Published:Updated:

வெள்ளம் வடிந்திருக்கலாம்... மிதக்கின்றன துயரங்கள்!

துயரம்

டகிழக்குப் பருவ மழையால் 100 ஆண்டுகளுக்குப் பின் சென்னை சந்தித்த அகோரப் பேரழிவில், சுமார் 270 பேர் உயிரிழந்தனர். தண்ணீருக்குத் தங்கள் சொந்தங்களைத் தின்னக் கொடுத்தவர்களின் வலி, தாங்க முடியாத துயரம்!

வெள்ளம் வடிந்திருக்கலாம்... மிதக்கின்றன துயரங்கள்!

10 வயது அருண் நிரஞ்சன், 5 வயது அருணா பிரதீபா ஆகியோரின் பெற்றோரைப் பறித்துக்கொண்டது, பேய்மழை. பள்ளிக்கரணையில் தனியார் பள்ளி ஒன்றில் உதவி தலைமை ஆசிரியை, நிர்மலா புஷ்பம். மத்திய அரசின் காற்றாலை நிறுவன ஊழியர், மருதநாயகம். இந்தத் தம்பதியின் பிள்ளைகள்தான் இவர்கள். பெற்றோரை இழந்து இப்போது தூத்துக்குடியில் இருக்கும் தன் பெரியப்பா வேலாயுதம் வீட்டில் இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வெள்ளம் வடிந்திருக்கலாம்... மிதக்கின்றன துயரங்கள்!

‘‘டெல்லியில மூணு நாள் நடக்கவிருந்த சர்வதேசப் பள்ளிகள் கருத்தரங்கில் கலந்துக்கப் போன நிர்மலாவை டிசம்பர் 1 இரவு ஏர்போட்டில் வழியனுப்ப, மருதநாயகமும் போனார். ஆனா, மழையால ஏர்போட்டை மூடிட, ரெண்டு பேரும் கார்ல வீடு திரும்பியிருக்காங்க. வெள்ளத்தால் மேற்கொண்டு நகர முடியாம டிரைவர் நிறுத்த, கரையை அடையுற வழி தேடி தண்ணியில இறங்கின ரெண்டு பேரும். ஆளுக்கொரு பக்கமா வெள்ளம் அடிச் சிட்டுப் போயிருச்சு. உயிரில்லாமதான் கரை ஒதுங்கியிருக் காங்க. ரெண்டு பேருக்கும் 40 வயசுகூட ஆகல. சாகுற வயசா இது..?'' நீர் பெருக்கெடுக்கும் கண்களைத் துடைத்துக்கொள்கிறார், வேலாயுதம்.

வெள்ளம் வடிந்திருக்கலாம்... மிதக்கின்றன துயரங்கள்!

‘‘இங்க நாங்க எல்லோரும் அன்னிக்கு நைட் முழுக்க அவங்களைத் தொடர்புகொள்ள முடியாத தவிச்சுப் போயிருக்க, அங்க அவங்க மரணத்தோட போராடிட்டு இருந்திருக்காங்கனு நினைக்கிறப்போ மனசு நொறுங்குது. தொடர்ந்த நாட்களிலும் அவங்களைப் பத்தி எந்தத் தகவலும் கிடைக்காமப் போக, சென்னையில இருந்த வங்க மூலமா தேடினப்போ ரெண்டு பேரோட உடல்கள்தான் கிடைச்சது. சொந்த ஊரு தூத்துக்குடிக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகள் நடத்தினப்போ, குழந்தைகளைப் பார்த்து ஊரே அழுதுச்சு. என் தம்பி பசங்களுக்கு நான் இருக்கேன்!’’

- குழந்தைகளை இறுக்கி அணைத்தவாறு தன் அழுகையை விழுங்குகிறார் வேலாயுதம்.

பூட்டப்பட்ட வீட்டுக்குள், கழுத்துக்கு மேல் ஏறி வந்த தண்ணீரால் காவு வாங்கப்பட்ட தம்பதி, வெங்கடேசன் - கீதா. இவர்களின் மகள் அனிதாவின் கணவர் ராதாகிருஷ்ணன் குரலில் உறைந்திருந்தது மீள முடியாத துயரம். ‘‘மாமா   ஜி.வெங்கடேசன், ஓய்வு பெற்ற 72 வயது ராணுவ அதிகாரி. அத்தை கீதாவுக்கு 68 வயசு. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வந்த வெள்ளம், டிசம்பர் 1 இரவு ராணுவ அதிகாரிகள் காலனியைச் சூழ ஆரம்பிச்சப்போ, ரெண்டு பேரும் வீட்டைப் பூட்டிட்டு உள்ள இருந்திருக்காங்க. வீட்டுக்குள் வந்த தண்ணீர் கணுக்கால் நனைச்சு, முழங்கால் தாண்டினப்போ, வீட்டை விட்டு வெளியேறிடலாம்னு சாவியை எடுக்க, அது தண்ணீரில் விழுந்துடுச்சு. இடுப்பளவு உயர்ந்த நீருக்குள் குனிந்த சாவியைத் தேடும் நிலையில் இல்லாத அவங்க, ஜன்னல் வழியா சத்தம் போட்டு உதவிக்குக் கூப்பிட்டிருக்காங்க. ஆனா, அக்கம்பக்கத்தினர் எல்லோரும் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்குப் போயிட்டதால, அங்கே யாரும் இல்ல.

வெள்ளம் வடிந்திருக்கலாம்... மிதக்கின்றன துயரங்கள்!

கையறு நிலையில, ஒரு மேஜை மேல ஏறி நின்னு, தன் மகளுக்கு போன் செஞ்சிருக்காங்க. ‘கழுத்தளவுக்கு தண்ணீர் வந்துருச்சு. மேஜை மேல நிக்கிறோம். எப்படியாச்சும் காப்பாத்த முயற்சி பண்ணும்மா...’ என்ற மரண பயம் உறைஞ்ச குரல்தான், அப்பாகிட்ட அனிதா இறுதியா கேட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவங்களை நெருங்க முடியல. கொட்டுற மழையில், இரவில் எந்த முயற்சியும் பயனளிக்காம போயிருச்சு. அந்த வயசான தம்பதியோட இறுதி நிமிடங்கள் எப்படியிருந்திருக்கும் நினைச்சுப் பார்க்கப் பார்க்க, மனசு ஆறலை...’’ - கண்ணீர் இன்னும் உலரவில்லை அந்த வீட்டினரின் விழிகளில்.

வெள்ளம் வடிந்திருக்கலாம்... மிதக்கின்றன துயரங்கள்!

தமிழுக்காக இயங்கி வந்தவர் சீனிவாசன். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவர் மனைவி சங்கராந்தி. இருவரையும் துள்ளத் துடிக்க வாரிச் சுருட்டுக்கொண்டு போய்விட்டது மழை வெள்ளம். தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள்காட்டி போன்றவற்றை உருவாக்கிய சீனிவாசன், பி.எஸ்.என்.எல் நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் முக்கியப் பங்காற்றியவர். இணையப் பயன்பாட்டுக்கான தமிழ் மென்பொருட்களை அறிமுகம் செய்தவர். இன்னும் தமிழுக்காக பல பணிகள் செய்து வந்த இவர், ‘தெய்வ முரசு’ ஆன்மிக இதழின் பதிப்பாளரும்கூட.

சீனிவாசனின் தம்பி கந்தசாமி, ‘‘ஈக்காட்டுத் தாங்கலில் பக்கத்து பக்கத்து தெருவில்தான் என் வீடும், எங்கண்ணன் வீடும். அன்னிக்கு செவ்வாய்க்கிழமை, அடையாற்றில் வெள்ளம் வந்துக்கிட்டிருந்துச்சு. என் வீட்டுல வெள்ளம் வந்துருமோன்னு அண்ணன் ரொம்ப பயந்தார். ‘பத்திரமா இருக்கீங்களா?’னு தொடர்ந்து விசாரிச்சுட்டே இருந்தார். அப்படியும் அன்னிக்கு இரவு முழுக்க அவர் மனசு அமைதிப்படலை. மறுநாள் பொழுது விடிஞ்சதுமே, ‘தெருமுனைக்கு வா... உன்னைப் பார்க்கணும்...’னு சொன்னார். நான் பத்திரமா இருக்கேனானு பார்க்க வீட்டை விட்டு வெளிய வந்தவரை, வெள்ளம் இழுத்துக்கிட்டு போயிருச்சு. அண்ணன் பின்னால வந்த அண்ணியையும் தண்ணி அடிச்சுட்டுப் போயிருச்சு.

வெள்ளம் வடிந்திருக்கலாம்... மிதக்கின்றன துயரங்கள்!

அண்ணன் பன்னிரு திருமுறைகளையும் செல்போனில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சில இருந்தார். ‘அது சீக்கிரமே நல்லபடியா முடிஞ்சிரும்’னு சொல்லிட்டே இருந்தார். எல்லாம் முடிஞ்சுபோச்சு. என் மேல வெச்ச அன்பால தன்னையே இழந்துட்டாரு ..!’’ - ஆறுதல்களால் ஆற்ற முடியாத துயரம் கந்தசாமியினுடையது.

உயிர்கள் பறிபோயின. உறவுகள் பறிபோயின. பல ஆண்டுகால உழைப்பை நீர் ஒரே இரவில் சுருட்டிப் போக, உடைமைகளை இழந்தார்கள் மக்கள். பாடப்புத்தகங்கள் அனைத்தும் இழந்தார்கள் மாணவர்கள். வெள்ளம் வடிந்திருக்கலாம். மிதக்கின்றன துயரங்கள். மீண்டு வர எத்தனை காலம் ஆகுமோ..?!

கே.அபிநயா  படங்கள்: ஏ.சிதம்பரம்