அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

கம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...

சமூக சேவை

நலிந்த குடும்பத்துப் பெண்களை நிமிர வைக்கும் 'அநியூ'!

பி.இ., பி.டெக் படித்த பெண்களே தகுந்த வேலை கிடைக்காமல் தடுமாறும் இந்தக் காலத்தில், ப்ளஸ் டூ அல்லது டிகிரி படித்த பெண்களுக்கு, மாதம் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வீடு தேடி வருகிறது. உபயம்: சென்னை அண்ணா நகரில், நடுத்தர மற்றும் நலிந்த குடும்பத்துப் பெண்களுக்காக இயங்கும் ‘அநியூ’ (ANEW - Association for Non Traditional Employment of Women) தன்னார்வ நிறுவனம்.

கம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...

ஷா வாலஸ், பெஸ்ட் கிராம்ப்டன் போன்ற பிரபல தொழில் நிறுவனங்களில் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற குமார் - லக்ஷ்மி குமார் தம்பதியின் ‘எண்ணக் குழந்தை’தான்... ‘அநியூ’! 10 பெண்கள் கொண்ட கமிட்டியை நிறுவி, வசதியற்ற குடும்பத்துப் பெண்களுக்கு, வழக்கமான வேலையாக இல்லாமல் புதுமையான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் எண்ணத்தில், 1997-ல் இந்தச் சேவையைத் தொடங்கினர்.

‘‘இங்கே கம்ப்யூட்டர் பயிற்சியில் தொடங்கி கார் டிரைவிங் வரைக்கும் ஏராளமான தொழிற்பயிற்சிகளை, அனுபவம் மிக்க ஆசிரியர் களைக் கொண்டு அளித்து வருகிறோம்...’’

- எளிய புன்னகையுடன் அறிமுகமாகிறார், கமிட்டி மெம்பர்களுள் ஒருவரான டாக்டர் அன்னலக்ஷ்மி.

‘‘இதுவரை ஆயிரக்கணக்கான பெண்கள் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறார்கள். முக்கியமான தகவல்.... இங்கே பயிற்சிக்கோ, வேலையில் அமர்த்துவதற்கோ எந்தவிதமான கட்டணமும் இல்லை. அனைத்தும் இலவசம்!’’ என்று ஆச்சர்யம் தந்தார் டாக்டர் அன்னலக்ஷ்மி.

கம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...

இலவசம் என்பதற்காக ஏனோதானோ வென்று யாரையோ வைத்துப் பயிற்சி தராமல், கம்ப்யூட்டருக்கு என்.ஐ.ஐ.டி நிறுவனம், கார் டிரைவிங்குக்கு மாருதி நிறுவனம், நர்ஸிங் பயிற்சிக்கு பிரபல மருத்துவமனைகள்... என பக்காவாகப் பயிற்சி தருவது, ‘அநியூ’வின் சிறப்பு!

‘‘இங்கே 3 மாதங்களோ, 6 மாதங்களோ தொழிற்கல்வி பெற்ற பிறகு, பெரிய நிறுவனங்களில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெறும் பெண்கள், பின்னர் பணியில் அமர்வார்கள். வசதி அதிகம் இல்லாத பெண்களுக்கு, பயிற்சியின்போதே தரமான, பிரபலமான நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பும் அதற்கான சான்றிதழும் கிடைப்பது, கூடுதல் சிறப்பம்சம். ‘அநியூ’ நிறுவனத்தில் பலதரப்பட்ட பிரிவுகளில் பயிற்சி பெற்ற பெண்கள், போலாரிஸ், சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன், அகர்வால் கண் மருத்துவமனை, வாசன் ஐ கேர், சென்னை பப்ளிக் ஸ்கூல், மாருதி, ஆர் ஆர் டானலி போன்ற பல்வேறு சிறந்த நிறுவனங்களில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்’’ என்ற அன்னலக்ஷ்மி,

‘‘கார் டிரைவிங் பயிற்சி பெற்ற ஏழைப் பெண்களில் பலர் நல்ல இடங்களில் ஓட்டுநர்களாகப் பணியில் அமர்ந்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் கயல்விழி, இங்கே பயிற்சி பெற்ற பயனாளிதான். பள்ளிப் பேருந்துகளிலும் சிலர் ஓட்டுநர்களாக உள்ளனர். ஹோட்டல் சவேரா, ஜி.ஆர்.டி. போன்ற பெரிய நிறுவனங்களில் விருந்தினர்களின் காரை பார்க் செய்யும் ‘வேலட் பார்க்கிங்’ டிரைவர்களாகவும் பணிபுரிகின்றனர். கார் டிரைவிங் மட்டுமல் லாது, கார் பேஸிக் மெக்கானிசம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது.’’ என்றபோது, வியப்பும் மரியாதையும் அதிகரித்தது.

கம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...

தொடங்கிய காலம் முதல் ‘அநியூ’வில் பணியாற்றும் சுப்பையன், ‘‘ப்ளஸ் டூ, டிகிரி முடிச்ச நலிந்த குடும்பத்துப் பெண்களுக்காக ‘நான் ட்ரடிஷனல்’ எம்ப்ளாய்மென்ட்டை உருவாக்கணும்னுதான் இதைத் தொடங்கினோம். முதன் முதல்ல ஒரு கார் ஷெட்டில், 10 பெண்களுடன் இந்தப் பயிற்சி தொடங்கிச்சு. அப்புறம் கொஞ்சம் முன்னேறி ஒரு வாடகை வீட்டுக்கு மாறிச்சு. ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பேஸில் செல்லர்ஸ் என்கிற நன்கொடையாளர், ‘அநியூ’வின் நேர்மையான சேவையைப் பாராட்டி, இந்த வீட்டை நன்கொடையாகக் கொடுத்தார். இங்கே வேலை செய்யும் 8 ஸ்டாஃப் போக, வெளியிலிருந்தும் நிறையப் பயிற்சியாளர்கள் வந்து யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ், கவுன்சிலிங் வகுப்புகள் எடுக்கிறாங்க!’’ என்கிறார்.

இங்கே வழங்கப்படும் பயிற்சிகள் குறித்துப் பேசினார், டாக்டர் அன்னலக்ஷ்மி. ‘‘இங்கு 7,000 பேருக்கு மேல் தொழிற்பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுள் 80 - 85 சதவிகிதப் பெண்களுக்கு நல்ல வேலையும் கிடைத்துள்ளது. அடிப்படை கணினி பயிற்சி (பேஸிக் ஐ.டி. கோர்ஸ்), டேலி மற்றும் அக்கவுன்ட்டிங், டி.டி.பி (போட்டோஷாப், கோரல் டிரா, இன்டிசைன், வெப்டிசைனிங் இணைந்தது), ஹோம் நர்ஸிங், லேப் டெக்னீஷியன், விஷன் கேர் டெக்னிகல் டிரெய்னிங், பெண்களுக்கான தற்காப்புக் கலை பயிற்சியாளர் (இங்கே வழங்கப்படும் 15 நாட்கள் ‘கர்மகா’ தற்காப்புக் கலை பயிற்சியை முடித்த பெண்கள், அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ‘கர்மகா’ தற்காப்புக் கலையைக் கற்றுத் தருகின்றனர்), ஆட்டோ மற்றும் கார் டிரைவிங் போன்றவை இங்கு வழங்கப்படும்பயிற்சிகள்.

கம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...

கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ், லைஃப் ஸ்கில்ஸ், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. காதுகேளாத, வாய் பேசமுடியாத பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புக்கும் உதவி செய்கிறோம். அவர்களுக்கு மட்டும் பேருந்துக் கட்டணம் வழங்குகிறோம்!’’ என்றார். 

விப்ரோவில் பணியாற்றும் ஆஷியா, கேப் ஜெமினி நிறுவனத்தில் வேலை பார்க்கும் செவித்திறனற்ற மாற்றுத்திறனாளி ஜோதி, போலாரிஸின் ஊழியர் டெய்ஸி, டிரைவிங் ஸ்கூல் நடத்தும் ரேவதி போன்ற பலர் ‘அநியூ’ நிறுவனத்தால் உருவாகி, வாழ்வில் ஜெயித்த வெற்றியாளர்கள்.

‘‘ஏழைக் குடும்பத்துப் பெண்கள் பலர், தம்பி, தங்கையின் கல்வி, அப்பாவின் தொழிலுக்கு உதவி, கடன் கட்டுதல், அம்மாவின் மருத்துவச் செலவு என குடும்பத்தின் தூண்களாக நின்று காக்க... இங்கே பெறும் பயிற்சியும், வேலைவாய்ப்பும், அதனால் கிடைக்கப்பெறும் ஊதியமும் பெரிய ஊன்றுகோல்!’’ என்கிறார்கள் அனைவரும் நன்றியுடன்!

வெற்றியாளர்களை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கிறது, ‘அநியூ’!

பிரேமா நாராயணன் , படங்கள்:கே.கார்த்திகேயன்

ஹோம் நர்ஸிங்!

கேரளாவில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தொடங்கிய ‘கான்செப்ட்’தான் ஹோம் நர்ஸிங். தமிழ்நாட்டில் அந்தப் பயிற்சியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ‘அநியூ’ நிறுவனம்தான். 6 மாதப் பயிற்சியில், 3 மாதங்கள் தியரி பயிற்சியாகவும், மீதி 3 மாதங்கள் சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன், போன் அண்ட் ஜாயின்ட் போன்ற மருத்துவமனைகளில் செய்முறைப் பயிற்சியாகவும் வழங்கப்படுகின்றன. பயிற்சியின்போது, மாதம் 600 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் மற்றும் முதியவர் நலம் பேணும் பயிற்சியைக் கூடுதலாகப் பெறுவதால், குழந்தைகள் அல்லது வயதானவர்களை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குப் போகும் குடும்பங்களில் இவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கிறது. நல்ல வருமானமும் வருகிறது. இதுவரை ‘அநியூ’ மையத்தில் 2,136 பெண்கள் ஹோம் நர்ஸிங் பயிற்சி முடித்திருக்கிறார்கள். இப்போது 88-வது பேட்ச் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!