Published:Updated:

எழுதப் பிறந்தவள்!

இலக்கியம் 18 சாதனைப் பெண்கள்

மயந்தி... சமூக அவலங்களை துணிச்சலுடன் சொல்லும் பேனாக்காரர்களில் முக்கியமானவர். சிறுகதைகள், கவிதைகள் என இதுவரை 8 புத்தகங்கள் எழுதியுள்ள இவரின் எழுத்து, தனித்துவம்! அதிலும் குறிப்பாக,

எழுதப் பிறந்தவள்!

அவர் எழுதிய `அக்கக்கா குருவிகள்’, `நிழலிரவு' போன்ற புத்தகங்கள் பலதரப்பினர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவை. எழுத்து, ஆவணப்படம், திரைப்படம் என பல தளங்களில் செயல்பட்டுவரும் அவரை ஒரு அழகிய மாலை வேளையில், சென்னை, கே.கே.நகர், சிவன் பூங்காவில் சந்தித்தோம். 

எழுதப் பிறந்தவள்!

‘‘திருநெல்வேலியில் பிறந்தவள் நான். சினிமா பார்ப்பது, ஜனரஞ்சகப் பத்திரிகைகளை படிப்பதை எல்லாம் பெரிய பாவமாக நினைக்கும் ஒரு  சமூகத்தில் இருந்து வந்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போது கவிதைகள் எழுதினேன். என் அம்மாச்சியின் இறப்பும் அதன்  மரணவாசமும் என்னுள் பதிந்தது. 13 வயதில் மரணம் சார்ந்த கனவுகள் அடிக்கடி வரும். அன்புக்காக ஏங்கிய குழந்தைப் பருவம், எனது தனிமை, பாரம், வலி என என் மனப்போராட்டங்களுக்கு எல்லாம் எழுத்தை வடிகாலாக்கினேன்.

எழுத்தாளராக நான் அறியப்பட்ட வேளை யில், எழுத்துலகில் உள்ள அரசியல் என்னை பாதித்தது. வெகுஜன தளத்தில் எழுதுகிறேன் என்பதால் பல விமர்சனங்கள் வரும்.  இருந்தாலும், என் எழுத்தில் நான் சமரசம் செய்யவில்லை... மேலும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும்  வன்முறைகளைச் சந்தித்தேன். வலது கைவிரல் ஒடிய தாக்கப்பட்ட பின்பும், ஒவ்வொரு முறை வாழ்க்கை என்னைக் கீழறிக்கிவிட்டபோதும், சுயம்புவாக எழுந்து வந்தேன்.

என்னைப் பொறுத்தவரை குடும்பம் என்பது ஒரு மாயை. உலகமே ஒரு தருணத்தில் என்னை குடும்பமாய் சுவீகரித்துக்கொண்டது. நான் பணம் சம்பாதிக்க எழுதவில்லை.தமிழ்ச் சூழலில் எழுத்தால் பணம் சம்பாதிக்க முடியாது. எனவே, பொருளாதாரப் பிடிப்புக்கு பண்பலை, தொலைக்காட்சிப் பணிகளில் என்னை நான் இருத்திக்கொண்டபோது, நிறைய மனிதர்களைச் சந்தித்தேன். பலவித எண்ணங்கள், கருத்துகள், கோபங்கள், முடக்கங்கள் என இயங்கிக்கொண்டிருக்கும் சக மனிதர்களைச் சந்தித்து வருகிறேன். என் வாழ்வின் ருசியே அதுதான்! ஆவணப்படம் இயக்குவது, என் இன்னொரு பரிமாணம். திரைப்படங்களுக்கு சப்டைட்டில் வேலை செய்துகொடுத்திருப்பதுடன், திரைப் பாடல்களும் எழுதி வருகிறேன். அம்பையும், பிரபஞ்சனும் என் மனம்கவர் எழுத்தாளர்கள்.

எழுத்தில் ஆண், பெண் பேதமில்லை. ஆனால், பெண் படைப்பாளிகளின் எழுத்துக்கள் சக ஆண் படைப்பாளிகளால் கொச்சையாகப் பேசப்படுகிறது. அது படிப்ப வரின் புத்தியில் உள்ள கோணல் என்பதால், பொருட்படுத்துவதில்லை. மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும், ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். எழுத்துப் பணியில் இடையூறுகளைக் கடந்து வந்த போதும், அந்த முடிவைத்தான் என் வாழ்வின் முக்கிய முடிவாக நினைக்கிறேன். எழுத்தே என் அடையாளம். சக மனிதர்களை நேசியுங்கள்... இதுதான் ‘அவள்’ வாசகிகளுக்கு என் ஒரே கோரிக்கை!’’

- முற்றுப்புள்ளி புன்னகையுடன் முடிக்கிறார், தமயந்தி!

சா.வடிவரசு படம்: ஜெ.வேங்கடராஜ்

அடுத்த கட்டுரைக்கு