Published:Updated:

மின்சாரம், எரிவாயு, மினரல் வாட்டர்...

வீட்டிலேயே தயாரிக்கும் அசத்தல் குடும்பம்!

மின்சாரம், எரிவாயு, மினரல் வாட்டர்...

வீட்டிலேயே தயாரிக்கும் அசத்தல் குடும்பம்!

Published:Updated:

மாநகரங்கள்தான் என்றில்லை... சிறுகிராமங்களில்கூட ஒவ்வொரு குடும்பமும் மின்சாரம், எரிவாயு (கேஸ்), குடிநீர் தேவை என்று மாதம்தோறும் தனியாக சில ஆயிரங்களை எடுத்துவைக்க வேண்டி யுள்ளது. அவர்களையெல்லாம், ``இதோ, எங்களைப் பாருங்க... நீங்களும் மாறுங்க...'' என்று அழைக்கிறது கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்த புனிதவதியின் குடும்பம். தங்கள் வீட்டுத் தேவைக்கான மின்சாரம், எரிவாயு மற்றும் மினரல் வாட்டருக்கு இணையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தானே தயாரிக்கிறது இந்தக் குடும்பம். ஒவ்வொன்றாக அவர்கள் விவரிக்க... ஆச்சர்யம் பற்றிக்கொள்கிறது நம்மை!

மின்சாரம், எரிவாயு, மினரல் வாட்டர்...

புனிதவதியின் கணவர் ஸ்ரீதரன், மழைநீர்த் தொட்டியைக் காட்டியவாறே பேச்சை ஆரம்பித்தார்... ‘‘என் மனைவி புனிதவதி, கல்லூரிகளில் ஹெச்.ஆர். பயிற்சி கொடுத்துட்டு இருக்காங்க. என் பொண்ணு தேவதர்ஷனா, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ., விண்வெளி ஆராய்ச்சி படிச்சுட்டு இருக்காங்க. நான் சோலார் மின்சாரம், பயோகேஸ் மற்றும் மழைநீரைக் குடிநீராக்கி வீட்டின் பட்ஜெட்டைக் குறைப்பது பத்தின கன்சல்டிங் தொழில் பண்றேன். இந்தத் தொழி லுக்கு வந்ததுக்கு ஆரம்பப்புள்ளி, எங்க வீட்டு மழைநீர்த் தொட்டிதான்!’’ என்று சொல்லும் ஸ்ரீதரன், அடிப்படையில் ஒரு விவசாயி.

புனிதா, அந்த முதல் முயற்சி பற்றிச் சொன்னார்... ‘‘2007-ம் வருஷம் தமிழகத்துல கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுச்சு. குறிப்பா, கோவையில 15 நாளுக்கு ஒரு முறைதான் தண்ணி வரும். அதனால, மழைநீரை சேமிச்சு குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்தலாம்கிற யோசனையை கணவர் கிட்ட சொன்னேன். மொட்டை மாடியில ரெண்டு தொட்டி மூலமா 15,000 லிட்டர், வீட்டின் அண்டர் கிரவுண்ட் தொட்டி மூலமா 15,000 லிட்டர்னு மழைநீரை சுத்திகரிச்சு சேமிச்சோம். மொத்தமா 30,000 லிட்டர் நீரை குடிநீர், மற்ற தேவைக்கும் பயன்படுத்திட்டு வர்றோம். இப்படி சேமிக்க ஆரம்பிச்சதுல இருந்து, கேன் தண்ணீர், லாரித் தண்ணீர் வாங்குறதுனு எந்தத் தேவையும் இல்லாததால, மாசம் ரூபாய் 2,500 வரை மிச்சமாகுது!’’

- நாம் வியந்து நிற்க, அடுத்ததாக சோலார் மின்சாரம் தயாரிக்க தான் கொடுத்த யோசனை பற்றிச் சொன்னார், தேவதர்ஷனா... ‘‘ஆறு வருஷத்துக்கு முன்ன யூ.பி.எஸ் சார்ஜ் பண்ணக்கூட மின்சாரம் இல்லாத அளவுக்கு மின்வெட்டுப் பிரச்னை. அப்பாகிட்ட சோலார் மின்சாரத்தை உற்பத்தி பண்ணிக்கலாம்னு சொன்னேன். அப்பாவும் அதை சரியான முறையில் சாத்தியப்படுத்தினாரு. மொட்டை மாடியில் நிறுவின 250 வாட்ஸ் திறன் கொண்ட நாலு பேனலில் உறுபத்தியான 3 - 4 யூனிட் மின்சாரம், வீட்டோட பாதி மின்சாரத் தேவையை பூர்த்தியாக்கிச்சு. கூடுதலா 250 வாட்ஸ் திறன் கொண்ட எட்டு பேனலை வெச்சோம். அதிலிருந்து 12 - 14 யூனிட் மின்சாரம் கிடைச்சது. வீட்டுத் தேவைக்குப் போக, மீதமான மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்குக் கொடுத்து, அதன் மூலமாவும் பணத்தை சம்பாதிச்சிட்டிருக்கோம்!’’

- அரசுக்கே மின்சார சப்ளை செய்து, அசத்தியிருக்கிறார்கள்!

அடுத்ததாக, சமையல் எரிவாயு உற்பத்தியில் தாங்கள் எடுத்த முயற்சிகளைச் சொன்ன புனிதவதி, ‘‘நாலு வருஷத்துக்கு முன்னயெல்லாம், பதிவு செய்து ஒன்றரை மாசம் கழிச்சுதான் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் வரும். சமயத்துல ரெண்டு மாசம்கூட ஆகிடும். அப்போதான், எரிவாயுவையும் நாமளே தயாரிக்கலாம்னு யோசிச்சோம். என் பொண்ணு, கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்குக் கூட்டிட்டுப் போய், எங்களோட கேள்விகளுக்கெல் லாம் விடைதெரிய வெச்சா. அதுக்குப் பிறகு, நாலு பேர் இருக்கும் வீட்டுக்குத் தேவையான 2 கியூபிக் (2,000 லிட்டர்) கொள்ளளவு கொண்ட ஒரு பயோகேஸ் பிளான்ட் அமைச்சோம்.

புளிப்பு சுவைகொண்ட உணவுப் பொருட்கள்ல இருந்து மிகக் குறைவான அளவு பயோகேஸ் கிடைப்பதையும், பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகை உணவுப் பொருட்கள்ல இருந்தும், இனிப்பு உணவுப் பொருட் கள்ல இருந்தும் அதிகமான பயோ கேஸ், வேகமா உற்பத்தி ஆனதையும் தொடர் கண்காணிப்புல கண்டுபிடிச்சார் கணவர். வீட்டு சமையலறைக் கழிவு களோட, மூணு நாட்களுக்கு ஒருமுறை மார்க்கெட்டுக்கு போய், தேவையற்ற காய்கறிக் கழிவுகளை, குறிப்பா கிழங்கு வகைகளையும், பக்கத்துல இருக்கிற மளிகைக் கடைகளில் தேவையற்ற சமையல் பொருட்களையும் வாங்கிட்டு வந்து பிளான்ட்ல போடுவார். வீட்டுக்குத் தேவையான எரிவாயு எளிதாவும், முழுமையாவும் கிடைக்குது.

திடீர்னு வீட்டுக்கு உறவினர்கள் வந்தா, கூடுதல் எரிவாயு தேவைப்படும் கிறதால கூடுதலா தலா 1 கியூபிக் அளவு கொண்ட ரெண்டு பிளான்ட்டும் அமைச்சிருக்கோம். மேலும் பயோகேஸ் பிளான்ட் கழிவு, எங்க வீட்டு மாடித் தோட்டத்துக்கு உரம்!’’

- சொல்லி முடித்தபோது, ஏகப்பட்ட பெருமை புனிதவதிக்கு!

செலவு - வரவு...

இந்த மூன்று பயன்பாடுகளை நிறுவுவதற்கு ஆன செலவையும், இப்போது அதன் மூலம் கிடைக்கும் வரவையும் பற்றி சொன்ன ஸ்ரீதரன், ``மழைநீர் சேகரிப்பு அமைக்க அறுபதாயிரம் ரூபாய், சோலார் மின்சாரத்துக்கு நாலு லட்ச ரூபாய், பயோகேஸ் உற்பத்திக்கு ஐம்பதாயிரம் ரூபாய்னு செலவு பண்ணி இருக்கோம். இதுவரை 85% தொகையைத் திரும்ப எடுத்தாச்சு. இன்னும் ஆறு மாசத்துக்குள்ள முதலீடு செய்த எல்லா தொகையையும் எடுத்துடுவோம். அதுக்கு அப்புறம் எல்லாம் லாபம்தான். இப்பவே குடும்ப பட்ஜெட்ல மாசம் 5 ஆயிரம் ரூபாய் மீதமாகுது. 25 - 30 வருஷம் இந்த சோலார் மின்சாரம், மழைநீர் சேகரிப்பு,  பயோகேஸ் பயன்பாடு எங்களுக்கு உதவியா இருக்கும்!’’ என்றார் உற்சாகம் பொங்க.

மானிய உதவி!

சூரிய ஒளி மின்சாரம் (சோலார்) தயாரிக்க நான்கு பேர் கொண்ட சராசரி குடும்பத்துக்கு மத்திய அரசு 30,000 ரூபாயும், மாநில அரசு 20,000 ரூபாயும் மானியம் வழங்குகிறது. கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் `டெடா' மையத்தில்  விண்ணப்பிக்கலாம்.

கு.ஆனந்தராஜ்  படம்: த.ஸ்ரீநிவாசன், சு.ரகுராம்