Published:Updated:

"தைமாசக் காசுதான் அடுத்த ஆறு மாசத்துக்கு!"

கைத்தொழில்

"தைமாசக் காசுதான் அடுத்த ஆறு மாசத்துக்கு!"

கைத்தொழில்

Published:Updated:

மிழர்களின் திருநாளான பொங்கல் திருநாளில் நாம் மண் பாண்டங்களை வழக்கம் மாறாமல் பயன்படுத்தி வருவது, நம் கலாசாரத்தின் சாரம். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கோனூர்நாடு குலாலர் (குயவர்) தெருவில் மண்பாண்டத் தொழிலை பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து குலத்தொழிலாகவும், கலைத்தொழிலாகவும் பாரம்பர்யம் குறையாமல் செய்து, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனை செய்துகொண்டிருக்கும் மக்களைச் சந்தித்தோம்...

"தைமாசக் காசுதான் அடுத்த ஆறு மாசத்துக்கு!"

‘‘வண்டல் மண், களிமண்,  மணல் மூணும்  இருந்தாதான் மண்பாண்டம் செய்ய முடியும். அதுக்காக 20 கிலோமீட்டர் தூரத்துக் கும் மேல பயணிச்சு, மண்ணை எடுத்துக்கிட்டு வர்றோம்...’’ என்று ஆரம்பித்தார்கள் அண்ணாமலை - பூசையம்மாள் தம்பதி. ‘‘எடுத்துக்கிட்டு வந்த மண்ணை நல்லா காயவெப்போம். சின்னச் சின்னக் கல், தூசி, குச்சியையெல்லாம் நீக்கி, தண்ணியில கரைச்சு, மெழுகு பதத்துக்குக் கொண்டுவரணும். தேவையான அளவு மணல் சேர்த்து... பொண்டாட்டி, மகன், மகள்னு வீட்டோட எல்லாரும் அதை மிதிச்சு மிதிச்சு பதம் சேர்ப்போம். அதை திருவையில் வெச்சு, பொங்கல்பானை, சட்டி, கலயம், மூடின்னு செய்வோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"தைமாசக் காசுதான் அடுத்த ஆறு மாசத்துக்கு!"

திருவையைச் சுத்தும்போது கொஞ்சம் கவனம் சிதறினாலும், நெனச்ச வடிவம் கெடைக்காது. அதனால யாரு பக்கத்துல வந்தாலும், போனாலும் தெரியாத அளவுக்கு கருத்தா பண்ணுவோம். பானை, சட்டினு பொருளுக்கு ஏத்த வடிவமா கொண்டுவந்தவொடன, அதைக் கீழ இறக்கி வெச்சு, நிழல்ல உலர்த்துவோம். உலர்த்துன

பானைகளை உள்புறம் கருங்கல், வெளிப்புறம் தட்டுப் பலகையால பொம்பளைங்க தட்டுவாங்க. ரொம்பக் கவனமாக தண்ணியைத் தொட்டுத் தொட்டு தட்டினாதான் பானை உடையாம வரும். இதுமாதிரி அஞ்சு தடவை தட்டி, நிழல்ல உலர்த்தி, ஆறாவது தடவை பானையைத் தட்டினதும் சிவப்புச் சாயம் பூசி நிழல்ல உலர்த்தி, மறுபடியும் வெயில்ல காயவெப்போம். அப்புறம் மறுபடியும் காவி, செம்மண் கலந்த சாயம் பூசி, மாட்டுக்கொம்பால் ஆன அச்சால பானை மேல டிசைன் வரைவோம்.

பானைகளை சூளையில் அடுக்கி, விறகு வெச்சு தீ மூட்டி வெப்பத்தைக் கொடுப்போம். பானைகளோட மேற்பகுதியில வைக்கோல் வெச்சு கொளுத்தி வேகவெச்சு, முழுசா வெந்ததுக்கு அப்புறம் பிரிச்சு எடுக்கணும். அப்படி எடுக்கும்போது பல பானைங்க உடைஞ்சுபோகும். இப்படித்தான் எங்க தொழில்ல உழைப்புக்கு ஏத்த ஊதியம் கிடைக்காது. ஏதோ பொங்கல் வந்தா... நாலு காசு கெடைக்கும்னு செஞ்சுட்டுக் கிடக்குறோம்!’’ என்றனர் பெருமூச்சுடன். பானைகள் செய்வதற்கு அளவாக மண் எடுத்து தயார்செய்துகொண்டிருந்த முத்து - ராஜம் தம்பதி, ‘‘பானைகளை விற்பனைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்குற வரைக்கும் கஷ்டம்தான். பானை, சட்டிகளை வண்டியில பக்குவமா அடுக்கணும். கொஞ்சம் தவறிப்போய் அடுக்கினா எல்லா பானையும் சரிஞ்சு பொலபொலன்னு ஒடைஞ்சு, உழைப்பெல்லாம் வீணாப்போயிடும். திருவோணம், ஊரணிபுரம், ஒரத்தநாடு, வல்லம், தஞ்சாவூர்னு சுத்து வட்டாரங்கள்ல வியாபாரம் செய்வோம். இந்தத் தைமாச வருமானத்துலதான் அடுத்த ஆறு மாச நல்லது, கெட்டது எல்லாத்தையும் ஓட்டணும்’’ என்றனர்.

நவீன மண்பாண்ட முறையைப் பின்பற்றி, காய்கறி ஃப்ரிட்ஜ், பணியாரக்கல், பேப்பர் வெயிட், பென் ஸ்டாண்ட் என கால மாற்றத்துக்கு ஏற்ற பொருட்களை தயார் செய்வதுபற்றிச் சொன்ன ரெங்கசாமி... ‘‘ஆனா, அதைத் தொடர்ந்து செய்யமுடியாம விட்டுட்டோம். எங்க மண்பாண்டப் பொருட்கள் தமிழ்நாடு முழுக்க விற்பனைக்குப் போகுது. எங்ககிட்ட இருந்து வாங்கிட்டுப்போற வியாபாரிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்றாங்க. எவ்வளவுதான் நவீன மண்பாண்ட முறைகள் வந்தாலும், கல்யாணத்துக்குத் தேவையான கலசம், கும்பம், அரசாணி, திருவிழாவில் வைக்கும் யானை, குதிரைச் சிலைகள்னு இதையெல்லாம் கையாலதான் செய்யமுடியும். காவல் தெய்வங்களான வீரனார், அய்யனார், காளியம்மனை எல்லாம் மண் சிலைகளா கையாலயே வடிவமைச்சுக் கொடுக்குறோம்’’ என்றார். 

"தைமாசக் காசுதான் அடுத்த ஆறு மாசத்துக்கு!"

மற்றவர்களின் பேச்சைக் கூர்ந்து கனித்தபடியே வந்த கணேசன், ‘‘30 வருஷத்துக்கு முன்னாடி எல்லா வீட்டுலயும் மண்பானையிலதான் சோறு, மண்சட்டியிலதான் கொழம்பு வெப்பாங்க. வீட்டுக்கு வீடு மண்பாண்டங்க இருக்கும். உடைஞ்சதும் மறுபடியும் வாங்குவாங்க. இன்னிக்கு எல்லார் வீட்டுலயும் எவர்சில்வரில் இருந்து `நான்- ஸ்டிக்’ வரை நிறைஞ்சுபோக, பொங்கலுக்கு மட்டும்தான் மண்பாண்டங்கள்னு ஆயிப்போச்சு. எங்க பொழப்பும் முடங்கிப்போச்சு!’’ என்றபோது, துயரம் காற்றில்!

ஏ.ராம் படங்கள்:கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism