அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்!

அன்பு உள்ளம்

கால்நடைப் பிராணிகள் பராமரிப்பையே தன் வாழ்வின் லட்சியமாகக்கொண்டு செயல்பட்டு வருபவர்,

ஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்!

சென்னையைச் சேர்ந்த டாக்டர் சாதனா ராவ். பசு இனத்தைப் பாதுகாக்க நீலாங்கரை, மெப்பேடு, திருவள்ளூர் - வெங்கடாபுரம், திருப்போரூர் என நான்கு இடங்களில் ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் அனிமல் வெல்ஃபேர்’ என்ற பெயரில், அரசு அங்கீகாரத்தோடு தனது கோ மடத்தை நிறுவி செயலாற்றி வருகிறார், சாதனா. இவ்விடங்களில் பசு, காளை, எருது, ஆடு, கோழி, வாத்து ஆகியவை பராமரிக்கப்படுகின்றன. தன் 25 வயதில் இந்தப் பயணத்தை தொடங்கிய சாதனா, இப்போது 70 வயதில் இருக்கிறார். வாயில்லா ஜீவன்கள் உடனான தன் 40 வருடத்துக்கும் மேற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறார், டாக்டர்...

ஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்!

 ‘‘என் தாத்தா மிகப்பெரிய பசுமடம் ஒன்றை பராமரித்து வந்தார். எனவே, சிறுவயதிலேயே கால்நடைகள் மீது பிரியம் கொண்டேன். எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பை முடித்தவுடன், கால்நடை பராமரிப்பில் எனது பணிகளைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் ஆதரவற்ற சில பசுக்களை வீட்டிலேயே வைத்து வளர்த்தேன். பசுக்களின் எண்ணிக்கை அறுபதை தாண்டியபோது, அதற்கென தனி இடம் தேடி, மயிலாப்பூரில் ஒரு பசுமடம் அமைத்தேன். சில இடமாற்றங்களும் கண்டேன்.

 ப்ளூ கிராஸ் அமைப்பால் ஒப்படைக்கப்பட்ட மாடுகள், கோயில்களில் இருந்து ஒப்படைக்கப்பட்ட மாடுகள், பால் கறவை நின்றதும் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட மாடுகள் என்று அனைத்தையும் பாதுகாத்து வர... என் பசு மடம் விரிவடைந்தது. நாளடைவில் நல்ல உள்ளங்கள் ஒன்று சேரச் சேர, இப்போது நான்கு பசு மடங்களில் கிட்டத்தட்ட 1,200-க்கும் மேற்பட்ட பசுக்களை, 100 பணியாளர்களுடன் பராமரித்து வருகிறேன்’’ என்றவர்,

‘‘ஆலயங்களில் நந்தி, பைரவர், அனுமன், நாகம் என பல விலங்கு வடிவங்களை கடவுள்களாக வணங்குகிறோம். அதேபோல, ஏர் உழும் காளைகள், பால் தரும் பசு, உரமாகும் சாணம், பூச்சிவிரட்டியாகக் கோமியம் என்று நம் விவசாயமும் வாழ்க்கை முறையும் முன்பு பசு, காளைகளை நம்பியே இருந்தது. இன்றோ அவற்றின் நிலை மிகப் பரிதாபம்!

மனிதன் விளைச்சல் மற்றும் மேய்ச்சல் நிலங்களை ரியல் எஸ்டேட்களாக அபகரித்தான். சாணி போடுகிறது, ரோட்டில் நடக்கிறது என, மாடுகள் கார்ப்பரேஷன் எல்லைக்கு அப்பால் துரத்தப்பட்டுவிட்டன. எனவே, அநாதரவாகத் திரியும் மாடுகளைக் கண்டால், அருகில் உள்ள பசுமடங்களில் ஒப்படையுங்கள். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல மாடுகளை நாங்கள் மீட்டு வைத்துள்ளோம். அரசு ஏதேனும் இட ஏற்பாடு செய்துகொடுத்தால் உதவியாக இருக்கும்!’’ என்ற சாதனா,

ஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்!

“இறைச்சித் தேவைக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் தினமும் ஆயிரக்கணக்கில் மாடுகள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகின்றன. ஈவு இரக்கம் இல்லாமல் அவற்றை லாரியில் நெருக்கி அடைத்துச் செல்லும்போது, ஒரு மாட்டின் கொம்பு மற்றொரு மாட்டின் வயிறு அல்லது கழுத்தைக் குத்தி ரத்தம் சொட்டும். மாடுகள் உணவு, நீர் மறுக்கப்பட்டே பாதி ஜீவன் இழந்துவிடும். இப்படி மாடுகள் கடத்தப்படும் தகவல் சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கிடைத்தால், உடனடியாக காவல்துறை உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கி விடுவேன். இதனால் கொலை மிரட்டல்கள் வரைச் சந்தித்திருந்தாலும், இன்றும் ஓடி ஓடிக் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறேன் அந்த வாயில்லா ஜீவன்களை!’’ எனும் சாதனாவின் குரலில் தொனிக்கிறது, உறுதி.

‘‘மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் முன்பு, அதற்கு யூதனேஸியா (கருணைக்கொலை) அடிப்படையில் ஊசி அளித்து, உடலை மரத்துப் போகச் செய்து, வெட்ட வேண்டும். இது மாடுகளின் நன்மை கருதி மட்டுமல்ல. அவ்வாறு செய்யாவிட்டால், அச்சம் காரணமாக அப்போது அட்ரினாலின் என்ற ஹார்மோன் அதற்கு அதிகமாகச் சுரந்து, அந்த மாமிசத்தை உண்ணும் மக்களுக்குதான் அந்தத் தீங்கு வந்து சேரும்’’ என்ற சாதனா,

‘‘ஒரு தேசம் எத்தகையது என்பதனை அந் நாட்டு மக்கள் மிருகங்களை நடத்தும் விதத்தை வைத்தே கூறலாம் என்பார்கள். கரிசனம் காட்டுங்கள்... அந்த ஐந்தறிவு உயிர்களிடம்!’’

- கைகூப்புகிறார், டாக்டர் சாதனா.

கட்டுரை மற்றும் படங்கள்: ச.சந்திரமௌலி

பசுவுக்கு உணவளிக்கும்போது!

•  ‘‘பசுக்களுக்கு உணவளிப்பது மகா புண்ணியம். ஆனால், புண்ணியம் என்று நினைத்து பாவம் செய்துவிடாதிருக்க சில குறிப்புகள்...

•  வீட்டில் மீதமாகும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் கொடுக்கலாம். ஆனால், அழுகியது வேண்டாம்.

•  பசுவுக்கு வாடிக்கையாக உணவளிப்பவர்கள் தவிடு வாங்கி வைத்துக் கொடுக்கலாம்; கம்பு, சோளம் ஆகியவற்றை ஊறவைத்தோ, வேகவைத்தோ கொடுக்கலாம். எக்காரணம் கொண்டும் அரிசி சாப்பாடு கொடுக்க வேண்டாம். அது பசுவுக்கு வயிற்றில் அசிடிட்டியை உண்டாக்கும்.

•  அகத்திக்கீரை கொடுக்கும்போது கனமான தண்டுகளைத் தவிர்த்து, கட்டினை பிரித்து சற்று மெல்லிய தண்டுகளை மட்டும் கொடுக்கவும். இல்லையென்றால் மாடு மெல்லும்போது தண்டுகள் உடைந்தாலும், அது கூராக இருந்தாலும் பசுவின் வயிற்றைக் கிழித்துவிடும்.

•  சுபதினங்களில் பசுமடம் சென்று சேவை புரிவது, இயன்ற உதவி செய்வது மிகவும் உன்னதமானது.’’