Published:Updated:

வயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்!

வயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்!

வயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்!

வயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்!

Published:Updated:

லைவாழ் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அந்த இனக்குழுவின் அன்றைய பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள்? இன்றைய பெண்கள் எப்படியிருக்கிறார்கள்?

வயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்!

- கேள்விகளுடன் பயணப்பட்டோம், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப்பகுதியான பேச்சிப்பாறை அணையை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளுக்கு! இந்த மாவட்டத்தில் மட்டும் 69 மலைக்கிராமங்கள் இருக்கின்றன.

தடிக்காரன்கோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கூவைக்காடுமலை. மேலே செல்லச் செல்ல ‘காணி மக்கள்’ என்று அழைக்கப்படும் மலைவாழ் மக்கள் வீடுகளின் வாசலில் காயவைத்திருந்த இஞ்சி, கிராம்பு வாசனை ஈர்த்தது. வாழைத்தண்டு நாரைப் பிரித்துக்கொண்டிருந்த பூமாலை பாட்டியிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்!

‘‘நான் பொறந்தது, வளந்தது, கல்யாணம் கட்டிக் கொடுத்தது எல்லா இதே மலைலதான். எங்க காலத்துல பள்ளிக்கூடம் கரன்ட்டுனு எதுவும் கெடையாது. பொழுது சாஞ்சதும் கொள்ளி எரியவெச்சு, அந்த வெளிச்சத்துலதான் இருப்போம். நான் சின்னப்புள்ளயா இருக்கும்போது, முண்டுத் துணிய இடுப்புக்கு வேட்டி மாதிரியும், தோளுக்குத் துண்டு மாதிரியும் போட்டுக்குவோம். இந்த மலைய பொறுத்தவரைக்கும் எங்க வீட்டு ஆம்பளைகதான் கீழ எறங்கி போவாக. பொம்பளைக எல்லாம் மலையிலதான் இருப்போம். 

மலைப்பொண்ணுங்க வயசுக்கு வர்றதை வெச்சு 18 அல்லது 20 வயசா நாங்களா கணக்கு பண்ணிப்போம். அதுல இருந்து ஒவ்வொரு வருசமும் சுரைக்காய்க்குடுக்கையில ஒரு கல்லைப் போட்டு வெப்போம். 12 கல் சேர்ந்துட்டா, இங்கன இருக்கிற 30 வீடுகளுக்குள்ளேயே கல்யாணம் முடிச்சுப்போம். இப்ப வெளி கிராமங்கள்ல இருந்தும் பொண்ணெடுக்கிறாங்க. எங்களுக்கு பங்குனிதான், வருஷத்துல முதல் மாசம்" என்ற பூமாலைப் பாட்டிக்கு வயது 70.

வயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்!

அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாளிடம் பேச்சுக் கொடுத்தோம். “12 வருசத்துக்கு ஒருதடவை இங்கன இருக்கிற மூங்கில் எல்லாம் பூத்துக் காய்க்கும். கோதுமை மாதிரி இருக்குற அதை சேலையில எடுத்துட்டு வந்து சோறாக்கிச் சாப்பிடுவோம். இங்க வெளையுற தேங்காய், பலாக்காய், மாங்காயை தலைச்சுமை வியாபாரிங்ககிட்ட நாங்க விலைக்கு கொடுப்போம். ‘ஒரு தேங்காய் கொடுத்தா ஒரு ரூபாய் கொடுப்பேன்’னு அவர் சொன்னப்பதான், கணக்கையே நாங்க மொதமொதல்ல கத்துக்கிட்டோம். வெளியாளுங்களை எப்பலாம் சந்திக்க ஆரம்பிச்சோமோ... அது மூலமாதான் சேலை கட்டவே எங்களுக்கு பழக்கமாச்சு. எத்தன மாறினாலும் எங்க பொண்ணுங்களுக்கு இதுவரைக்கும் எந்தவித பிரச்னையும் நடந்ததில்ல. அவ்ளோ பாதுகாப்பான கிராமம்!’’ எனும் வள்ளியம்மாள், பத்தாவது வரை படித்துள்ளார்.

இந்தக் கிராமத்தில் இருந்து பி.எஸ்ஸி அக்ரி முடித்திருக்கிறார், கலைவாணி. “தடிக்காரன்கோணத்துல இருக்கிற பள்ளிக்கூடத்துக்கே காடு வழியாப்போயி காடு வழியாதான் வரணும். வீட்டுக்கு வரவே ராத்திரி ஏழு மணி ஆகிடும். அதனாலேயே எங்ககூட பள்ளிக்கூடத்துக்கு வந்த பலர் படிப்ப நிப்பாட்டிட்டாங்க. நான் மட்டும் படிப்ப முடிச்சு சேலத்துல சேர்ந்து பட்டப் படிப்பும் முடிச்சுட்டேன்'' என்று சொல்லும் கலைவாணி, வித்தியாசமான தங்களின் உணவுப்பழக்கத்தையும் விவரித்தார். ``காலையில வாழைக்காயை பறிச்சுட்டு, வீட்டுக்கு வந்து தீயில சுட்டுச் சாப்பிடுவோம். மரச்சீனி கிழங்கை அவிச்சு சாப்பிடுவோம். மதியம் பள்ளிக்கூடத்துல சத்துணவு, ராத்திரி பலாப்பழம் கிடைச்சா அன்னிக்கு அதுதான் சாப்பாடு!’’ எனும் கலைவாணி, அடுத்ததாக எம்.எஸ்ஸி., அக்ரி படிக்கவிருக்கிறார்.

வயசைச் சொல்லும் சுரைக்குடுக்கை கல்!

தற்போது மதுரை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டம் படித்துவரும் நிஸ்மாவிடம் பேசினோம். “நான் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் தடிக்காரன்கோணத்தில் இருக்கிற ஆங்கில வழிப்பள்ளியிலதான் படிச்சேன். ஆங்கில வழியில முதல்ல பள்ளிக்குப்போனது நான்தான். எங்க கிராமத்து ஸ்கூல் பிள்ளைங்களுக்கு சாயங்காலம் நான்தான் டியூஷன் எடுப்பேன். என் தாத்தாவுக்கு திண்ணைப்பள்ளி, எங்க பாட்டி பத்தாம் வகுப்பு, எங்க அப்பா சுரேஷ், குமரி மாவட்ட காணி இன மக்களில் முதல் பிஹெச்.டி ஆய்வாளர், என் அக்கா ரேஷ்மா, குமரி மாவட்ட காணி இன மக்களில் முதல் பல் மருத்துவ மாணவி. அந்த வரிசையில நான்தான். சட்டம்படிக்கிற முதல் மாணவி’’ என்றார் உற்சாகமாக.

பல மலைக்கிராமங்கள் தற்போது வளர்ச்சி அடைந்துவரும் நிலையிலும் பின்னமூட்டுதேரி, களப்பாறை, நடனம் பொற்றை, மாறாமலை, சிலங்குன்று, முகளியடி, வெட்டம் விளை, பெருங்குருவி ஆகிய காணி கிராமங்களில் இன்னமும் மின்சாரம்கூட இல்லை. இருந்தாலும்... இலைகளையும், தோல் ஆடைகளையும் கட்டிக்கொண்டிருந்த மலைவாழ் மக்கள், இன்று பட்டம் படித்து வேலைக்குச் செல்லும் மாற்றம், நன்நம்பிக்கை தருகிறது!

இ.கார்த்திகேயன் படங்கள்:ரா.ராம்குமார்

மன்னர் தந்த காணி!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கும் அவருடைய எதிரிகளான எட்டு வீட்டுப்பிள்ளைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காட்டுக்குள் தஞ்சம் புகுந்த மன்னரைக் காத்து, சேவகம் புரிந்தனர் இந்த மலைகளில் வாழும் ‘காணி’ மக்கள். அதற்கு கைம்மாறாக மன்னர் மீண்டும் அரியணை ஏறியதும், இம்மக்களுக்கு மலைப்பகுதியில் உள்ள இடங்களை, ‘கரம் ஒளிவு பண்டார வகை காணிச்சொத்து’ என்ற பெயரில் செப்புபட்டையம் எழுதிக்கொடுத்திருக்கிறார். மன்னர் கொடுத்த காணிக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள் என்பதால், இவர்கள் ‘காணிக்காரர்கள்’ என்று அழைக்கப்படுவதாக வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism