ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

முகத்துக்கு மட்டும் போதுமா அலங்காரம்?!
என் தோழியின் அக்காவுக்கு அடிக்கடி கால் விரல்களில் புண்ணாகி நடக்க சிரமப்படுவதும், அதற்கு ஏதாவது மருந்து போட்டு அடிக்கடி சரியாவதும் வழக்கம். ஒருமுறை கொஞ்சமும் நடக்க முடியாமல் போக... டாக்டரிடம் காண்பித்தபோது, கால் விரலில் அணிந்த மெட்டியும், கொலுசும், மண்ணும் சகதியுமாக இருக்கவே... ``மாதத்தில் ஒருமுறையாவது இதையெல்லாம் கழற்றி சுத்தம் செய்ய வேண்டாமா? நிறைய அழுக்கு சேர்ந்து அதிலிருந்து கிருமித்தொற்று உங்கள் விரல்களைப் பாதிக்கிறது. முகத்துக்கு மட்டும் அலங்காரம் போதுமா? கால்களையும், நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கால்கள் வழியாகத்தான் பல தொற்றுகள் ஏற்படும். இதுகூட தெரியாதா?’’ என்று மிகவும் கோபப்பட்டிருக்கிறார் டாக்டர்.
அவரின் அறிவுரைப்படி நடந்துகொண்டதும் கால்வலி போயே போச்சு!
- இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்
இறைவன் யாரையும் ஒதுக்குவதில்லை!
நான், மற்ற மதங்கள் என்ன சொல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள எப்போதும் ஆசைப்படுவேன். ஓர் இடத்தில், இந்து மதத்தைப் பற்றி தினமும் காலை 10 மணி முதல் ஒரு மணி வரை விளக்கம் சொல்வதுடன், யோகா, தியானம் சொல்லிக்கொடுத்து, பயிற்சியும் செய்யச் சொல்வார்கள். நான் அதில் ஆர்வத்தோடு கலந்துகொண்ட சமயம், என்னருகே வந்து அமர்ந்த ஒரு பெண் என்னையே பார்த்துக்கொண்டிருந்து, என் பெயரைச் சொல்லவும்... நானும் மிகவும் கஷ்டப்பட்டு, கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பான கல்லூரித் தோழி என புரிந்துகொண்டேன். வகுப்பு முடிந்த பிறகு நடந்த இறைவழிபாட்டிலும் கலந்துகொண்டேன். என் தோழிக்கு ஆச்சர்யம்! ``நீ எங்கள் சாமியைக் கும்பிடுகிறாய்; உங்கள் சாமியையும் கும்பிடுகிறாய்...''என்றவள், என் முகத்தையே பார்த்தாள்.
``எனக்குத் தெரிந்து எந்த சாமியும் எந்த மனிதனையும் வேண்டாம் என்று சொன்னதில்லை. என் சாமி எனக்குத் தகப்பன் என்றால், உங்கள் சாமி என் தாய்மாமனாக இருக்கட்டுமே... இருவருமே என் குடும்பத்தைப் பொறுப்பாக பாதுகாப்பார்களே!” என்று கூறி, கையசைத்து விடைபெற்ற என்னைப் பார்த்துக்கொண்டே நின்றாள் என் தோழி... கையசைக்க மறந்து!
- வே.தேவஜோதி, மதுரை
பாட்டி தி கிரேட்!
என் அண்ணன் வீட்டார் புதிதாக குடியேறியிருக்கும் வீட்டைப் பார்க்க, குடும்பத்தோடு சென்றிருந்தோம். அன்றிரவு பக்கத்து வீட்டு குழந்தைகள் எல்லோரும் ஹோம்வொர்க்கை முடித்ததும். என் அண்ணன் பிள்ளைகளோடு, என் குழந்தைகளையும் அழைத்தனர். “அண்ணி, எல்லா பிள்ளைகளும் எங்க கிளம்புறாங்க... ஏதாவது கேம்ஸ் ஆடவா?” என்றேன். அதற்கு, “பக்கத்து வீட்டுப் பாட்டி தினமும் ஏதாவது கதை சொல்லுவாங்க. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். வேணும்னா நீயும் போய் கேளு” என்றார் அண்ணி. நானும் போய் ஓரமாக அமர்ந்தேன். ஒரு பிள்ளை சாமி கதை சொல்லும்படி கேட்க, அவரும் சொல்லிவிட்டு, “நம்மை சுத்தி நிறைய கடவுள் இருக்காங்க. தாய் - தந்தையே முதல் தெய்வம், எழுத்தறிவித்த குரு இரண்டாம் தெய்வம். உயிர் காக்கும் மருத்துவரும் கடவுள்தான். அவசரத்துக்கு உதவி செய்யும் எல்லோருமே தெய்வம்தான். அதோட நீங்க பெரியவங்களா ஆன பிறகு செய்யும் தொழிலே தெய்வம்’’ என்று அழகாக விளக்கம் கொடுத்தார். அசந்து போனேன்!
ஓல்ட் இஸ் ஆல்வேஸ் கோல்டு!
- ராணி மகாலிங்கம், ஞானஒளிவுபுரம்
பெண் என்பவள் இயந்திரமா?!
என் தோழி, திருமணமான எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு, குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாள். காரணம் கேட்டதற்கு, ``சுயதொழில் செய்ய நினைக்கும் என் முயற்சிகளை தடுக்கிறார். மேலும் ஒரு வேலைக்காரியைப் போல நடத்துகிறார்'' என்று கூறினாள்.
அதற்கு, "அவருக்கு இருக்கும் வசதிக்கு நீ வேலை செய்ய வேண்டுமா? நீ விட்டுக்கொடுத்து போ. இப்படி நீ இங்கு வந்து இருந்தால் வாழாவெட்டி என்று சொல்வார்கள்'' என்று அறிவுரை கூறினார், தோழியின் அம்மா. என் தோழியோ, ``கல்யாணம் ஆகி 2 வருஷம் குழந்தை இல்லாமல் இருந்தேன் மலடின்னு சொன்னாங்க... இப்போ வாழாவெட்டினு சொல்வாங்க. புருஷன் இறந்து போனவங்களை விதவை என்கிறார்கள். இந்தப் பெயர் எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும்தானே! இன்னும் என்னல்லாம் சொல்ல முடியுமோ சொல்லட்டும்!'' என்று ஆதங்கப்பட்டாள்.
`பெண்களுக்கும் ஒரு மனம் உண்டு. அவர்கள் இயந்திரங்கள் அல்ல. அவர்களும் சுய மரியாதையுடன், கௌரவத்துடன் வாழ நினைக்கிறார்கள்; அதை அனுமதிப்பது அவசியம்' என்பதை சமூகம் உணரும்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் தீரும்.
- பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்