Published:Updated:

பிசினஸ் குயின்!

சுயதொழில் 18 சாதனைப் பெண்கள்

பிசினஸ் குயின்!

சுயதொழில் 18 சாதனைப் பெண்கள்

Published:Updated:

ன்பவள்ளி... திருச்சி, தென்னூர் உழவர் சந்தை அருகே இருக்கும் ‘ஜெயம்  ஸ்நாக்ஸ்' செட்டிநாடு

பிசினஸ் குயின்!

ஹோம்ஸ் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் இவர். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், இன்று பலருக்கு வேலை தரும் முதலாளி. மாதம் 6 லட்சம் வரை சம்பாதிக்கும் இவர், ‘மகளிர் தொழில் முனைவோர் சங்கம்' எனும் `வீட்' பெண்கள் அமைப்பின் (Women Entrepreneurs Association of  Tamil Nadu) திருச்சி மாவட்டத் தலைவி. சமீபத்தில் இலங்கை சென்று தொழிற்பாடம் எடுத்து வந்திருக்கும் தன்னம்பிக்கைப் பெண். இப்படி பல ஆச்சர்யங்களை அடுக்கும் இன்பவள்ளியை, திருச்சியில் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிசினஸ் குயின்!

‘‘நான் பொறந்தது தேவகோட்டை. என் வீட்டுக்காரருக்கு சொந்த ஊரு பொன்னமரா வதி பக்கம். அவருக்குத் தொழிலில் நஷ்ட மானதால், பிழைப்புக்காக திருச்சி வந்தோம். அவர் வேலைக்குப் போக, ‘ஜெயம்’ மகளிர் சுய

உதவிக்குழுவில் நான் உறுப்பினரா சேர்ந்தேன். மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தொழில் வெற்றிக்காக அரசு சார்பில் சனிக்கிழமை தோறும் ஏற்பாடு செய்து தரும் ஸ்டாலில், எங்க செட்டிநாட்டுப் பக்க ஸ்பெஷலான முறுக்கு, தட்டை, தேன்குழல், ரிப்பன் பக்கோடா, கைமுறுக்கு, சீடை, அதிரசம்னு செஞ்சு விற்க முடிவெடுத்தேன். திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல்துறை இயக்குநர் மணிமேகலை மேடம், தொழில்கடன் வாங்க வழிகாட்டினாங்க.

அப்போ பசங்க, வீட்டுக்காரர் எல்லோரும் வேலைக்குப் போயிட்டிருந்தாங்க. மாவு அரைக்கிறதில் இருந்து மார்க்கெட்டிங் வரை நான் தனியாதான் பண்ணணும். ஏதாச்சும் உதவி கேட்டா, ‘உனக்கு வேற வேலயில்ல’னு சொல்லிடுவாங்க. வைராக்கியம் கூடும். காலையில 9 மணிக்கு ஸ்டாலுக்குப் போகணும். ராத்திரி முழுக்க பட்சணங்கள் செஞ்சுட்டு, கொஞ்சம் நேரம் கண்ணசந்துட்டு, எல்லாத்தையும் பெரிய பெரிய பைகளில் அடுக்கி தூக்கிட்டு பஸ்ல ஏறினா, இடத்தை அடைக்குதுனு பலமுறை கண்டக்டர்கள் இறக்கிவிட்டுனு... நிறைய கஷ்டம். வியாபாரம் ஸ்திரம் ஆனதும் ‘ஜெயம் ஸ்நாக்ஸ்’னு கடையை ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல, என் பிள்ளைகளும் கணவரும் அவங்களோட வேலையை விட்டுட்டு, என் தொழிலுக்கு கைகொடுக்க வந்துட்டாங்க. இப்போ கேட்டரிங் ஆர்டர்களும் எடுக்க ஆரம்பிச்சிருக்கேன்.

40 வயசு வரை வீட்டுப்பறவையா இருந்தவ, இப்போ மாசம் 6 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன். மணிமேகலை மேடம் மகளிர் குழுக்களை ஒருங்கிணைச்சு வழி நடத்துகின்ற ‘வீட்’ அமைப்புக்கு திருச்சி மாவட்டத் தலைவியா வளர்ந்து நிக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்னால இலங்கை அரசு சார்பா, அங்கயிருக்கிற பெண்களுக்கு ஸ்நாக்ஸ் தயாரிப்புகள் குறித்து பயிற்சி கொடுக்கக் கூப்பிட்டிருந்தாங்க. பஸ்ல கண்டக்டர் அண்ணன்கள் இறக்கிவிட்ட பொண்ணு, ஃப்ளைட்ல போயிட்டு வந்தேன். ஒன்பதாவது படிச்சவ, இன்னிக்கு உங்ககிட்ட எல்லாம் பேசுற அளவுக்கு வந்திருக்கேன்னா... உங்களால எல்லாம் இன்னும் என்னென்னவோ முடியும். முயற்சிய நீங்கதான் எடுக்கணும்!’’

 - ‘ஜெயம் ஸ்நாக்ஸ்’-ல் ஒரு பிளேட் நிறைய உற்சாகம் சாப்பிட்ட நிறைவு நமக்கு!

சி.ஆனந்தகுமார்   படம்:என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism