Published:Updated:

'தனியே... தன்னந்தனியே!'

காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்

'தனியே... தன்னந்தனியே!'

காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிள் பயணம்

Published:Updated:

ம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் நம்மைக் கோபப்படுத்தும் போதெல்லாம், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் கொந்தளிப்பார்கள் பலர். கோபத்தைப் பக்குவப்படுத்தி, சுற்றி இருக்கும் அனைவரும் தங்களைத் திரும்பிப் பார்க்கும்படியான முயற்சி எடுப்பார்கள் சிலர். அந்த சிலரில் ஒருவர், சென்னையைச் சேர்ந்த 21 வயது அனஹிதா ஸ்ரீபிரசாத்!

'தனியே... தன்னந்தனியே!'

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமை, அவர்களுக்கு எதிராக நடக்கும் உரிமை மீறல்கள் போன்றவற்றை எதிர்த்து தன் எண்ணத்தைப் பதிவு செய்ய காஷ்மீர் டு கன்னியாகுமரி, தனி ஆளாக சைக்கிளில் பயணம் செய்திருக்கிறார் அனஹிதா. இதற்காக இரண்டு மாத காலம் செலவிட்டு, கிட்டத்தட்ட 4,500 கிலோ மீட்டர் பயணித்து இருப்பவரின் குரலில் ஆனந்தம்!

அறிமுகம்!

ஹாய்... நான் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரி. ஃபிலிம் மேக்கிங், எடிட்டிங்கில் நிறைய ஆர்வம். சின்னவயசில் இருந்தே அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ்னா ரொம்பப் பிரியம். குறிப்பா, சைக்கிளிங். நானும் என் சகோதரியும் மகாபலிபுரம் வரை, சாயங்காலம் சூரியன் மறைவதைப் பார்த்துட்டே சைக்கிளிங் செய்வோம். சென்னை சைக்கிளிங் குழுவில் (WCCG - We are Chennai Cycling group) நான் மெம்பர். தினமும் காலை சுமார் 30 கிலோமீட்டர் வரை சைக்கிளிங் போவோம்.

ஐடியா..!

'தனியே... தன்னந்தனியே!'

விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சவுடன் தனியா வடஇந்தியாவைச் சுற்றி வந்தேன். பனிச்சறுக்கு விளையாட்டில் கோர்ஸ் பண்ணி இருக்கேன். நியூஸ்பேப்பரில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய ஒரு செய்தியைப் படிச்சப்போ, ‘இவங்களை எல்லாம்...’ என்ற அந்த காமன்மேன் கோபம் எனக்கும் வந்தது. ஆனாலும், நம்மால என்ன பண்ண முடியுமோ அதைத்தானே பண்ண முடியும். சட்டுனு ஒரு ஐடியா. என் சைக்கிள் பெடலை மிதிச்சு நாட்டை குறுக்கா ஒரு கோடு போட்டதுபோல பயணிச்சு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் நம்ம எண்ணத்தைப் பதிவு செஞ்சா, அதுக்கு ஒரு மரியாதை இருக்கும்னு தோணுச்சு. ‘அய்யோ... ஒரு பொண்ணு எப்படித் தனியா’னு குரல்கள் கேட்க கேட்க, என் முடிவும், மன உறுதியும் வலுப்பெற்றது.

பிராப்ளம்..!

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி அருகே சைக்கிளிங் பண்ணிட்டு இருந்தப்போ, ஒரு ட்ரக் ஓட்டுநர் என் சைக்கிளை மடக்கி, பணம் கொடுத்தாதான் விடமுடியும்னு மிரட்டினார். திகைச்சுட்டேன்தான். ஆனா, சுதாரிச்சுட்டேன். ஹைவே போலீஸ் நம்பருக்கு கால் செய்தேன். உடனே உதவிக்கு வந்தாங்க. பிறகு, அவங்களோட பெர்சனல் போன் நம்பர்களையும் கொடுத்து, வாழ்த்துகள் சொல்லி அனுப்பினாங்க. பிரச்னைகளைவிட, இந்தப் பயணம் வழியெங்கும் எனக்கு நிறைய நல்ல மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் கொடுத்துச்சு.

டிராவல்..!

'தனியே... தன்னந்தனியே!'

இந்தப் பயணத்துக்காக, மூணு மாசம் பிரத்யேகப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்கத் தயாராவே கிளம்பினேன். பெப்பர் ஸ்ப்ரே ரெண்டு கேன்கள், டூல் கிட் ஒண்ணு, ரெண்டு பைகள் நிறைய துணி, எனர்ஜி பார்கள் எடுத்துக்கிட்டேன். தினமும் காலையில் சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சு, இரவு ஏழு மணி வரை பயணிப்பேன். அப்புறம் சாப்பிட்டு, அந்த ஊர்ல இருக்கும் தெரிஞ்சவங்க வீட்லயோ, அல்லது ஹோட்டல்கள்லயோ தங்கி ஓய்வெடுப்பேன். ஹோட்டல்கள் என்றாலே பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுவரை பயந்துட்டு இருந்த எனக்கு, இந்தப் பயணத்தில் நான் கடந்த எல்லா ஹோட்டல்களும் எனக்கு நல்ல அனுபவங்களாவே அமைந்தன.

மெசேஜ்..!

இந்தப் பயணத்துக்கு கிடைச்ச அங்கீகாரம் ரொம்ப சந்தோஷமா இருந்தது. காஷ்மீர் டு கன்னியாகுமரி சைக்கிளிங் அனுபவத்தில் சொல்றேன்... நம்ம நாட்டுல பொதுவெளியில் கிடைக்க வேண்டிய பாதுகாப்பைவிட, வீட்டுக்குள் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பைதான் சரிசெய்ய வேண்டியிருக்கு. உங்க சகோதரன், உங்க ஆண் பிள்ளையில் இருந்து ஆரம்பிக்கலாம்... பெண்களை மதிக்கக் கற்றுத்தர வேண்டிய பாடத்தை!
 

 கோ.இராகவிஜயா