Published:Updated:

மழை கடந்த பூமி!

நினைவுகள்

மழை...

ஊற்றெடுக்கும் கவிதை

மண்ணில் விழும் திரவ சொர்க்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உயிர்ப்பசிக்கு உணவளிக்கும் அமுதசுரபி

காதல் நிறைக்கும் இயற்கையின் வரம்!

- இப்படித்தான் இருந்தது மழை குறித்த என் பார்வை... அதன் விஸ்வரூபம் காணும் வரை! இப்போது மேக சுனாமி சென்னையை உலுக்கி எடுத்த பிறகு, `மழை என்றால் பயம்... பயம் மட்டுமே' என்றாகியுள்ளேன். நேற்றுவரை வாகனங்களும் மக்களும் கடந்து போன என் தெருவில் படகும், பரிசலும், கூடவே சில பிணங்களும் மிதந்து போவதைப் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. வேலை நிமித்தமாகசொந்த ஊரான வேலூரில் இருந்து குடும்பத்தைப் பிரிந்து சென்னையில் தங்கி அலுவலகம் செல்லும் பெண் நான். இந்த நான்கு நாட்களில் நகர்ந்து போன ஒவ்வொரு நொடியும், எனக்கு அமானுஷ்ய நொடிகளே!

மழை கடந்த பூமி!

முதல் நாள் செவ்வாய் (1/12/15): காலையில் கொஞ்சம் மழை விட்ட மாதிரி இருக்கவே, டூ வீலரில் அலுவலகத்துக்குக் கிளம்பினேன். வழியிலேயே மழை பின்னி எடுக்க, கண்களைத் திறக்க முடியாத அளவுக்கு நீர் அம்புகளால் குத்தியது மழை. நனைந்து நடுங்கி அலுவலகம் வந்து சேர்ந்தேன். இரண்டு மணிநேரம் மட்டுமே வேலை பார்த்திருப்பேன்... அவசரச் செய்தியாக வீட்டுக்குக் கிளம்ப அறிவுறுத்தினார்கள்.

முதல் தளத்தில் என் வீடு. இண்டக்‌ஷன் ஸ்டவ் சமையல்தான். மின்சாரம் தடைப்பட்டுவிட, வெளியில் எட்டிப் பார்த்தால் இருசக்கர வாகனம் பாதி அளவுக்கு மூழ்கி இருந்தது. கனமழையில், மின்சாரமற்ற இரவில் ஹோட்டலைத் தேடும் தைரியம் எனக்கில்லை. அக்கம்பக்கத்து வீடுகளும் பழக்கமில்லை. மெழுகுவத்தியை ஏற்றினேன். பசி வயிற்றைக் கிள்ள, முன்னால் மெழுகுவத்தி மட்டுமே எரிந்துகொண்டிருந்தது. ஒரு கரண்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மெழுகுவத்தியில் காட்டினேன். எண்ணெய் சூடானதும் அதில் முட்டை, மிளகுத்தூள், உப்பு சேர்த்து ஸ்பூனால் கிளறி தட்டில் கொட்டினேன். இந்த ஆம்லெட்டை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். லைக்ஸ்கள் விழுந்துகொண்டிருந்தன. ஆனால், அதுதான் அடுத்த நான்கு நாட்களுக்கான கடைசி போஸ்ட் என்பது அப்போது தெரியாது. மின்சாரம் வரவில்லை. அப்படியே தூங்கிவிட்டேன்.

இரண்டாம் நாள் புதன் (2/12/15): கீழ்தளம் முக்கால் பாகம் மூழ்கி இருந்தது... இருசக்கர வாகனத்துடன். அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் எல்லோரும் மேல் தளங்களுக்கு இடம் மாறிக்கொண்டிருந்தார்கள். 70 வயது பாட்டி ஒருவர், 100 கிலோவுக்கு அதிகமான எடையில் இருப்பார். பக்கத்து வீடுகளில் இருந்த ஆண்கள் அப்படியே தூக்கிக்கொண்டு வந்தது, பேய்மழையிலும் மனிதம் தந்த சந்தோஷம். பாட்டி, பாட்டியின் மருமகள், இரண்டு பெண் பிள்ளைகள் என நான்கு பேருக்கு என் வீட்டில் இடம் கொடுத்தேன். அதுவரை பழக்கமில்லாத அக்கம்பக்கத்தினர் எல்லோரும் ஒரே குடும்பமாக ஒன்றானோம். வீட்டில் இருந்த மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வைத்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சமைத்தோம்.

மழை கடந்த பூமி!

இருட்ட ஆரம்பித்தது. வீட்டில் மின்சாரம் இல்லாததால் டேங்கில் இருந்த தண்ணீர் தீர்ந்து போனது. குடிநீரும் போதுமானதாக இல்லை. போனில் இருந்த சார்ஜ், கடைசி நிலைக்கு வந்தது. இரவு யாரும் சாப்பிடவில்லை. பாட்டி, இருந்த இடத்திலேயே மலம் கழித்துவிட்டு பதறிக்கொண்டிருந்தார். கொஞ்சமாக இருந்த மினரல் வாட்டரைக் கொண்டு பாட்டியை சுத்தம் செய்தோம். காக்கையின் எச்சத்தைப் பார்த்தால்கூட முகம் சுளிக்கும் நான், பாட்டியின் ஆடையை அவிழ்த்து சுத்தம் செய்திருக்கிறேன். மழை மலர்த்திய என் மனதை ரசித்துக்கொண்டேன்.

இரவு இரண்டு மணி இருக்கும். வெளியே வந்து எட்டிப் பார்த்தால், சாக்கடையோடு கலந்து ஓடும் மழை வெள்ளம் கறுப்பு ஆறாக சாலையை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டு நகர்ந்துகொண்டிருந்தது. தூரத்தில் ஒரு நாய் மட்டும் ஓலமிட்டுக்கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் வியாழன் (3/12/15): என் வீட்டில் இருந்த குடும்பம், சற்று பாதுகாப்பான வேறொரு ஏரியாவில் இருந்த உறவினர் வீட்டுக்கு மீன்பாடி வண்டியில் சென்றனர். நான் சிறுநீர் கழித்து 12 மணி

மழை கடந்த பூமி!

நேரத்துக்கும் மேல் ஆகிறது. தண்ணீர் இல்லை. வேறு வழியில்லாமல் சாலையில் போன நீரையே பக்கெட்டில் அள்ளிச் சென்றேன். 11 மணிக்கு மேல் சாலையில் படகுகள் வர ஆரம்பித்தன. மொட்டை மாடியில் நின்று கையேந்தி ஹெலிகாப்டரில் இருந்து போடப்பட்ட உணவுப் பொட்டலங்களைப் பெற்ற நிமிடங்கள், வாழ்வின் நிச்சயமின்மையை சரேலென உள்ளத்தில் அறைந்தன. சிறுநீர், மலம் கழிக்க இருக்கும் சிக்கலால் உயிர் வாழ மட்டுமே கொஞ்சமாக சாப்பிட்டுக்கொண்டோம்.

கார்கள், இருசக்கர வாகனங்கள், வீட்டில் இருந்த பொருட்கள் என பலவும் வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்ட துயரத்தில் மக்கள் மனம் கதறியபடி இருக்க, இறந்து போன கோழி, நாய், எலி எல்லாம் வயிறு உப்பி மிதந்து கொண்டிருந்தன. உச்சகட்டமாக மனித உடல் ஒன்று தெரு முக்கில் கரை ஒதுங்கியபோது, மிஞ்சியிருக்கும் உயிரே போதுமென்று மன்றாடியது மனம்.

நான்காம் நாள் வெள்ளி (4/12/15): தண்ணீர் வடியுமா என மேல்தளத்தில் இருந்து பார்த்துப் பார்த்து கால்கள் வலித்ததோடு சேற்றுப் புண் வேறு வந்துவிட்டது. மெழுகுவத்தியும் தீர்ந்துவிட்டது. மொபைலும் ஸ்விட்ச்டு ஆஃப். வரவிருக்கும் இரவு, பயம் கொண்டு வந்து சேர்த்த வேளையில், நண்பர் ஒருவர் கழுத்தளவு சாக்கடை நீரில் மெதுவாய் நடந்து, தன் தலையில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்திருந்த ஸ்நாக்ஸ், மெழுகுவத்தி, குடிநீரை எங்கள் காம்பவுண்டில் இருந்தவர்களுக்கு  கொடுத்தார். இந்த  நண்பரைப் போலத்தான், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மூலம் பல தன்னார்வலர்களை இணைத்து அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கினார்கள் இளைஞர்கள் பலர். எனக்கும் இணைய ஆசை. என் உயரம் குறைவென்பதால், கழுத்தளவு நீரில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். இன்று என் வாழ்வில் விதி வலியது. அடுத்த வாரம் வர வேண்டிய மாதவிடாய், இந்த வாரமே வந்துவிட்டது. கையிருப்பில் ஒரு நாப்கின் மட்டுமே. கால் கழுவக்கூட தண்ணீர் இல்லாத சூழலில், மாதவிடாயை எப்படி சமாளிக்கப் போகிறேன். நடுவில் பெய்து விட்டுப் போன மழையை ஒரு வாளியில் சேகரித்து வைத்திருந்தேன். இதுதான் இன்றைய இரவுக்கு என் ஜீவ நாடி.

ஐந்தாம் நாள் - சனி (5/12/15): விடிந்ததும் தண்ணீர் வற்றியிருந்ததைப் பார்த்த போதுதான் என் உயிரில் மெள்ள நீர் சுரக்க ஆரம்பித்தது. என் இரு சக்கர வாகனம் இப்போதைக்கு இயங்கு

வதற்கான அறிகுறியே இல்லை. அலுவலகம் கிளம்ப நாப்கின் தேவைப்படுகிறது. வேறு வழியில் லாமல் காட்டன் துணியை தயார் செய்துகொண்டு கிளம்பினேன்.

நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாமல், ஐந்தாம் நாளான சனியன்று தொலைக்காட்சி செய்திகளையும் வீடியோக் களையும் அலுவலகத்தில் பார்த்து கண்ணீர் வடிக்கிறேன். நான் கடைசியாக போட்ட `மெழுகுவத்தி ஆம்லெட்' போஸ்ட்டுக்கு அதிக அளவில் லைக்ஸ் கிடைத்திருக்கிறது. அலுவலகக் கணினியில் என் மழை அனுபவத்தை டைப் செய்துகொண்டிருக்கும் இந்தத் தருணம், என் வாழ்வில் மீண்டும் வரக் கூடாது என்று மனசுக்குள் பிரார்த்திக்கிறேன்!

பொன்.விமலா படங்கள்:கே.ராஜசேகரன், மா.பி.சித்தார்த்