Published:Updated:

துணிச்சல் தாரகை!

Vikatan Correspondent

நீதித்துறை 18 சாதனைப் பெண்கள்

ஆர்.பானுமதி... தற்போதைக்கு உச்ச நீதிமன்றத்திலிருக்கும் ஒரே ஒரு பெண் நீதிபதி. உச்ச நீதிமன்ற

துணிச்சல் தாரகை!

நீதிபதியான முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமைக்கும் உரியவர். சட்டத்துறையில் 34 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும், பேசுபொருளாகும் அளவுக்கு அதிரடியானது, சமூக அக்கறையில் எழுதப்பட்டது!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பிறந்தவர். சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் அரூர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 33 வயதில் நேரடியாக மாவட்ட நீதிபதியானவர்.

துணிச்சல் தாரகை!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பிரேமானந்தா சாமியார் வழக்கில், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தந்து, அதைத் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை நீதிபதியாக இருந்தபோது இவர் வழங்கிய தீர்ப்பு, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கோயம்புத்தூர் மாவட்டம், சின்னாம்பதி கிராமத்தில் சிறப்பு அதிரடிப் படையினரின் அத்துமீறலை விசாரிக்கும் ஒரு நபர் ஆணையராக (மாவட்ட நீதிபதி) செயல்பட்டு, நேர்மையான அறிக்கை மூலம் பழங்குடி மக்களுக்கு நியாயம் சேர்த்தவர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை; உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பான வழக்கில் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்; சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்று நடத்துவது சரியே; சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான அதிரடிப்படையினருக்கு பணி மூப்பு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து, அரசுக்குக் கண்டனம் என்று பல வழக்குகளிலும் அதிரடி தீர்ப்பை எழுதியது, துணிச்சல் எனும் மைகொண்ட இவருடைய பேனா.

2013-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகச் சென்றவர், அடுத்த ஆண்டே உச்ச நீதிமன்ற நீதிபதியாகிவிட்டார். விபத்தில் சிக்கி இறந்துபோகும் இல்லத்தரசிகளுக்கு இழப்பீடு தருவதில், `வீட்டில் சும்மா இருப்பவர்தானே' என்கிற வகையில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கையாள்வதற்கு எதிராக, சமீபத்தில் இவர் வழங்கிய தீர்ப்பு... பெண்குல பெருமைபேசும் தீர்ப்பு!

சட்ட புத்தகங்கள் உட்பட, பல புத்தகங்களை எழுதியிருக்கும் பானுமதி, `என் தாயார் லட்சுமிதேவி, மாநில நல்லாசிரியர் விருதுபெற்ற சகோதரி புவனேஸ்வரி மற்றும் கணவர் கணேசன் இந்த மூவரும்தான் என்னுடைய நேர்மைக்குக் காரணம்' என்று எப்போதும் பெருமையோடு குறிப்பிடுவார்.

`எந்தப் பெண்ணுக்கும் தைரியம் தரப்படத் தேவையில்லை. அது அவர்களுக்குள் நிரம்ப இருக்கிறது. தூண்டப்படுவதே தேவையாகிறது. உங்களுக்குள் இருக்கும் தைரியத்தை வெளிக்கொண்டு வாருங்கள்... அதன் துணை கொண்டு நினைக்கும் எல்லையை எட்டலாம்!’ என்பதுதான் பானுமதியின் தாரக மந்திரம்!

 என்.ரமேஷ், வழக்கறிஞர்