Published:Updated:

வயசு 121... மனசு 31

வியப்பில் ஆழ்த்தும் லூய்சி

வயசு 121... மனசு 31

வியப்பில் ஆழ்த்தும் லூய்சி

Published:Updated:

‘‘நல்லா இருக்கீங்களா பாட்டி?!’’ என்றதும், இதற்கு முன் அறிமுகமில்லாத நம் முகத்தை யோசனையுடன்

வயசு 121... மனசு 31

பார்த்தவாறே தலையாட்டுகிறார் 121 வயது லூய்சி பாட்டி. சென்சுரி அடித்த பின்னும் நடப்பது, துவைப்பது, வீடு கூட்டுவது என தளராத அவரின் சுறுசுறுப்பு, வியப்போ வியப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயசு 121... மனசு 31

சென்னை, படப்பை அருகே இருக்கும் ஆரம்பாக்கம் கிராமத்தில் தன் மகனுடன் வசிக்கும் பாட்டியுடன் ஒரு சந்திப்பு...

பூர்வீகம் கேரளா என்பதால், மலையாளத்தில்தான் பேசினார் பாட்டி. அதை மொழிபெயர்த்தனர் அவருடைய உறவுகள்.

‘‘எனக்கு எட்டு புள்ளைங்க. முதல்ல பிறந்த ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்களும் கொஞ்ச மாசத்துலயே இறந்துட்டாங்க. பிறகு, ரசலம்மா, சுமதி, பாலசந்தர், பிரேமா, சங்கரன், ராதானு ஆறு குழந்தைங்க (நான்கு மகள், இரண்டு மகன்). வீடு, நெலம், விவசாயம், கண்ணு நிறைய புள்ளைங்கனு நானும் வீட்டுக்காரரும் நல்லா இருந்தோம். திடீர்னு ஒருநாள் எங்கள தவிக்கவிட்டு போயி சேர்ந்துட்டாரு. ஆனாலும், புள்ளைங்க எல்லாரையும் நல்லபடியா கரைசேர்த்துட்டேன்.

என் பொண்ணு பிரேமா, எனக்கு முன்னாடியே போய் சேர்ந்துட்டா. அவகூடதான் நான் இருந்தேன். அவளுக்கு அப்புறம் என் மகன் என்னைக் கூட்டிட்டு வந்து ஒண்ணரை வருஷம் ஆகுது. இந்த ஊரு பேரு சென்னைங்கிறதைத் தவிர எனக்கு இங்க வேறெதுவும் தெரியாது!’’ என்று சுருக்கங்கள் நெளியச் சிரிக்கும் பாட்டிக்கு கண்ணும், காதும் இன்னும் கூர்மையாகவே இருக்கின்றன.

‘‘கேரளாவுல தமிழக எல்லையில இருக்கிற பாரசாலாதான் அம்மா பிறந்த ஊர். கல்யாணத்துக்கு அப்புறம் அப்பா ஜோபுவோட கிராமமான ப்ராமுட்கடாவில் இருந்தோம். ரெண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் இயற்கை முறை விவசாயம் பண்ணிதான் எங்களை வளர்த்தாங்க அப்பாவும், அம்மாவும். அப்பாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போக, மருத்துவச் செலவுக்காக நிலத்தை வித்துட்டோம். அப்படியும் காப்பாத்த முடியாம, எனக்கு எட்டு வயசானப்போ அப்பா இறந்துட்டார்!’’ என்று சொல்லும் மகன் சங்கரன், ஒரு தாய்க்கோழியாக லூய்சி தன் குஞ்சுகளைக் காத்து வளர்த்தது பற்றிச் சொன்னபோது, பெண்மையின் வலிமை போற்ற வைத்தது.

‘‘எஜமானியா விவசாயம் பார்த்த எங்கம்மா, எங்களைக் காப்பாத்தறதுக்காக பக்கத்துக் காட்டுல கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. அதோடவும் நிறுத்திக்க மாட்டாங்க. எவ்வளவு உழைக்க முடியுமோ உழைச்சுக் கொட்டுவாங்க. எங்க கிராமத்துல இருந்து தொலைதூரத்துல இருக்கற கடலோர கிராமத்துக்கு நடந்தே போய் மீன் வாங்கி, தலையில சுமந்து ஊருக்கு கொண்டு வந்து விப்பாங்க. மிஞ்சுற மீனையும் உப்பு தடவி கருவாடா செஞ்சு விப்பாங்க. பக்கத்துல எங்க கூலி வேலைனு கூப்பிட்டாலும், பல கிலோ மீட்டர் நடந்தே போயிட்டு வருவாங்க. ஒரே நாள்ல அஞ்சு விவசாய நிலங்களில் வேலை பார்த்துட்டு வருவாங்க. எப்பத் தூங்குவாங்கன்னே தெரியாது. எங்களையெல்லாம் கரையேற்றும் கடமையில, அவங்க வயசு கரைஞ்சுக்கிட்டே இருந்தது. 90 வயசு வரைக்கும் கூலி வேலைக்குப் போறதை நிறுத்தல!’’ என்றபோது, சங்கரனின் கண்களில் நீர்த்துளிகள்.

சங்கரன் மனைவி மர்சலா, தன் மாமியார் பற்றிப் பேசும்போது பூரிப்பாகிறார்... ‘‘இப்பவும் அத்தைக்கு அந்த வைராக்கியம் குறையல. அவங்களை யாரும் கையைப் பிடிச்சு கூட்டிட்டுப் போனா பிடிக்காது, குச்சியைப் பிடிச்சு தனியாதான் நடப்பாங்க. குளிக்கத் தண்ணீர் காயவெச்சு ஊத்திக்கிறது, துணி துவைக்கிறது, வீடு கூட்டுறதுனு எல்லா வேலையும் அவங்களேதான் செஞ்சுக்குவாங்க. தினமும் தவறாம தோட்டத்துல கொஞ்ச நேரம் தனியா வாக்கிங்கும் போவாங்க. இதுவரைக்கும் அவங்க ஹாஸ்பிடல் போய், மருந்து, மாத்திரை சாப்பிட்டு நான் பார்த்ததில்ல. மழை, வெயில்னு எப்பயாச்சும் கொஞ்சம் உடம்பு சரியில்லாமப் போனாலும், ரெண்டு நாள்ல தானா தெளிஞ்சிடுவாங்க. ‘எல்லாம் நான் சாப்பிட்ட சாப்பாடு அப்படி. ஆனா, என் பேரன் பேத்திங்கதான் பூச்சிக்கொல்லியைச் சாப்பிடுறாங்க!’னு வருந்தி, அவங்க செஞ்ச இயற்கை விவசாயத்தைப் பத்திப் பெருமையா பேசுவாங்க. 121 வயசானாலும், 31 வயசுபோலதான் சுதந்திரமா இயங்க நினைப்பாங்க. அத்தை எங்க குடும்பத்தோட பெருமை!’’ என்றார் முகம் பரவிய மகிழ்ச்சியுடன்.

வயசு 121... மனசு 31

‘‘அம்மாவுக்கு நாலு பொண்ணு, ரெண்டு பையன், 36 பேரன், பேத்தி, 26 கொள்ளு பேரன், பேத்தி, 5 எள்ளு பேரன், பேத்தி இருக்காங்க. அஞ்சு தலைமுறை கண்ட மகராசி அவங்க. அம்மாவோட அம்மா ஏவாளும் சதம் அடிச்சு, 117 வயசில்தான் இறந்தாங்க. ஆனா, அம்மா அவங்களோட சாதனையையும் மிஞ்சிட்டாங்க. ஒண்ணாவதோட அம்மாவோட படிப்பு நின்னுருச்சு. அந்தப் பள்ளிச் சான்றிதழை வெச்சுதான் எங்கம்மாவோட வயசையே நாங்க கண்டுபிடிச்சோம். 1895-ல் பிறந்திருக்காங்க. அதை பத்திரமா வெச்சிருக்கோம். உலகத்துலயே வயதான பெண்மணி எங்கம்மாதான்னு நிறையப் பேரு சொல்றாங்க. அதனால, கின்னஸ் புத்தகத்துல அம்மாவோட பெயரை இடம்பெற வைக்க முயற்சி செய்துட்டு இருக்கோம்!’’ என்று சொல்லும் இந்த வாரிசுகளுக்கே வயது 90, 80, 70 ப்ள்ஸ்!

‘‘மூத்த மகன் பாலச்சந்தர் கோயம்புத்தூர்ல இருக்கான். மத்த புள்ளைங்க எல்லாம் கேரளாவுல இருக்காங்க. எல்லாரும் ஒண்ணா ஒரே இடத்துல சேர்ந்து இருக்குற நாள்தான், கின்னஸை எல்லாம்விட எனக்குப் பெரிய சந்தோஷம்!’’

- தோட்டத்தில் தன் குச்சியைப் பிடித்துக்கொண்டு ‘வாக்’ சென்றவாறு பாட்டி சொன்னபோது, ஒருமுறை அழுந்த வீசி ஆசீர்வதிக்கிறது காற்று! 

கு.ஆனந்தராஜ்  படங்கள்: ரா.வருண் பிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism