பெற்றோரைவிட அதிகப் பொறுப்பு ஆசிரியைகளின் கையில்தான்!’’ என்றார். இதை ஆமோதித்தனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்ற ஆசிரியைகளும்.

தான் வாழும் சமூகத்தில் நல்ல மாற்றம் கொண்டு வரும் இவர்கள், அன்பு எனும் ஆயுதம் ஏந்திய சமூகப் போராளிகள்!