Published:Updated:

மயானப் பணியில் மங்கையர்கள்!

மயானப் பணியில் மங்கையர்கள்!

றந்தவர்களுக்கு போடப்படும் பூமாலையைக்கூட, புத்திச்சாலித்தனமாக யோசித்தால்... இயற்கை உரமாகப் பயன்படுத்த லாம் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள், சென்னை, அண்ணாநகர், மாநகராட்சி மயான பூமியில் பணியாற்றும் பிரவீணா, சங்கீதா, சாந்தி, அனிதா மற்றும் மகாலட்சுமி. இடுகாட்டையும் தங்களது இல்லம் போல பராமரித்து இயற்கையின் இருப்பிடமாக மாற்றியிருப்பவர்கள்!

மயானப் பணியில் மங்கையர்கள்!

மயானபூமியில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் பிரவீணாவைச் சந்தித்தோம். “அண்ணாநகர், வேலங்காடு மயான பூமி பராமரிப்புப் பணியை ஐ.சி.டபுள்யூ என்ற என்.ஜி.ஓ-விடம் கடந்த 2014 மார்ச் 4-ம் தேதி மாநகராட்சி ஒப்படைத்தது. ஐ.சி.டபுள்யூ மூலம் பணிக்கு வந்த எங்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல் நாள் இங்கே வேலைக்கு வந்தபோது... யாரை, எதைப் பார்த்தாலும், காற்று வீசினால்கூட ஹார்ட் பீட் எகிறியது. அடுத்து இங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் பல மாதங்களாக சவரம் செய்யாத முகம், பல வருடங்களாக கத்தரிக்கோல் படாத பரட்டைத்தலை, முகத்திலும், மனதிலும் விரக்தியின் வெளிப்பாடு, புகையிலை படிந்த பற்கள் என பார்க்கவே பயமாக இருந்தது. அவர்களிடம் பேசவே முதலில் தயங்கிய எனக்கு, பேசிய பிறகுதான் அந்த உருவத்துக்குள்ளும் இருக்கும் வெள்ளை மனசு தெரிந்தது!’’ என்று கொஞ்சம் கொஞ்சமாக பணிக்குப் பழகியிருக்கிறார் பிரவீணா.

மயானப் பணியில் மங்கையர்கள்!

‘‘வேலங்காட்டுக்கு சராசரியாக தினமும் ஐந்து உடல்கள் கொண்டு வரப்படும். இதற்கு முன்பு, துக்க வீட்டில் இருந்து வருபவர்களிடம்கூட ஈவு இரக்கம் பார்க்காமல் பணத்தைப் பிடுங்கும் புரோக்கர்கள் இங்கு இருந்து வந்தனர். நாங்கள் வந்த பிறகு புரோக்கர்களை முற்றிலும் கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதோடு விவரம் தெரியாமல் வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், விவரத்தையும் சொல்லி வழிகாட்டி வருகிறோம். விதிமுறைப்படி `4 ஏ’ என்ற விண்ணப்பப் படிவத்தில் டாக்டரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு வரச் சொல்வது, போலீஸ் கேஸ் என்றால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், ஹாஸ்பிட்டலில் இறந்தால் அதற்குரிய சான்றிதழ் என்று கொண்டு வந்தபிறகே அந்த உடலை எரிக்க அனுமதிப்போம். உடலை எரித்ததற்கான சான்றிதழோடு, இறப்பு குறித்த விவரத்தையும் மாநகராட்சிக்குத் தெரிவித்து 21 நாட்களில் இறப்பு சான்றிதழுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்!’’

- படபடவெனப் பகிர்ந்தார் சாந்தி. 

மயானத்தில் மலர்ந்திருக்கும் ஓர் அசத்தல் திட்டம் பற்றிச் சொன்ன மகாலட்சுமி... ‘‘மயான பூமிக்கு வருபவர்கள் ஆங்காங்கே சிறுநீர் கழித்து இடத்தை அசிங்கப்படுத்தி வந்தனர். அதோடு இங்கு வேலை பார்க்கும் நான்குபெண்களுக்கும் கழிவறைவசதி இன்றி சிரமப்பட் டோம். மாநகராட்சியிடம் சொல்லி இங்கு பயன்படாமல் இருந்த இரண்டு கழிவறை களைச் சீரமைத்து, ஒன்றுஆண்களுக்கு, மற்றொன்று பெண்களுக்கு என்று ஒதுக் கினோம். கழிவறையைச் சுத்தமாக வைத்தோம். இருப்பினும் ஒரு சிலரே அதைப் பயன்படுத்தினர், மற்றவர்கள் சுற்றுப்புறத்தையே அசிங்கப்படுத்தினர். இதனால், ‘தயவுசெய்து கழிப்பறையைப் பயன்படுத்துவீர், பரிசு வெல்ல வாய்ப்பு’ என்று அறிவித்து, அதன்படி சின்னச் சின்ன பரிசு கொடுத்தோம். சில நாட்களில் பரிசு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க... குலுக்கல் முறையில் பரிசு வழங்கும்படி ஆனது. இப்போது 50 ரூபாய்க்கு செல்போன் ரீசார்ஜை பரிசாக வழங்கும் அளவுக்கு நல்ல வரவேற்பு. சுற்றுப்புறமும் தூய்மையானது!’’ என்றார் முகமலர்ச்சியுடன்.

மயானப் பணியில் மங்கையர்கள்!

சங்கீதா, பி.காம் பட்டதாரி. “வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும் சவாலாக இந்தப் பணியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் அலுவலகத்தை விட்டு பிணங்கள் எரிக்கும் இடத்துக்குச் செல்லவே பயமாக இருக்கும். இப்போது எல்லாம் பழகி விட்டது. மயானபூமியை சுற்றிலும் இருந்த புதர்களை அகற்றிவிட்டு செடிகள் வளர்த்து வருகிறோம். காடாக இருந்த இந்த இடம் இப்போது கார்டனாக மாறியிருக்கிறது.

இங்கு குவியும் இறுதி அஞ்சலிப் பூமாலைகள் மலைபோல் குவிய, அந்தக் குப்பைகளை அகற்றும் பணியே எங்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. `ஐ.சி.டபுள்யு’வின் நிறுவனச் செயலாளர் ஹரிஹரன், பூக்களை இயற்கை உரமாக மற்றும் தொழில்நுட்பத்துக்கு வழிகாட்ட, இப்போது அதையும் வெற்றிகரமாகச் செய்து, இந்தியாவிலேயே உரம் தயாரிக்கும் முதல் இடுகாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளோம்.  மயான பூமியை ரோஜா, இட்லிப்பூ  உள்ளிட்ட பூச்செடிகளாலும், நொச்சி, வல்லாரை, திப்பிலி, வெற்றிலை போன்ற மூலிகைச்செடிகள், கொடிகளாலும், இன்னும் சில அரிய மரங்களாலும் நந்தவனமாக்கி இருக்கிறோம்!’’ என்றார் வியக்கவைத்து.

பெண்களுக்கு சல்யூட்! 

எஸ்.மகேஷ்,  படங்கள்:தி.குமரகுருபரன்