Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

இல்லறம் செழிக்க... தொல்லைகள் நீங்க...ஒளியேற்றும் இரண்டு தலங்கள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

இல்லறம் செழிக்க... தொல்லைகள் நீங்க...ஒளியேற்றும் இரண்டு தலங்கள்!

Published:Updated:

க்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை முன்வைத்து, அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சரணடையும் திருத்தலங்களைப் பற்றிய `சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்’ தொடரில் இந்தமுறை, தீப ஒளித் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இறைவன் ஒளியால் அருள் நல்கிய இரண்டு திருத்தலங்கள் பற்றிக் காண்போம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேதாரண்யேஸ்வரர்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

ன்னெடுங்காலம் முன், வேதாரண்யத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் சிவனின் ஆலயத்தில் அர்த்த ஜாம பூஜைகள் முடிவுற்று, கருவறை மூடப்பட்டிருந்தது. அப்போது, மூலவரான வேதாரண்யேஸ்வரர் அருகில் ஏற்றப்பட்டிருந்த திருவிளக்கு அணைவது போல் இருந்தது. அத்தருணம், விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வந்த எலியின் மூக்கு பட்டு, விளக்கொளி பிரகாசித்தது. அவ்வாறு விளக்கைத் தூண்ட உதவிய எலி, மறுஜென்மத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. அப்படியெனில், வேதாரண்யேஸ்வரரை, தீபங்களின் திருநாளான தீபாவளி அன்று வந்து அகல் விளக்கேற்றி வழிபட்டால், எத்தனை பாக்கியம் கிட்டும் என்பதை சொல்லத் தேவையில்லைதானே!

திருவாரூர் தேரழகு, திருவரங்கம் மதில் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு என்பது போல், வேதாரண்ய திருத்தலத்தை `விளக்கழகு’ என வர்ணிக்கின்றனர். இங்கு தீபாவளி, கார்த்திகை, தை அமாவசை ஆகிய திருநாட்களில் மாடம் முழுவதும் ஏற்றப்படும் விளக்குகளால் கோயில் ஜொலிக்கும். மேலும் இத்திருத்தலத்தில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் வந்து இறைவனை வழிபட்டதாகக் கூறுகின்றனர்.

பலன்கள்: இங்கு காட்சி தரும் ஸ்ரீஞான துர்க்கையை வழிபட்டால்... திருமணத் தடை, குழந்தையின்மை, பில்லி - சூன்யம், கிரகக் கோளாறுகள் விலகும்.ஸ்ரீராமரின் வேண்டுதல்படி உச்சிப்பொழுதில் இங்கு தோன்றிய தீர்த்தம், மணிகர்ணிகை. இந்தத் தீர்த்தக்குளத்தில் உச்சிப்பொழுதில் நீராடி வழிபடுவது சிறப்பு. ராவணனைக் கொன்ற தால் ஸ்ரீராமரை பிரம்மஹத்தி மற்றும் வீரஹத்தி தோஷங்கள் பீடித்துக்கொள்ள, இந்தத் தலத்துக்கு வந்து, லிங்கம் நிறுவி வழிபட்டதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது எனவும், ஸ்ரீவீரஹத்தி விநாயகரின் அருளால் வீரஹத்தி தோஷம் நீங்கியது எனவும் கூறுகின்றனர். மேற்குப்புற வாசலில் வீரஹத்தி பலி தூணும், ஒரு காலைத் தூக்கிய நிலையில் வீரஹத்தி விநாயகரும் காட்சி தருகின்றனர். மாலை வழிபாட்டின்போது வரிசையாக சரவிளக்குகள் ஏற்றப்பட்டு நடக்கும் இறைவழிபாடு, அத்தனை அழகு! கருவறையில், லிங்க மூர்த்தியுடன், ஸ்வாமியும் அம்பாளும் தம்பதியாகவும் காட்சி தரும் தலம் என்பதால், இங்கு விளக்கேற்றி,ஸ்ரீவேதநாயகி சமேத  ஸ்ரீவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்; இல்லறம் செழிக்கும் என்பது ஐதீகம்! மாணவர்களுக்கு அருளும் சரஸ்வதியையும் இங்கு தரிசிக்கலாம்.

வழி: நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ளது வேதாரண்யம் என்ற திருமறைக்காடு.

உலகளந்த பெருமாள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

முதல் பிறவியில் எலியாகப் பிறந்த மகாபலி, மறுஜென்மத்தில் சக்கரவர்த்தியாகப் பிறந்து மூன்று லோகங்களையும் துன்புறுத்தி வந்தான். அவனது கர்வத்தை அடக்க எண்ணிய பெருமாள் - வாமனனாக அவதரித்து, மகாபலி நடத்தும் யாகத்தில் பங்குகொண்டு, அவனிடம் மூன்றடி மண் தானம் வேண்ட, மகாபலியும் சம்மதித்தான். முதல் அடியில் மண்ணையும், இரண்டாவது அடியில் உலகத்தையும் அளந்தார் பெருமாள். வந்தவர் பெருமாள் என்பதை அறிந்த மகாபலி, கர்வமிழந்து, மூன்றாவது அடியை தன் தலையில் வைக்க வேண்டினான். அதனை ஏற்று பெருமாள் மகாபலியின் தலையில் பாதம் வைத்து அவனைப் பாதாளத்துக்கு அனுப்பினார். பின் மூவுலகக் கடமைகளையும் இந்திரனிடம் கொடுத்துவிட்டு மறைந்தார். இப்படி இறைவன் மகாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்ட தலம்தான், திருக்கோவிலூர். இங்கு மூலவர் - திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்), தாயார் - பூங்கோவல் நாச்சியார்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

ஒரு தருணத்தில் பொய்கையாழ் வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் தனித்தனியே க்ஷேத்திர யாத்திரை சென்றிருந்தனர். அவர்களை ஒன்றிணைக்க எண்ணிய பெருமாள், திருக்கோவிலூர் அருகே ஆழ்வார்கள் மூவரும் வந்தபோது பெருமாரி பொழியச் செய்தார். நனையாதிருக்க, அருகிலிருந்த மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தைத் தட்டி தங்குவதற்கு இடம் கேட்டார் பொய்கைஆழ்வார். முனிவர் வாசலில் ஒருவர் உறங்கும் அளவுக்கு இடம் இருந்த திண்ணையைக் கைகாட்டினார். பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் அடுத்தடுத்து வந்து முனிவரிடம் இடம் கேட்கவே, அதே திண்ணையில் மூவரும் நிற்க இடம் கிடைத்தது. இருளில் நான்காவதாக ஒருவர் நடுவில் புகுந்துகொண்டு மூன்று பேரையும் நெருக்க, அவர் பெருமாள் என்பதை உணர்ந்த ஆழ்வார்கள் அவரைப் பாடித் துதித்தனர். உடனே ஆழ்வார்கள் மூவருக்கும் ஒளி வடிவத்தில் காட்சி கொடுத்து அருள்பாலித்தார் பெருமாள். இப்படி ஆழ்வார்களின் பாட்டுக்காக, இறைவன் ஒளியாகக் காட்சி தந்த தலம், இது.

பலன்கள்: 108 வைணவத்தலங்களில் ஒன்றான இங்கு விஷ்ணுவின் சகோதரி துர்க்கை, பெருமாள் சந்நிதியின் அருகிலேயே காவல் தெய்வமாக இருக்கிறாள். செவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் பூஜித் தால் உடன்பிறப்புகளின் பிணக்குகள் குறையும் என்பது நம்பிக்கை. வரக்கூடிய தீபாவளி தினமும் செவ்வாய்க்கிழமையில் வருவதால், இத்தலத்தில் துர்க்கையை தரிசித்து, ஒளியாய்க் காட்சி தந்த பெருமாளை வேண்ட, எதிரிகள் தொல்லை நீங்கி ஏற்றம் பெறலாம் என்பது திண்ணம்!

வழி: விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ தொலைவில் இருக்கிறது திருக்கோவிலூர்.

ம.மாரிமுத்து படங்கள்:ம.பார்த்திபன், ஏ.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism