அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

புத்தாடைகள், இனிப்புகள் என கொண்டாட்டத்தின் மகிழ்விலிருக்கும் இந்த நேரத்தில், அர்த்தம்பொதிந்த, அற்புதமான நிகழ்வு ஒன்றை உங்களிடம் பகிர்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமீபத்தில் நண்பரின் மகளுடைய திருமண வரவேற்பு நடந்தது. அன்பாக, அனைவரையும் வரவேற்றபடி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவர், அடிக்கடி யாருடனோ அலைபேசியில் தொடர்புகொண்டு, `ம்... அங்க சாப்பாடு வந்துடுச்சா; குழந்தைகள் எல்லாரும் சாப்பிட்டாங்களா; அவங்க அத்தனை பேருக்கும் போதுமான அளவுக்கு சாப்பாடு வந்துச்சா; குழந்தைங்கள்லாம் என்ன சொல்றாங்க?’ என்று அனுசரணையாக கேட்டுக்கொண்டும் இருந்தார். தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்த எனக்கு, யார் அந்தக் குழந்தைகள் என்று தெரிந்துகொண்டபோது ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் பொங்கியது.

மண்டபத்தில் மகளின் திருமண வரவேற்பு விருந்து தடபுடலாக நடந்துகொண்டிருக்கும் அதேவேளையில், ஆதரவற்ற குழந்தைகளும் வயிறார சாப்பிட வேண்டும் என்பது நண்பரின் விருப்பம். அதன்படியே ஆதரவற்றோர் இல்லம் ஒன்றிலிருக்கும் குழந்தைகள் அத்தனை பேருக்கும் அறுசுவை உணவை ஏற்பாடு செய்திருக்கிறார். கூடவே, குழந்தைகளுக்குத் தேவையான எழுது பொருட்களையும் பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கிறார். பொதுவாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது மீதமாகும் உணவை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதற்கும் ஒரு படி மேலே சென்று ஆதரவற்ற குழந்தைகளுக்காக பிரத்யேக திருமண விருந்தையே ஏற்பாடு செய்து, எங்களின் பாராட்டு மழையில் நனைந்தார் நண்பர்.
இங்கே பொருத்தமான இன்னொரு செய்தி... `ஃபுட்பேங்க்’ என்கிற பெயரில், வாரந்தோறும் ஆதரவற்றவர்களுக்கு உணவு தானம் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் எனும் இளம்பெண், இந்த இதழ் ‘அவள் 16’-ல் இடம் பிடித்திருக்கிறார். தான் மட்டும் உதவாமல் தன்னோடு ஒரு குழுவையும் இணைத்துக்கொண்டு, இப்படி உணவு வழங்கும் அந்த இளம்பெண்ணும் ‘மகிழ்வித்து மகிழ்!’ என்பதையே சொல்லாமல் சொல்கிறாள்.
‘உண்டிக் கொடுத்தோர்... உயிர் கொடுத்தோரே’ என்ற இலக்கிய வரி, இன்றைக்கும் ஜீவனோடுதான் இருக்கிறது... அல்லவா!
இந்தத் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதி, அடுத்தவரை மகிழ்விப்பதாகவும் இருந்தால்... அது நம்முடைய மகிழ்ச்சியை பன்மடங்காக்கும்தானே தோழியரே!
உரிமையுடன்,

ஆசிரியர்