Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் Season 2 , episode 4

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் Season 2 , episode 4

Published:Updated:

பொங்கல் வாழ்த்துகள்!

சென்ற இதழில் என் வாழ்க்கையில சந்திச்ச பெரிய இழப்பு, ஃபேஷன் டிசைனர் ஆனது, ‘பரதேசி’ படவாய்ப்பு பத்தியெல்லாம் பேசினேன். தேசிய விருது அறிவிப்பைக் கேட்டு ஷாக் ஆனது, டெல்லியில் விருது வாங்கின அனுபவம், ‘பரதேசி’ படத்துக்குப் பிறகான சினி புராஜெக்ட்ஸ், என் நட்பு வட்டம் பற்றியெல்லாம் ஷேர் பண்ணிக்கலாமா?!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

‘பரதேசி’ படம் ரிலீஸ் ஆகி சில வாரங்கள் இருக்கும். வழக்கம்போல என் பொண்ணை ஸ்விம்மிங் கிளாஸுக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். என் ஃப்ரெண்டு ஒருத்தர் கால் பண்ணி ‘கங்கிராட்ஸ்!’னு சொன்னாரு. ‘எதுக்கு?’னு கேட்க, ‘உனக்கு நேஷனல் அவார்டு கிடச்சிருக்கு!’னு சொன்னாரு. ‘டோன்ட் ஜோக்!’னு கட் பண்ணிட்டேன். அடுத்த நிமிஷமே ‘பரதேசி’ ஹீரோயின் வேதிகா கால் பண்ணி, ‘கங்கிராட்ஸ்! உங்களுக்கு நேஷனல் அவார்டு கிடச்சிருக்கு!’னு சொன்னாங்க. ‘நீங்களுமாங்க?! எதுக்குங்க கலாய்கிறீங்க?!’னு சிரிச்சிட்டு வெச்சுட்டேன். அடுத்த கால் ஐஸ்வர்யாகிட்ட இருந்து. ‘என்னடீ, எல்லாரும் பேசிவெச்சு கலாய்க்கிறீங்களா?’

- போனை வெச்சுட்டேன்.

ஆனா, மூணு பேரும் எப்படி ஒரே விஷயத்தைச் சொல்லி கலாய்க்க முடியும்னு குழம்பி, பாலா அண்ணாவோட மனைவி மலர் அண்ணிக்கு போன் செய்து, ‘எல்லாரும் எனக்கு அவார்டு கிடைச்சிருக்குன்னு கலாய்க்கிறாங்க!’னு சொல்ல, ‘ஆமா, உனக்கு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கு!’னு அவங்க சொன்னப்போவே, `செகண்ட் கால்’ல பாலா அண்ணன். அங்க கட் பண்ணிட்டு, இங்க அட்டெண்ட் பண்ணினா, ‘வாழ்த்துகள்!’னு சொன்னார். அப்போவும் நம்பாம, ‘எதுக்குண்ணா?’னு கேட்க, ‘நீ தேசிய விருது வாங்கிட்ட!’னு சொன்னார். அப்போதான் நம்பினேன்!

உடனே, ஸ்விம்மிங் கிளாஸ்ல இருந்து என் பொண்ணக் கூட்டிட்டு பாலா அண்ணா வீட்டுக்குப் போகலாம்னு வெளிய வந்தா, மீடியா வந்துட்டாங்க. மீடியாவுக்குப் பதில் சொல்லிட்டு, பாலா அண்ணா வீட்டுக்குப் போனா, நான் வருவேன்னு எதிர்பார்த்து பொக்கே வாங்கி வெச்சிருந்தார். ‘எல்லா மீடியாவுக்கும் சரியா ரெஸ்பாண்ட் பண்ணணும்’னு அறிவுரை சொன்னார். தொடர்ந்து, வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தது.

‘ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவுல முதல் முறையா ‘பாரதி’ படத்துக்கு கிருஷ்ணமூர்த்தி சார்தான் வாங்கியிருக்கார். ‘ஹேராம்’ படத்துக்கு சரிகா மேடம் இந்த விருதை வாங்கியிருக்காங்க. அவங்க ஒரு வடஇந்தியர் என்ற அடிப்படையில, தென்னிந்தியாவில் இருந்து ஆடை வடிவமைப்புக்கு தேசிய விருதுபெறும் முதல் தமிழ்ப்பெண் நீங்க!’னு பலரும் குறிப்பிட்டு வாழ்த்தினப்போ, மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேணும்! குறிப்பா, ரஜினி அப்பாவும் லதா அம்மாவும் வீட்டுக்கு வரச்சொல்லி வாழ்த்தினாங்க.

தேசிய விருது அறிவிப்பு வந்த சில மாதங்கள் கழிச்சு, டெல்லியில் விருது வாங்கும் நிகழ்ச்சி. பொதுவா தேசிய விருதுகள் வழங்கப்படுற நாளைக்கு முந்தின நாள் ரிகர்சல் நடக்கும். ரிகர்சலில் விருது வாங்கும் எல்லா கலைஞர்களும் எப்படி நிகழ்ச்சி மேடையில வந்து நின்னு, ஜனாதிபதிகிட்ட விருது வாங்கிட்டுப் போகணும்னு சொல்லிக்கொடுப்பாங்க. ஜானாதிபதிகிட்ட விருது வாங்கிட்டு, அவர்கிட்ட எதுவும் பேசாம மேடையை விட்டு வந்திடணும் என்பதுதான் முக்கிய வலியுறுத்தல்.

என் கல்யாணத்துக்கு சோனியா காந்தி மேடம் வரமுடியாமப் போனதால, அப்போ மினிஸ்டரா இருந்த பிரணாப் முகர்ஜி சார் வந்திருந்தாரு. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிகிட்ட தேசிய விருது வாங்கின நான், ‘சார், என் கல்யாணத்துக்கு நீங்க வந்தப்போ உங்க கையால கிஃப்ட் வாங்கினேன்; இப்போ விருது வாங்குறேன்!’னு சொல்ல, அவர் சிரிச்சுட்டார். பக்கத்துல இருந்த அப்போதைய மினிஸ்டர் கபில் சிபல் என் முதுகில் தட்டிக்கொடுத்தார்.

விருது நிகழ்ச்சியில் எனக்கு முன்னாடி அமர்ந்திருந்த ‘காஹானி’ படத்தின் இயக்குநர் சுஜாய் கோஷ், ‘காஸ்ட்யூம் டிசைனர் அவார்டு இந்த வருஷம் எப்படி சவுத் இண்டியாவுக்குப் போச்சு? எங்க அவார்டை நீங்க எடுத்துக்கிட்டீங்களான்னு?!’ எங்கிட்ட தமாஷா சொன்னார். பாலிவுட்டில் காஸ்ட்யூம் டிசைனருக்கான தேசிய விருதை பலமுறை வாங்கின சீனியர் காஸ்ட்யூம் டிசைனர் டாலி அலுவாலியா, நான் விருது வாங்கின வருடத்துல, ‘விக்கி டோனர்’ங்கிற இந்தி படத்துல நடிச்சதுக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வாங்கினாங்க. நிகழ்ச்சியில், ஒரு சீனியரா அவங்க என்னை வாழ்த்தினதோட, எனக்கு கொடுத்த ஊக்கம் வியப்பாவும், சந்தோஷமாவும் இருந்துச்சு. அதே வருஷம் லண்டன்ல நடந்த ‘இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல்’லயும் எனக்கு பெஸ்ட் காஸ்ட்யூம் டிசைனர் அவார்டு கிடைச்சது, போனஸ் சந்தோஷம்

‘பரதேசி’ படத்துக்கு அப்புறம், திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்க்காம என் ஃபேஷன் டிசைனர் வேலையை கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, அடுத்து ஒரு ஃபிரெஞ்சு பட வாய்ப்புக் கிடைச்சது. ‘பரதேசி’ படம் ரிலீஸ் ஆனப்போ படம் பார்த்துட்டு தியேட்டர்ல இருந்து வெளியே வரும்போதே, ‘என்னோட அடுத்த படத்துல நீதான்டீ காஸ்ட்யூம் டிசைனர்!’னு ஸ்ட்ரிக்ட்டா சொன்ன ஐஸ்வர்யா இயக்கின அவளோட ரெண்டாவது படம் ‘வை ராஜா வை’ படத்தில் வேலை பார்த்தேன். அந்தப்பட பூஜையின்போது, ‘நேஷனல் அவார்டு வின்னர், நீங்க எங்க படத்துக்கு வொர்க் பண்ணுவீங்களா?!’னு ரஜினி அப்பா தமாஷா பேசினது டபுள் சந்தோஷம். சூர்யா அண்ணன், ஜோதிகா அண்ணி இணைந்து செய்த ‘நெஸ்கஃபே சன்ரைஸ்’ விளம்பரம், ஜோதிகா அண்ணி நடிச்ச ‘கோகுல் சாண்டல்’ விளம்பரம் எல்லாம் செய்திருந்த நான், ‘36 வயதினிலே’ படத்திலும் காஸ்ட்யூம் டிசைன் பண்ணினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

கடந்த தீபாவளிக்கு முந்தினநாள் டைரக்டர் ஏ.எல்.விஜய் சார் கூப்பிட்டு ‘டென்னிஸ் லீக் போட்டிக்கான பிராண்ட் அம்பாஸடரான பிரபுதேவா சாரோட ஒரு ஷூட் இருக்கு, பண்றீங்களா?’னு கேட்டாரு. மூன்று நாட்கள் பிளான் செய்த அந்த விளம்பர ஷூட்டை கடந்த தீபாவளி அன்று, தீபாவளிக்கு அடுத்த நாள்னு ஒன்றரை நாளில் முடிச்சிட்டோம். அதனால போனவருஷம் தீபாவளி அன்னிக்கு, வேலைகளை முடிச்சிட்டு மாலையில் பர்மிஷன் வாங்கிட்டு மழையில் நனைஞ்சுட்டே வீட்டுக்கு வந்து, சட்டுனு ரெடியாகி குடும்பத்தோட கோயிலுக்குப் போயிட்டு வந்துனு, மறக்கமுடியாத அனுபவம்.

மாதவன் ஹீரோவா நடிக்கும் ‘இறுதிச்சுற்று’, அஸ்வின் ஹீரோவா நடிக்கும் ‘ஜீரோ’, விக்ரம் பிரபு நடிக்கிற இன்னும் பெயர் வைக்கப்பட்டாத ஒரு படம், ‘அச்சமின்றி’னு ஒரு படம்னு வெளிவரவிருக்கும் இந்தப் படங்களில் எல்லாம் நான் வேலை பார்த்திருக்கேன். பாலிவுட் ஹீரோயின் ‘கங்கனா ரனாவத்’துக்கு காஸ்ட்யூம் டிசைனரா வொர்க் பண்ணணும் என்பது ஆசை.

இப்படி ரொம்ப பரபரப்பான வேலைகளில் கமிட் ஆகியிருந்தாலும், எனக்கு நட்பு வட்டமும் நிறைய. ஐஸ்வர்யா, பிருந்தா, வீணா பற்றியெல்லாம் உங்ககிட்ட சொல்லியிருக்கேன். ‘ஜீ 3’ங்கிற சைக்கிளிங் குரூப், என்னோட இன்னொரு நட்புக் குழு. எல்லோரும் சேர்ந்து வாரத்துல ஒருநாள் சென்னை டு மகாபலிபுரம் சைக்கிளிங் போவோம். அதேபோல யோகா குரூப் ஃப்ரெண்ட்ஸும் இருக்காங்க. சனி, ஞாயிறுகளில் ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ்கூடதான்.

நான் சென்னை, ‘நிஃப்ட்’ல (NIFT - National Institute of Fashion Technology) படிக்க ஆசைப்பட்டு, ரெண்டு முறை என்ட்ரன்ஸ் எழுதியும் ஸீட் கிடைக்காமப்போன கதையை உங்ககிட்ட சொன்னது ஞாபகம் இருக்கும். நான் தேசிய விருது வாங்கினதுக்கு அப்புறம், அதே ‘நிஃப்ட்’ல கெஸ்ட் லெக்சர் கொடுக்க என்னை அழைச்சாங்க. படிக்க ஸீட் கிடைக்காத காலேஜ்ல, கெஸ்ட் லெக்சர் கொடுக்கப்போனது, பொக்கிஷ அனுபவம். இப்போ தமிழ்நாடு முழுக்க நிறையக் கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளரா போயிட்டு இருக்கேன்.

ஒரு விஷயம் கவனிச்சிருப்பீங்க. நான் ஒரு காஸ்ட்யூம் டிசைனரா இருந்தாலும், என்னை அழகுபடுத்திக்க அதிகமான நேரத்தை எடுத்துக்கிறதில்லை. ஒரு நிகழ்ச்சிக்குப் போகணும்னா, எந்த முன் ஏற்பாடும் இல்லாம கைக்கு கிடைச்ச டிரெஸ்ஸை போட்டுட்டுக் கிளம்பிடுவேன். ஜீன்ஸ், டி - ஷர்ட்தான் எனக்குப் பிடிச்ச டிரெஸ். எந்த வேலையில் இருந்தாலும், அந்த வேலையை மட்டும் பார்த்தா எங்கேயும் பிரச்னைக்கு இடமிருக்காது. அப்படித்தான் நானும் சினிமா, விளம்பரம், ஃபேஷன் டிசைனிங் தளங்களில் இருந்தாலும், என் வேலையை மட்டும் பார்க்கிறதால, சந்தோஷமா, நிம்மதியா இருக்கேன். 

ஃபேஷன் டிசைனிங் துறைக்கு வர ஆசைப்படுற நிறைய யங்ஸ்டர்ஸ், அதுக்கு என்ன குவாலிஃபிகேஷன்னு கேட்பாங்க. என்னைப் பொறுத்தவரை ஃபேஷன் கோர்ஸ் முடிச்ச சர்டிஃபிகேட்டைவிட, அழகுணர்ச்சி, கற்பனைத்திறன், கிரியேட்டிவிட்டி, ரசனை இதெல்லாம்தான் முக்கியம்னு நினைப்பேன். ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் இந்தத் துறைக்கு, நிறையபேர் நிச்சயம் வரணும்.

கடந்த நான்கு இதழ்களா உங்ககூட என் வாழ்வின் முக்கியப் பக்கங்களைப் பகிர்ந்துக்கிட்டது, நல்ல அனுபவம். நான் சொன்ன விஷயங்களில் ஏதாவது ஒரு விஷயம் நல்ல ஆரம்பமா உங்க மனசில் பதிஞ்சிருந்தா, ரொம்ப சந்தோஷம். அனைவரும் அவங்கவங்க துறையில் பெரிய அளவில் வெற்றிபெற வாழ்த்துகள்!

இளசுகளோட இன்ஸ்பிரேஷன் ஸ்டார்... அடுத்தது யாரு?!

அடுத்த 'அவள் 16’ இதழில் பார்க்கலாம்!

கு.ஆனந்தராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism