Published:Updated:

"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு!"

"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு!"

"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு!"

"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு!"

Published:Updated:

‘என் வயசு என்ன சொல்லுங்க பார்ப்போம்?’ என்று அவர் கேட்டால், நாம் சொல்லும் பதிலில் கண்டிப்பாக 10 வருடங்களுக்கு மேல் வித்தியாசம் இருக்கும். 80-களில் கீதாவுடன் பாடியவர், இன்றும் ஜோதிகாவுக்கு ஜோடியாக களத்தில் நிற்கிறார். தன் பயணம் பகிர்கிறார்... ரகுமான்!

‘‘பிறந்தது துபாய். அம்மாவும், அப்பாவும் துபாயில் இருக்க, நான் ஊட்டி கான்வென்ட்டில் படிச்சேன். ஸ்கூல் நாட்கள்தான், இப்போவரைக்கும் என் ஹேப்பி டேஸ்! பெற்றோரைப் பிரிஞ்சிருந்த வருத்தம் தெரியாத அளவுக்கு ஃப்ரெண்ட்ஸோட என்ஜாய் பண்ணியிருக்கேன்.

"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீசை முளைச்ச அந்த வயசுல, ஷேவ் பண்றதுதான் பசங்களோட பெரிய கெத்து. நான் கொஞ்சம் அழகா இருக்கிறதா ஸ்கூல் கேர்ள்ஸ்கிட்ட பேச்சு இருந்ததால, மீசை ட்ரிம்மிங், தாடி ஷேவிங்னு என்னை ஸ்மார்ட்டா எக்ஸ்போஸ் பண்ணிப்பேன். 1983... நான் ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தப்போ, பிரின்சிபால் சார் ரூமுக்கு என்னை வரச்சொல்லி அழைப்பு. போனா, ‘சினிமாவில் ஒரு சின்ன ரோல்... நீ நடிக்கிறியா?’னு பிரின்சிபால் முன்னாடி உட்கார்ந்திருந்த சிலரில் ஒருத்தர் கேட்டார். எங்கயோ என்னைப் பார்த்த அவங்களுக்கு என் லுக் பிடிச்சுப்போய் வந்திருந்தாங்க. ‘அதைப் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதே’னு எச்சில் முழுங்கினவனை, ‘நாங்க பார்த்துக்குறோம்’னு தோள் தட்டிட்டுப் போனாங்க.

அஞ்சு நாள் கழிச்சு, என்னை ஷூட்டிங்குக்கு கூட்டிட்டுப் போக ஹாஸ்டலுக்கே கார் வந்துச்சு. அன்னிக்குனு பார்த்து ஹாஸ்டலில் ஷேவ் பண்ண க்யூ நீளமா நிற்க, வேற வழியில்லாம ஷேவ் பண்ணாம போயிட்டேன். மல்லுவுட்டின் லெஜண்ட் டைரக்டர் பத்மராஜன் சாருக்கு, என்னைவிட என் தாடிதான் ரொம்பப் பிடிச்சிருந்தது!’’ - பதின்பருவ நாட்கள் பற்றிப் பேசும்போது, டீன் குதூகலம் ரகுமான் பேச்சில்.

‘‘ஸ்டூடன்ட் ரவுடியான எனக்கும், டீச்சர் சுஹாசினிக்கும், மிலிட்டரி அதிகாரியான மம்முட்டிக்கும் இடைப்பட்ட கதைதான்... என் முதல் படம் ‘கூடுவிடே’. சொல்லிக் கொடுக்கிறதை கிளிப்பிள்ளை மாதிரி செஞ்ச எனக்கு... ஹோட்டலில் தனி ரூம், விதவித சாப்பாடு, ஜீன்ஸ்னு கிடைச்ச உபசரிப்பு ஜாலியா இருந்தது. விஷயம் தெரிஞ்ச என் பேரன்ட்ஸ், நடிக்கக் கூடாதுனு திட்டினாங்க. என் அங்கிள் அவங்களை சமாதானப்படுத்த, 10 நாட்களில் என் போர்ஷனை முடிச்சிட்டு, பேக் டு ஸ்கூல்! அங்க என் கிரேஸ் எங்கேயோ போயிருந்தது. என் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஃபேன்ஸ் ஆகிட்டாங்க!’’ என்றவர், ப்ளஸ் டூ முடித்ததும் துபாய்க்கு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார்.

‘‘கேரள அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருது எனக்குக் கிடைச்சிருக்கிறதா, போனில் வந்த தகவலை என் பேரன்ட்ஸ் என்கிட்ட சொன்னப்போவும், ‘ஓ அப்படியா!’ என்பதைத் தாண்டி அதில் எனக்கு ஒண்ணும் புரியல. விருதை வாங்க வந்தப்போ, அந்த விழாவில் கேரளத் திரையுலகமே கூடியிருந்தது, படத்துக்கு கிடைச்ச எட்டு தேசிய விருது பற்றிய தகவல் எல்லாம் தெரிஞ்சப்போ, சிலிர்த்துப் போயிட்டேன். கேரளாவிலேயே கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தேன். நடிப்பு ஆஃபர்கள் தொடர்ந்ததால, இரண்டாவது வருஷத்தோட இன்ஜினீயரிங்கை டிஸ்கன்டின்யூ பண்ணிட்டேன். மலையாளத் தின் பெரும்பாலான பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிச்சேன். என் படங்கள் பல 100 நாள் ஹிட்!’’ என்பவர், தமிழ் வரவு பற்றித் தொடர்ந்தார்.

‘‘மலையாளத்தின் ஹிட் இயக்குநர் ஃபாசில் சார், நான், நதியா காம்பினேஷன்ல இயக்கவிருந்த ஒரு படம் டிராப் ஆயிடுச்சு. அதன் தயாரிப்பாளர், இதே காம்பினேஷனில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட ஒரு படத்தை இயக்கச் சொல்லிக் கேட்க, என் முதல் தமிழ்ப் படம்... ‘நிலவே மலரே’. அது ஹிட். நிறைய தமிழ்ப்படங்களில் தொடர்ந்து ரகுமான் ஹீரோ. கே.பாலச்சந்தர் சாரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ மைல்கல்லா அமைஞ்சது. பெண்களையே பாவமா காட்டும் சினிமாவில், ஒரு ஆணைப் பாவமா காட்டும்போது, நடிப்புடன் சேர்ந்து, அந்த கேரக்டரை வெளிப்படுத்துறவரின் தோற்றமும் அந்த ஃபீலை மக்களுக்கு அதிகப் படுத்தணும். அதுக்கு பெஸ்ட் சாய்ஸா கே.பி. சார் என்னைத் தேர்ந்தெடுத்து வார்க்க, அந்தப் படத்துக்குப் பிறகு பெண் ரசிகைகள் எக்கச் சக்கமா கிடைச்சாங்க.

ஷோபனா, ரோகினிகூட சேர்ந்து நான் அதிகப் படங்கள் நடிச்சிருந்தாலும், என்னையும், நதியாவையும் ‘குட் பேர்’னு சொல்வாங்க. ஆனா, நான் மம்மூட்டி - ரகுமான்தான் ‘பெஸ்ட் பேர்’னு சொல்வேன். அந்தளவுக்கு அவர்கூட அண்ணன், தம்பி, ஃப்ரெண்ட்னு 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன்!’’ எனும் ரகுமான், கேரியரில் பீக்கில் இருக்கும்போதே, வாழ்க்கையிலும் பியூட்டிஃபுல் பேர் பிடித்திருக்கிறார்!

"என் தாடி பிடிச்சிருந்தது டைரக்டருக்கு!"

‘‘நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். எனக்கு வாழ்க்கைத்துணைனா, அது இவங்களாதான் இருக்கணும்னு நினைச்சு வேண்டிக்கிட்ட அந்தப் பெண்ணோட பெயர், மெஹ்ருனிசா. பொண்ணு கேட்கப் போனப்போ, ‘சம்மதம். ஆனா, மெஹ்ருனிசாவுக்கு அக்கா இருக்காங்க. அவங்க திருமணத்துக்கு பின்தான், உங்க திருமணம்!’னு சொல்லிட்டாங்க. காத்திருந்தேன். மெஹ்ருனிசாவின் அக்காவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் திருமணம் முடிந்ததும், தொடர்ந்து எங்களுக்கும் நடந்தது! பெற்றோர் வெளிநாட்டில், நான் சினிமா, ஷூட்டிங், ஹோட்டலில் இருந்த வாழ்க்கைக்கு, அழகான வண்ணம் பூசி... குடும்பம், குழந்தைகள்னு என் வாழ்வை முழுமையாக்கினாங்க மெஹ்ருனிசா!’’ எனும்போது, அன்பில் லயிக்கிறார் ரகுமான்.

‘‘தமிழ், மலையாளம், தெலுங்குனு இடைவிடாமல் நடிச்ச எனக்கு, ஒரு பிரேக்குக்கு அப்புறம், 1999-ல் வெளியான ‘சங்கமம்’ பெரிய ரீ-என்ட்ரி. படத்துக்கு இசை, சகலை ஏ.ஆர்.ரஹ்மான். ரெண்டு பேரும் சேர்ந்து அடித்த ஹிட்டில், ரொம்பவே சந்தோஷம். தமிழில் மீண்டும் ஒரு பிரேக்... அப்புறம், ‘36 வயதினிலே’ ரெண்டாவது ரீ-என்ட்ரி. இப்போ ‘குற்றமும் தண்டனையும்’, ‘துருவங்கள் 16’ உட்பட நான்கு படங்களில் நடிச்சிட்டு இருக்கேன்!’’ - தலையை ஸ்டைலாகச் சிலுப்பியவர்,

‘‘எப்படி இவ்ளோ இளமையா இருக்கீங்கனு பலரும் எங்கிட்ட கேட்பாங்க. தினமும் சீரான டயட், தவறாத உடற்பயிற்சி... ரெண்டைத் தவிர சிறப்புக் காரணம் ஏதாவது சொல்வேன்னு எதிர்பார்த்தா... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. கஷ்டம், சந்தோஷம் ரெண்டையும் ஒரே மனநிலையில் எதிர்கொள்வேன். மனைவியும், என் பொண்ணுங்க ருஸ்டா, அலிசா மனசளவிலும் என்னை ஆரோக்கியமா வெச்சிருக்காங்க. ரகுமான் நல்லா இருக்கான்!’’

- எல்லோருக்கும் பிடிக்கும் அவர் புன்னகை யில் இன்னும் அழகாகிறார், ரகுமான்!

 கு.ஆனந்தராஜ்   சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism