தீபாவளி என்றாலே கண்டிப்பாக அதில் அதிரசம் இடம் பெற்றிருக்கும்! ஆனால், எத்தனை முயற்சித்தாலும்,

சரியான பதத்தில் அதிரசத்தை தயாரிப்பதுதான் பலருக்கும் மிகப்பெரிய சவால். கொஞ்சம் கடினமானதுதான். ஆனால், பழகிவிட்டால் எளிதாக கைவரக்கூடியதுதான் அதிரசம். அதன் செய்முறையை உங்களுக்காக ஸ்டெப் பை ஸ்டெப்பாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்.

தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், கறுப்பு எள் - தலா ஒரு

டீஸ்பூன், எண்ணெய்/நெய் - பொரிக்கத் தேவையான அளவு, தண்ணீர் - வெல்லம் மூழ்கும் அளவு.
செய்முறை:
1: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
2: தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் பச்சரிசியைப் போட்டு நிழலில் கால் மணி நேரம் உலர்த்தவும்.

3: லேசாக ஈரம் இருக்கும்போதே மிக்ஸியில் பவுடராக்கி சலிக்கவும்.
4: மாவில் எள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
5: சுக்குத்தூள் சேர்க்கவும்.
6: வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து லேசாக சூடாக்கி, வடிகட்டி... மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.

7: பாகு நுரைத்து வரும்.
8: தண்ணீரில் சிறிது பாகை விட்டுப் பார்த்தால் அடியில் கெட்டியாக தங்கி, கையில் எடுக்க வர வேண்டும். அடுப்பை அணைத்து விடவும்
9,9a: சலித்த பச்சரிசி மாவை பாகோடு சேர்த்து தளர்வாக கிளற வேண்டும். இதனை மூடி போட்டு 6 மணி நேரம் தனியாக வைக்கவும்.

10: பிறகு எடுத்து உருட்டினால் பந்து போல வர வேண்டும். இதுதான் சரியான பதம்.
11,11a: அடிபாகம் தட்டையாக உள்ள ஒரு கப்பை எடுத்து, அதை கவிழ்த்து, அதன் மீது பிளாஸ்டிக் ஷீட்/வாழை இலை வைத்து எண்ணெய் தடவவும். மாவை எலுமிச்சை அளவுக்கு உருண்டை எடுத்து சற்று கனமான தட்டை போல தட்டவும்.

12,13,14: எண்ணெய் காய்ந்த உடன் அடுப்பை `சிம்’மில் வைத்துவிட்டு அதிரசத்தை போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இரு கரண்டியால் அதிரசத்தை அழுத்தி அதிகப்படியான எண்ணெய் வழிந்த பிறகு பரிமாறவும்.
தொகுப்பு: ம.பிரியதர்ஷினி படங்கள்: ர.சதானந்த்
அதிரச டிப்ஸ்..!
• மாவு பிசையும்போது கொட்டை நீக்கிய பேரீச்சையை சேர்க்கலாம்.
• கண்டிப்பாக சுக்குத்தூள் சேர்க்க வேண்டும்.
• அரிசி மாவை அளக்கக் கூடாது. அரிசியை மட்டும்தான் அளக்க வேண்டும்.
• புதிதாக செய்பவர்கள் ஒவ்வொரு அதிரசமாக வேகவைத்து எடுக்கவும். இல்லையென்றால் அதிரசம் உடைந்துவிடும்.