Published:Updated:

ஆட்டோகிராஃப்!

ஆட்டோகிராஃப்!

ஆட்டோகிராஃப்!

ஆட்டோகிராஃப்!

Published:Updated:

ங்கள் மனங்களில் பதியமாய் படர்ந்து கிடக்கும் ஞாபகச் சிறகுகளை விரிக்க, சூப்பர் சான்ஸ் கொடுக்கும் பகுதி... ‘ஆட்டோகிராஃப்’!

பால்ய காலம், பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், அதற்கடுத்தடுத்த பருவங்கள் என்று வயது ஏற ஏற, கடந்த கால நினைவுகள் எப்போதுமே நம் மனதை சுகமாக வருடிவிடும்தானே! அதையெல்லாம் அவ்வப்போது நினைத்துப் பார்த்து, `ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே' என்று உங்களுக்குள் மட்டுமே பாடிக்கொண்டிருக்காமல்... அருமையான, அழகான, சுவாரஸ்யமான அந்த நினைவுகளை மற்றவர்களுக்கும் கடத்துங்களேன்.

அருமையான பதிவு ஒவ்வொன்றுக்கும்  ரூ.250 பரிசு காத்திருக்கிறது வாசகிகளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கே, உங்களுக்கு வழிகாட்டும் வகையில் நம்முடைய நிருபர்களின் சில நினைவுகள்...

குங்குலி மங்குலி பேய்!

ஆட்டோகிராஃப்!

சிறுவயதில் இரண்டு பேய்களுக்குப் பயம் எனக்கு. ஒன்று குங்குலி, மற்றொன்று மங்குலி. குங்குலி கறுப்பாகவும், மங்குலி மஞ்சளாகவும் இருக்கும் என்பதும், இரண்டுக்கும் திருஷ்டிப் பூசணியின் முகவெட்டு என்பதும் என் கற்பனை நம்பிக்கை. பள்ளிக்குக் கிளம்பும்போது தலையை சரியாகப் பின்னவில்லை எனில், தூணுக்குப் பின் ஒளிந்திருந்து கிள்ளிய என் சித்தப்பாதான் `குங்குலி மங்குலி' என்று வெகுகாலம் கழித்துதான் தெரிந்தது. ஒரே ஆள் எப்படி இரண்டு பேயாக? குங்குலி தலையில் குட்டும், மங்குலி நறுக்கெனக் கிள்ளும் என்று நம்ப வைத்திருந்தார் சித்தப்பா. சித்தப்பாவுக்கு மேல் என்னை பயமுறுத்துவாள், அக்கா. அந்தக் கோடை விடுமுறைக்கு பாட்டி கிராமத்துக்குப் போயிருந்தபோது, பிசாசு, காட்டேரி, முனி என்று விதவிதமாக ஸ்கிரிப்ட் சொல்லி, என் பேய் பயத்தை பற்றி எரிய வைத்தாள். அன்று அவளும் நானும் வரப்பில் சென்றுகொண்டிருந்தோம். திடீரென ‘ஹா ஹா ஹா’ என்று பேய்ச்சிரிப்புச் சத்தம். எனக்கு அடிவயிற்றைக் கிள்ள, என் அக்காவின் கரம் பற்றத் திரும்பினால், தலையை விரித்துப்போட்டு, முட்டைக் கண்களை உருட்டி, நாக்கைத் துருத்தி, அதே ‘ஹா ஹா ஹா’ ஒலித்தாள். அடுத்த நொடி, கண்மண் தெரியாமல் களத்துமேட்டு முள்வேலியில் விழுந்து எழுந்து வீட்டை நோக்கி ஓடினேன். என் அழுகைச் சத்தம் கேட்டு கொல்லையில் இருந்த தாத்தாவும் பாட்டியும் வந்து என்னைத் தூக்கிவிட்ட கையோடு, அவளை முதுகில் சாத்தின சாத்துதான், என் பேய்க்கதறலுக்கு ஒரே ஆறுதல்.

அதன் பின் நானும் அக்காவும் வீட்டில் தனித்திருந்தால், பூஜை அறையில் இருக்கும் கந்தசஷ்டி கவசத்தை அவளிடம் காட்டி, ‘இதத் தொடு..!’ என்று கன்ஃபர்ம் செய்துகொள்வேன்!

- இந்து

ஆட்டுக்குட்டி... நீச்சல் போட்டி!

ஆட்டோகிராஃப்!

கிராமத்தில் எங்கள் வீட்டின் அருகிலுள்ள ஏரியில், ஐப்பசி மாத அசரடிக்கும் அடைமழைக்கு கழுங்கு விழும் (ஏரியின் தடுப்பணையை மீறி தண்ணீர் கொட்டுவது). அந்தக் கழுங்கில் வழிந்தோடும் நீரில் நேரெதிராக மீன்கள் ஏறிச் செல்லும். நாங்கள் ஏரிக்கரையின் மேலே ஏறி ஆட்டுக்குட்டியை ஏரியின் ஆழமானப் பகுதியில் தூக்கிப்போட்டு, நாங்களும் குதிப்போம். எதற்கு? எங்களுக்கும் ஆட்டுக்கும் நீச்சல் போட்டி! நம்ப மாட்டீர்கள்... நாங்கள் ஒருநாள்கூட ஆட்டுக்குட்டியை முந்தியதில்லை.

ஆரம்பத்தில் நீச்சல் கற்றுக்கொள்ள, சுரைக்குடுவைதான் ‘லைஃப் ஜாக்கெட்’. என் பெரியப்பா என்னை முதன் முதலில் இடுப்பில் சுரைக்காய் குடுவையைக்கட்டி ஏரியின் ஆழமான பகுதியில் தூக்கிப் போட்டபோது, ஐந்து, ஆறு முறை தண்ணீரை விழுங்கியிருப்பேன். ஆனால், மரண பீதியில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கரையை வந்தடைந்தேன். இப்படித்தான் அனைவரும் கற்றுக்கொண்டோம் நீச்சல்!

இன்று ஸ்விம்மிங் பூலில் த்ரீ ஃபீட்டில் கிக் செய்யும் குழந்தைகளை, என் ஆட்டுக்குட்டி நினைவுகளுடன் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்!

- ரம்யா

டென்ட்டு கொட்டாய்!

ஆட்டோகிராஃப்!

ந்தக் காலத்தில் ஒவ்வொரு சினிமாவையும் திருவிழாபோல ரசித்துக் கொண்டாட வைத்தன, ‘டூரிங் டாக்கீஸ்’கள்! சுற்றியிருக்கும் அத்தனை கிராமங்களுக்கும், அதன் அருகிலுள்ள நகரத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருக்கும். அதை ‘டென்ட்டு கொட்டாய்’ என்போம். ‘தரை டிக்கெட்டின் விலை 40 பைசா. தரையில் கொட்டிக் கிடக்கும் ஆத்து மணலைக் குவியலாகக் குவித்து, அதன் மேல் அமர்ந்துகொண்டு படம் பார்ப்போம். தரை டிக்கெட்டுக்குப் பின்பக்கமாக இருப்பது, ‘பெஞ்ச் டிக்கெட்டு’. கட்டணம் 3 ரூபாய். கொட்டகைக்கு சுவர், சாக்குத் திரைதான். அதன் வழி வரும் ஜில்லென்ற காற்று! 

சாமிப்பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்தால், படம் ஆரம்பிக்கப் போகிறது என்று அர்த்தம்.

இயக்குநர் ராமநாராயணன் படங்கள் என்றால், மஞ்சள் பாவாடை, சட்டையோடுதான் படம் பார்க்கவே போவோம். அம்மன் பாடல்கள் வந்துவிட்டால் போதும்... அக்கா முதல் அப்பத்தா வரை எல்லோருக்கும் ‘சாமி’ வந்துவிடும். தலையை விரித்துக் கொண்டு ஆடுவோரையெல்லாம் சாந்தமாக்குவதற்கு கற்பூரத் தட்டோடு காத்துக்கிடப்பார்கள் பெண்கள் சிலர்.

இடைவேளையில் சூடாக வரும் கைமுறுக்கையும் கடலை பர்ஃபியையும் கொறிப்பதற்கே ‘கொட்டாய்’க்குப் போகலாம். அவற்றின் சுவைக்கு இணையான பர்ஃபி, முறுக்கு இப்போதெல்லாம் எங்கே கிடைக்கிறது?

இப்போது சென்னை மால்களின் நவீன தியேட்டர்களுக்குள் போகும்போது, யாராவது கைமுறுக்கோடு வந்து என் இடைவேளையை நிரப்புவார்களா என்று ஏங்குகிறது மனசு!
 

- நிரஞ்சா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism