Published:Updated:

படகில் 'குவா குவா'!

கர்ப்பிணியைக் கரைசேர்த்த ரியல் ஹீரோக்கள்

வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து மரண பயம் காட்டிக்கொண்டிருந்த வேளையில், அதைவிட வேகம் கொண்டு அவர்களைக் கண்டடைந்து காப்பாற்றினார்கள் பல ரியல் ஹீரோக்கள். முடிச்சூர் பகுதியில் கர்ப்பிணியான சித்ராவை இ-காமர்ஸ் தொழில் செய்து வரும் முகமது யூனுஸ் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்தது. சித்ரா குடும்பத்தினர், பிறந்த தங்கள் பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டு நன்றியை வெளிப்படுத்தியது, அன்பின் அழகு! அப்படி இன்னொரு நெகிழ்வான சம்பவம் இது...

படகில் 'குவா குவா'!

திருவொற்றியூர் சத்யமூர்த்தி நகர், கலைஞர் தெருவில் வசிப்பவர்கள் பீகாரைச் சேர்ந்த அலாவுதீன் -

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
படகில் 'குவா குவா'!

சைனாபீவி தம்பதி. பிழைப்புத் தேடி வந்தவர்கள், ஒதுக்குப்புறமாக தங்கியிருந்த ஓலைக் குடிசைக்குள் பாய்ந்துவிட்டது வெள்ளம். ‘யாராவது காப்பாத்துங்க’ என்ற குரல் கேட்டு காப்பாற்றப்பட்டனர் அலாவுதீன், சைனாபீவி, அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகள்... மற்றும் சைனாபீவியின் வயிற்றில் இருந்த சிசுவும்! இப்பகுதியினரை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியவர்கள், மனிதநேய மக்கள் கட்சியினர். அதன் பொதுச்செயலாளர் தமீமும் அன்சாரி கூறும்போது...

‘‘டிசம்பர் 3-ம் தேதி மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தப்போ, இவங்க கதறல் கேட்டு போனோம். நிறைமாத கர்ப்பிணி சைனாபீவி, பிரசவவலியால துடிச்சிட்டு இருந்தார். வீட்டுக்குள்ள ஐந்தடிக்கு மேல தண்ணி இருக்க, அலாவுதீனும், அவரோட ரெண்டு பெண் பிள்ளைங்களும் கதறிட்டு இருந்தாங்க. விபரீதம் புரிஞ்சு சைனாபீவியை பத்திரமா படகில் ஏற்றினோம். வழியில் அவங்க வலி அதிகமாக,  படகில் இருந்த ஆண்கள் எல்லோரும் கீழே இறங்கிட்டாங்க. படகில் இருந்த பெண்கள் சேலையால மறைவு ஏற்படுத்தி பிரசவம் பார்க்க, அழகான ஆண் குழந்தை பிறந்தது. மணலி போலீஸுக்கு தகவல் சொல்லி, அங்கே தயாரா இருந்த ஆம்புலன்ஸில் சைனாபீவியையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சோம்!’’ - புத்துயிர் காப்பாற்றிய பரவசம் அவர் குரலில்.

படகில் 'குவா குவா'!

(பீகார் தம்பதி இந்தியில் பேசியதை மொழிபெயர்த்தார், அதே கட்சியைச் சேர்ந்த நாசர்)  ‘‘பிரசவவலியில் மனைவி, கழுத்தளவு தண்ணீரில் கதறும் பிள்ளைங்கனு சாவு பயத்தை அன்னிக்கு எங்க குடும்பமே உணர்ந்தோம். ஆனா, எங்களைக் காப்பாத்த கடவுள் இவங்க ரூபத்துல வந்தார்!’’ என்று அலாவுதீன் கலங்க, ‘‘இவங்க எல்லாம் இல்லைன்னா, இன்னிக்கு நானும் என் குழந்தை முகமதுவும் இல்லை!’’ என பச்சிளம் குழந்தையை நெஞ்சோடு அணைத்து நன்றி சொன்னார் சைனாபீவி!

பேரிடர் சமயங்களில் பிறந்துகொண்டே இருக்கிறது மனிதம்!

எஸ்.மகேஷ், க.தனலட்சுமி படங்கள்:என்.ஜி.மணிகண்டன்