Published:Updated:

'என்று தொலையும் உங்கள் ஆபாசப் பார்வை?!'

வக்கிரம்

டந்த வியாழன் அன்று இணையத்தில் சிம்பு, அனிருத் இருவரின் பெயரில் `யூடியூப்’பில் ஆபாச வார்த்தை தொனிக்கும் பாடல் ஒன்று வெளியாக, அதைக் கண்டித்து நெட்டிசன்கள்  கொதித்தெழுந்து தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகிறார்கள். ’குழந்தைகள் எப்போதும் கெட்டவார்த்தைகள் பேசுவதில்லை... அவர்கள் கேட்ட வார்த்தை களைத்தான் பேசுகிறார்கள்’ என இதே  இணையத்தில்  டிவிட்டரில் யாரோ ஒருவர் பதிவிட்டிருந்தார். ஆக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடல்களை முணுமுணுக்கும் தங்கத் தமிழகத்தில், கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆபாச அர்த்தம் தொனிக்கும் பாடலை வெளியிட்டிருப்பது கேவலமான செயல். இதுகுறித்து பாடலாசிரியர் தாமரையிடம் பேசினோம்.

'என்று தொலையும் உங்கள் ஆபாசப் பார்வை?!'

’’சமூகத்தை மிகவிரைவில் சென்று சேரும் ஊடகங்களில் திரைத்துறைக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் எல்லாமே மக்களை எளிதில் சென்றடையும் என்பதால் அவற்றைப் பயன் படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டிய

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொறுப்பு அனைவருக்குமே உள்ளது. இசை  மக்கள் மனதில் எளிதில் பதியும்போது, அதில் ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டுசெல்வது என்னைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது.

நான் திரைப்பாடல்கள் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை இரட்டை அர்த்த வார்த்தைகளையோ, ஆபாசமான வரிகளையோ சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் வரிகளையோ பயன்படுத்தியதில்லை. அப்படி மோசமான பாடல்களை எழுதக் கூடாது என்பதில் உறுதியோடு இருக்கிறேன். இதுவரை நான் 500 பாடல்கள் எழுதியிருக்கிறேன் என்றால், ஆயிரம் பாடல்கள் வரை என் கொள்கைகளுக்கு மாற்றாக இருப்பதாக கருதி நிராகரித்திருக்கிறேன்.

'என்று தொலையும் உங்கள் ஆபாசப் பார்வை?!'

குடிக்கிற, புகைப்பிடிக்கிற, அதிக வன்முறை, வன்புணர்வு காட்சிகளை குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்காவது திரையில் வைக்க மாட்டோம் என்று திரைத்துறையினர் உறுதி பூண்டால், அதன் தாக்கத்தை அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தில் உணர முடியும். ஓர் ஆபாசத்துக்கு கிடைக்கும் வரவேற்பே அடுத்தடுத்த ஆபாசத்தை நோக்கி செல்ல வைக்கிறது. ரவுடிகளும் குடிகாரர்களும் பெண்களைக் காதலிப்பதும், அவர்களை பெண்கள் வேண்டி விரும்பி காதல் செய்வதும் படத்தின் கருவாகவே அமையும்போது சமூகத்திலும் அதன் தாக்கம் இருக்கும் என்பதில் எந்த ஐயமில்லை. அதேபோல சமூகத்தின் எல்லாத் தரப்பும் சீரழிந்து வரும் நிலையில், திரைத்துறை மட்டும் புனிதமாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகூட வேடிக்கையாகத்தான் இருக்கும். அறம், விழுமியங்களைத் தொலைத்த சமூகத்துக்கு அறம், விழுமியங்கள் அற்ற படைப்புகள்தான் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க’’ என்றார் தாமரை.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத்தலைவர், வாசுகி கூறும்போது, ``அவர்கள்

'என்று தொலையும் உங்கள் ஆபாசப் பார்வை?!'

பாடியதாக சொல்லப்பட்ட இந்த பாடல், முழுவதுமாக கண்டனத்துக்குரியது. தவறான ஆபாசமான அர்த்தம் உள்ளடக்கிய தாக இருக்கிறது. பெண்களை மோசமாக அவமானப்படுத்துவதாக இருக்கும் இந்த  பாடல் தொடர்பானவர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் சீறலாக.

இதுபற்றி சிம்புவின் அப்பா டி.ஆரிடம் கேட்கலாம் என அவருடைய எண்ணைத் தொடர்பு கொண்டபோது, என்ன ஏது என எதையும் நாம் சொல்வதற்கு முன்பாகவே, ‘`நான் ரொம்ப டிராஃபிக்ல இருக்கேன். இப்ப பேசமுடியாது’’ என்றார்.

அடுத்தது, சிம்புவின் தங்கை இலக்கியாவிடம் இந்த பாடல் தொடர்பாக கேட்டபோது,

‘`எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது. நான் அந்த பாடலை கேட்கலை. நான் ஊரில் இல்லை’’ என்றார்.

ம்... ஊரெல்லாம் காரித்துப்பும் அந்தப் பாடலை தயவுசெய்து நீங்கள் கேடகாமலிருப்பதே நல்லது இலக்கியக்கா!

பொன்.விமலா, கே.அபிநயா

மாறிமாறி வரும் தகவல்கள்!

எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ‘இந்தப் பாடல் சிம்பு பாடியது இல்லை’ என்றும், ‘இந்தப் பாடலை அவர்கள் ஜாலியாக பாடினார்கள். ஆனால், அதை யாரோ அவர்களுக்கு தெரியாமல் வெளியிட்டுவிட்டார்கள்’ என்றும் மாறிமாறி தகவல்கள் வந்தபடி உள்ளன.

நம் இதழ் வெளியாவதற்குள் இந்த பாடல் `யூடியூப்’பில் இருந்து நீக்கப்பட்டும் இருக்கலாம்... நீக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், சமூகத்தை இழிவுபடுத்தும் இப்படியான புற்றீசல்கள் இனி ஒருபோதும் புறப்படாமல் இருந்தால் சரி!