அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

தீராத நோய்களைத் தீர்க்கும் திருவாசி!

குழந்தைகளின் பாலதோஷம், பெரியவர்களின் உடல் நோவு, இளம் வயதினரின் திருமணத்தடை...

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

பிரார்த்தனையால் இவை அனைத்தையும் நீக்கவல்ல தலம், திருவாசி!

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவாசி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊர், சிவ தலங்களில் 67-வதுதலம் என்றழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடிப்பரவசமடைந்த ஆலயம். காசியைவிடவும் கொஞ்சம் மேலான சக்தி கொண்டது என்று நம்பப்படுவதால், தினமும் கோயில் திறந்திருக்கும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சிவனையும் அம்பாளையும் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பிக்கொண்டே இருக்கிறது.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

இந்த ஆலயத்தில், மாற்றுரை வரதீஸ்வரர், சமீவனேஸ்வரர் என்றழைக்கப்படும் சிவபெருமான், தன் நாயகி ஸ்ரீபாலசௌந்தரி, பாலாம்பிகை என்றழைக்கப்படும் அம்பாளுடன் தம்பதியதராக பக்தர் களுக்குக் காட்சியளித்து வருகிறார். இங்கு வந்து தரிசித்தால் நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்புநோய், சர்ப்ப தோஷம், தீராத வயிற்றுவலி, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகள் குணமாகும். மேலும் பாலாரிஷ்டம் என்கிற பாலதோஷத்தால் கஷ்டப்படும் குழந்தைகள் குணம்பெறுகிறார்கள் என்பது நம்பிக்கை.

கோயிலின் புராணம் பேசிய குருக்கள் ஹரிஹரன், ‘‘மலைநாட்டை ஆண்டு வந்த கொல்லிமழவன் எனும் மன்னனின் மகள், தீராத நோய்களால் சிரமப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் மகள் குணமடையாத நிலையில் மகளின் வேதனையைப் பொறுக்க முடியாத மன்னன், மனம் வாடினான். அவளை திருவாசி கோயிலுக்கு அழைத்து வந்து, ‘ஆண்டவனே, என் அருமை மகளை நீதான் காப்பாற்ற வேண்டும், அவள் வேதனை தீரும்வரை உன்னிடமே விட்டுவிட்டுப் போகிறேன்... நீயே பார்த்துக்கொள்!’ என்று விட்டுவிட்டுப் போய்விட்டான்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சிலநாட்களில் இந்தக் கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்து, மீண்டும்

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

திருவாசி ஓடிவந்த மன்னன், சம்பந்தரிடம் நடந்ததை எல்லாம் சொல்லிக் கதறினான். சம்பந்தர், ‘துணிவளர் திங்கள் துளங்கி விளங்க’ எனும் பதிகத்தை சிவனை வேண்டிப் பாடி வணங்கினார். அதன் பிறகு நடராஜராக அவதரித்த சிவன் ஆனந்தக் கூத்தாடி, மன்னன் மகளின் எல்லா நோய்களையும் தன் காலடியில் மிதிபட்டுக் கிடக் கும் முயலகன் போல் மாற்றி அழித்தார். அப் போது சர்ப்பம் மேல் ஆடியதால், ‘சர்ப்ப நடராஜர்’ என்று அழைக்கப் பட்டார். அதன் சாட்சியாக இங்குள்ள நடராஜர், சர்ப்பத்தின் மேல் நின்றபடி காட்சி தருகிறார். இது வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சி! இதுமட்டுமல்லாமல் சிவனுக்கு ‘மாற்றுரைவரதீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. அதற்கான பெயர்க்காரணமும் சுவாரஸ்யமானது!’’ என்றபடியே தொடர்ந்தார்...

‘‘சுந்தரர், திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அப்படிப் போகும் இடங்களில் சிவனை பக்தியுடன் கும்பிட்டுவிட்டு தனது நண்பரான சிவனிடம் உரிமையுடன் பொன் கேட்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அந்த வகையில் ஒருமுறை திருவாசிக்கு வந்திருந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக பொன் தராமல் அமைதியாக இருந்தார் சிவன். கோபமடைந்த சுந்தரர், ‘இங்கு சிவன் இருக்கிறாரா இல்லையா...’ என்று பதிகப்பாட்டில் இகழ்ந்து பாடினார்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

நீண்ட நேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்புக்கு பதிலாக மண்முடிப்பை கொடுத்தார். சிவன் கொடுத்த பொன் தரமானதுதானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வரவே, அங்கு வந்த இரண்டு வணிகர்களிடம் கொடுத்து சோதித்தார். அவர்களும் அதை வாங்கிக் கொண்டார்கள். அதில் ஒருவர் அந்த மண்கட்டியை உரசிப் பார்த்துவிட்டு, ‘பொன் தரமானதுதான்!’ என்று சொல்ல, உடன் வந்தவரும் ‘ஆமாம் தரமான தங்கம்தான்!’ என ஆமோதிக்க, அந்த மண்ணாங்கட்டி தகதகவென மின்னியது. சிறிது நேரத்தில் அந்த இருவரும் மறைந்துவிட, வியந்து நின்ற சுந்தரர் அப்போதுதான், அங்கு வந்த வணிகர் சிவபெருமான் என்பதையும், மற்றொருவர் மகாவிஷ்ணு என்பதையும் உணர்ந்தார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் இங்கு குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு ‘மாற்றுரைத்த வரதீஸ்வரர்’ என்று பெயர் வந்தது. அதுவே, ‘மாற்றுரைவரதீஸ்வரர்’ என மாறிவிட்டது!’’ என்றார் குருக்கள்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

ஆலயத்துக்கு தரிசனத்துக்காக வந்திருந்த கும்பகோணத்தை அடுத்த வலங்கைமானைச் சேர்ந்த சசிகலாவை சந்தித்தோம். ‘‘என் குழந்தை ஸ்ரீஹரி அர்ஜுன், பிறந்த கொஞ்ச நாட்கள் நல்லா இருந்தான். சில நாட்களுக்குப் பிறகு பால் குடிக்கமாட்டான், காரணம் இல்லாமல் கத்திக்கிட்டே இருப்பான், பால் குடித்தால் செரிமானம் ஆகாது, மூக்குலயும் வாயுலயும் பால் எடுத்துடுவான். இப்படியே அவன் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க... என்ன பண்ணுறதுன்னு தெரியாம தவிச்சோம். எத்தனை டாக்டர் பார்த்தும் பலனில்லை. அப்போதான் அவனுக்கு பாலதோஷம் இருப்பதாவும், இந்தக் கோயிலுக்கு வந்தா குணமடையும்னும் சொன்னாங்க. இங்க வந்து அம்பாளைத் தரிசிச்சு, இங்க கொடுத்த தீர்த்தத்தைப் பிள்ளைக்குக் கொடுத்தேன். குணமாகிட்டான். இதுவரை 7 முறை இங்க வந்துட்டு போயிருக்கோம். இப்போ ஹரிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு வயசாகிருச்சு... நல்லா இருக்கான்!’’ என்றபடி கணவர் கண்ணன் கையில் இருக்கும் தன் குழந்தையைக் கொஞ்சுகிறார்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

பூஜையை முடித்துவிட்டு வந்த குருக்கள் ஹரிஹரன், அம்பாளின் வரலாற்றைத் தொடர்ந்தார்... ‘‘திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். அவள் பாலாம்பிகை, பாலசுந்தரி என்று அழைக்கப்பட்டாள். ஆலயத்தில் நடக்கும் முதல் பூஜை அம்பாளுக்குதான். அம்பாள் சந்நிதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அருகில் அன்னமாம்பொய்கை தீர்த்தம் இருக்கிறது. திருமணமாகாத  ஆண்/பெண்கள் தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்து திருக்கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகைக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்தால், திருமணத்தடை நீங்கி நல்ல வரன் அமையும். பாலதோஷம் அல்லது பாலரிஷ்டம் எனப்படும் தோஷத்தால் சிரமப்படும் குழந்தைகளை தொடர்ந்து மூன்று ஞாயிறு கோயிலுக்கு அழைத்து வந்து அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்ட கையோடு அபிஷேக தீர்த்தத்தை பருகி வந்தால், மூன்று வாரங்களுக்குள் குழந்தைகள் குணமடைவார்கள். வலிப்பு, வயிற்று வலி, வாதம் உள்ளிட்ட தீராத நோயால் அவதிப்படுபவர்கள், தொடர்ந்து ஒரு மண்டலம்...

48 நாட்கள் திருக்கோயிலுக்கு வந்து ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அர்ச்னை செய்துவந்தால் 48 நாட்களுக்குள் அந்த நோய் விட்டுவிலகும்!’’ என்றார், அந்த அற்புதங்களை நேரில் பார்த்து வரும் அனுபவத்தில்!

சி.ஆனந்தகுமார், படங்கள்:என்.ஜி.மணிகண்டன்