Published:Updated:

கண்கள் இல்லை... கானம் உண்டு!

- பிரமிக்க வைக்கும் ‘பத்மஸ்ரீ’ காயத்ரி!ந.ஆஷிகா, படம்: எம்.உசேன்

‘‘இசை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைவிட, இசைக்கும் என்னை மிகவும் பிடித்துவிட்டது போல..! இல்லையென்றால், அந்த மகாசமுத்திரத்தில் கண்கள் மூடி என்னால் கரை சேர்ந்திருக்க முடியுமா?!’’

- குரலில் அத்தனை நளினம் காயத்ரி சங்கரனுக்கு. இவர்... கர்னாடக இசைப் பாடகி, வயலினிஸ்ட், இசையில் பி.ஹெச்டி முடித்தவர், இசைக்கான குறிப்புகளை பிரெய்ல் முறையில் கொண்டு வந்தவர், பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலைஞர்! சென்னையில் தன் வீட்டில் மாணவர்களுக்கு இசை வகுப்புகள் முடித்து நம் முன் வந்து அமர்ந்த நிமிடங்களில், காற்றில் வார்த்தைகள் ஸ்ருதிகளாய் கலக்க ஆரம்பித்தன...

கண்கள் இல்லை... கானம் உண்டு!

‘‘எனக்குப் பிறவியிலேயே கண் பார்வை இல்லை. மூன்று வயதில் இருந்து அம்மா சுப்புலக்ஷ்மி குருநாதன்தான் எனக்கு சங்கீதம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். ஆனால், என் ஆறு வயதில் அம்மா  இறந்துவிட்டார். அதற்குப் பிறகு அலம் ராஜு சோமேஸ்வரராவிடம் தொடர்ந்து இசை கற்றேன். அப்போது என் பாட்டிதான் எனக்காக நோட்ஸ் எடுத்து வைப்பார். இப்படியே இருளில் இசையைக் கற்று, என் 8 வயதில் முதல் கச்சேரி முடித்தேன். இன்று வரை தொடர்கிறது இசையும், மேடைகளும்!’’ எனும் காயத்ரி வளர வளர, தன் இசை ஞானத்தை இன்னும் விரிவுபடுத்தியிருக்கிறார்.

‘‘வாய்ப்பாட்டைத் தொடர்ந்து, வயலினும் கற்றேன். இசையைப் பற்றி ஏட்டுக் கல்வி என்ன சொல்கிறது என்ற ஆர்வம் வர, இசையை கல்லூரியில் சேர்ந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். தொடர்ந்து பயணித்து பிஹெச்.டி முடித்ததோடு, இப்போது இசையில் போஸ்ட் டாக்டரேட் முடிக்கவிருக்கிறேன். பிஹெச்.டி படித்தபோது, பாடத்தை உள்வாங்க மிகவும் சிரமப்பட்டேன். அந்த சிரமம் இனிவரும் விழிச் சவால் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக் கூடாது என, நொட்டேஷன்ஸ் அனைத்தையும் பிரெய்ல் முறையில் மாற்றுவற்கான முயற்சிகளை எடுத்து, அதை முழுமையாக முடித்தேன். நான் கற்ற கலையை பிறருக்கும் கற்றுக்கொடுக்க எண்ணி, இசை வகுப்புகள் எடுத்து வருகிறேன். என் இசை முயற்சிகளில்... அன்பான கணவர், மாமியாரின்ஆதரவு உண்டு!’’ என்பவருக்கு, அப்துல் கலாம்தான் ரோல் மாடல்!

‘‘ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளின் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் மாற்றுத்திறன் சாதனையாளர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும். 2005-ம் ஆண்டு அந்த விருதை அப்துல் கலாம் கையால் நான் வாங்கினேன். அதற்கு அடுத்த வருடமே அவர் கையால் ‘பத்ம’ விருது வாங்கினேன். அந்தத் தருணத்தில், மாற்றுத்திறனாளியான நான், ‘பத்ம’ விருது பெறும் முதல் பார்வையற்ற கலைஞர் என்ற பெருமையில் கரைந்துபோய் நின்றேன். இருளை மட்டுமே அறிந்திருந்த என் மீது அப்போது விழுந்தது தேசிய வெளிச்சம்!

ஒரு சந்திப்பில் குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டத்தில் உள்ள செடிகளை எல்லாம் எனக்குக் காட்டினார் அப்துல் கலாம். எனக்கு எப்படிக் காட்ட முடியும்?! ஒவ்வொரு செடிக்கு அருகிலும் என்னை அழைத்துச் சென்று, அதன் பெயர், பூவின் நிறம், சிறப்புகளை எல்லாம் சுவாரஸ்யமாக அவர் சொன்ன விதத்தில்... என் மனக்கண்ணால் அந்த மலர்களைப் பார்க்க முடிந்தது. அந்தளவுக்கு அன்பும், புரிதலும் கொண்டவர். இசையில் ஆழ்ந்த ஞானம் கொண்ட அவர், என் ஆராய்ச்சி பற்றி நிறைய கேள்விகள் கேட்டு ஆர்வத்துடன் தெரிந்துகொண்டார்!’’ - அப்துல் கலாம் பற்றிப் பேசும்போது பேச்சில் அன்பு அடர்த்தியாகிறது காயத்ரிக்கு.

‘‘எனக்கு 49 வயது ஆகிறது. இருக்கிற வரையில் இசையைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும், இசையையே சுவாசிக்க வேண்டும். அதுதான் என் ஆசை. ஒரு விஷயம் நம்மிடம் இல்லை என்று தெரிந்த பிறகு, `அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? நம்மிடம் இருப்பதைக்கொண்டு என்ன செய்யலாம் என்று, அடுத்த முயற்சிகளைத்தான் பார்க்க வேண்டும். மாற்றுத்திறன் குழந்தைகள் சாதனையாளர்கள் ஆக எந்தத் தடையும் இல்லை. தேவை, நம்பிக்கை மட்டுமே! என்னைப் பொறுத்தவரை, நெகட்டிவ் விஷயங்களை உடனே மறந்து, எப்போதும் பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இதுதான் என் உற்சாகத்துக்கான சீக்ரெட்!’’

- கலகலவென்று சிரிக்கிறார் காயத்ரி!

அடுத்த கட்டுரைக்கு