Published:Updated:

வெள்ளத்தில் நீந்தி வந்த பால் மனசு!

நெகிழ்ச்சி

சென்னையைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தின்போது, அன்றாட உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, அரை லிட்டர் பால் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. அந்தச் சூழலில்தான், இடுப்பளவு வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் வாடிக்கையாளர்களுக்கு அசல் விலையிலேயே பாலை விற்பனை செய்து, சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வைரலானார், அசோக் நகர் ராதா.

வெள்ளத்தில் நீந்தி வந்த பால் மனசு!

‘‘நான் முப்பது வருஷமா பால் விற்பனை செய்றேன். நான், என் மகன், மருமகள்னு மூணு பேருக்கும் இதுதான் வருமானம். விடியற்காலை மூணு மணிக்குக் கிளம்பி, மேற்கு மாம்பல ஆவின் பூத்ல பாலை எடுப்பேன். என் பைய னுக்கு போன் பண்ணினதும், மருமகள் பத்மாவோட வருவான். ஆளுக்கு ஒரு ஏரியாவா பால் விற்கப் போயிடுவோம். மாசம் ஒரு வீட்டுக்கு 50 ரூபாய்னு, எனக்கு 150 வீட்டுக்கு 7,500 ரூபாய் கிடைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெள்ளத்தில் நீந்தி வந்த பால் மனசு!

இப்போ ஊரை உருக்குலைச்சுப் போட்ட மழையில, எங்க ஏரியாவுல இடுப்பளவுக்கு தண்ணீர். மழையும் பயங்கரமா பெய்துகிட்டு இருந்துச்சி. வெள்ளம் வந்த அந்த புதன்கிழமை நான், மகன், மருமகள் மூணு பேரும் மழையைப் பொருட்படுத்தாம பால் விற்பனைக்குப் போனோம். ரெயின் கோட் போட்டுட்டு இடுப்பளவு தண்ணியில மேற்கு மாம்பலத்துல இருக்குற அடுக்குமாடிக் குடியிருப்புக்கு பால் போடப் போனதை, யாரோ ஒருத்தவங்க போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பிட்டாங்க. அதைப் பார்த்து பலரும் பாராட்டினப்போதான், விஷயமே தெரிஞ்சது. அதுவும் வெள்ளம் வந்தப்போ பால் விலை நூறு ரூபாய்க்கும் மேல போனப்போகூட, நான் அசல் விலை 35 ரூபாய்க்கே கொடுத்ததை பெருமையா பேசினாங்க. இதென்னங்க... என்னோட வேலையை சரியா செஞ்சதுக்கு எதுக்குங்க பாராட்டு!

பொதுவா மழையானாலும், பனியானாலும் பால் எடுக்கப் போகாம இருக்க மாட்டேன். ஏன்னா, கைக்குழந்தையில் இருந்து வயசானவங்க வரை பசியாத்துற பொறுப்பு அது. ஆனா, புதன்கிழமை பால் விற்பனை செய்த பிறகு... வியாழன், வெள்ளி ரெண்டு நாளும் ஆவின் பாலே வரல. ரெண்டு நாளும் எத்தனை குழந்தைங்க பசியால துவண்டு போயிருப்பாங்கனு நினைச்சுதான் இப்போ வரைக்கும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன். இனி இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது!’’

- தூறிக்கொண்டிருக்கும் வானம் பார்த்து வேண்டுகிறார், ராதா!

கு.ஆனந்தராஜ்  படம்:ரா.வருண் பிரசாத்