Published:Updated:

ஆயிரத்தில் ஒருத்தி!

மண்ணுக்காகவே வாழும் மகேஸ்வரிவிவசாயம்

ஆயிரத்தில் ஒருத்தி!

மண்ணுக்காகவே வாழும் மகேஸ்வரிவிவசாயம்

Published:Updated:

ருத்துவம், பொறியியல், சட்டம் படித்தவர்கள், முறையே அந்தந்த துறை சார்ந்து பணியாற்றுகிறார்கள். ஆனால், விவசாயம் படித்தவர்களில் எத்தனை பேர் விவசாயம் பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்கூட வேளாண் பட்டதாரிகள் நேரடி விவசாயத்தில் இல்லை என்பதே உண்மை. ஆனால், ஆயிரத்தில் ஒருவராக மிளிர்கிறார், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட் டாரத்தில் ‘அட்மா’ வேளாண் தொழில்நுட்ப மேலாண்மைத் திட்டத்தில் தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்துவரும் ஆர்.மகேஸ்வரி.

ஆயிரத்தில் ஒருத்தி!

திரைப்படத்தை மிஞ்சும் திருப்பங்களுடன் இருக்கிறது இவர் கதை. காஞ்சிக்கோயில் கிராம வயல்வெளியில் விவசாயிகள் சிலருக்கு மும்முரமாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்தவரை, இடைவெளியில் சந்தித்தோம்.

‘‘சொந்த ஊர் ஈரோடுதான். சின்ன வயசுல இருந்தே சேவையில் ஆர்வம். ப்ளஸ் டூ-வில் நல்ல மார்க் எடுத்தேன். பொறியியல், சட்டப்படிப்புகளுக்கு வாய்ப்பிருந்தும், கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்யணும்கிறதுக்காக, வேளாண்மை படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., அக்ரி, விதை நுட்பவியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிச்சேன். தொடர்ந்து அதே துறையில் எம்.எஸ்ஸி சேர்ந்து, ‘சிறந்த மாணவி’ மற்றும் ‘குமாரசாமி நினைவு தங்கப்பதக்கம்’னு ரெண்டு விருதுகளோட படிப்பை முடிச்சேன். பட்டம் வாங்கின பத்தே நாட்களில் பல்கலையில் நடந்த கேம்பஸ் நேர்காணலில் வேலை கிடைச்சது. வெளிநாட்டு நிதி உதவியுடன் கேரளா அரசாங்கம் இணைந்து செயல்படுத்திவந்த கேரளா தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம் என்கிற புராஜெக்ட்டில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பணி’’ என்றவர்,

‘‘கேரளா மாநில விவசாயிகளுக்கு விதைகள் பத்தின விழிப்பு உணர்வு ஏற்படுத்துறது, கிராம விவசாயக் குழுக்களை உருவாக்கி... விதை சேகரிப்பு, நேர்த்தி மற்றும் விற்பனை ஆகிய செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்கிறதுனு என் மனசுக்குப் பிடிச்ச இந்த வேலையை சிறப்பா செஞ்சேன். குறிப்பாக, கேரளாவில் காய்கறி விவசாயம் அதிகமுள்ள பாலக்காடு ஜில்லாவில், கொழிஞ்சாம்பாறை, கொல்லங்கோடு, முதலைமடை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குழுக்களை அமைச்சு, அவங்களுக்குத் தேவையான காய்கறி விதைகளை அவங்களே உற்பத்தி செய்துக்கிற தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்து, அதை சிறப்பாக செயல்படுத்தி வந்தேன். ஒரு அதிகாரிபோல இல்லாம, விவசாயிகளோடு விவசாயியா இணைஞ்சு வேலை பார்த்தேன்!’’ எனும் மகேஸ்வரிக்கு அந்த விவசாயிகளிடம் நற்பெயர் கிடைத்திருக்கிறது.

‘‘எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. என்னோடு இணைஞ்சு வேலைபார்த்த கேரளா விவசாயி அப்பாஸை விரும்பினேன். அவர் எட்டாவது மட்டுமே படிச்சவர்; படிப்பு, அந்தஸ்து, மதம், இனம், வீட்டின் எதிர்ப்புனு எல்லாத்தையும் மீறி அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கைநிறையச் சம்பளத்தில், உயர் பதவிகளில்னு வீட்டில் பார்த்திருந்த மாப்பிள்ளைகளில் யாரைக் கல்யாணம் செய்திருந்தாலும் அப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்காது எனும் அளவுக்கு, வயலும் காடும்னு ரெண்டு பேரும் அவ்ளோ சந்தோஷமா இருந்தோம்’’ என்ற மகேஸ்வரி, கைநிறையச் சம்பளம் வாங்கும் அலுவலக வேலையைவிட, இந்தக் களப்பணி வேலையையே விரும்பியதால், அரசு வேலைக்கான முயற்சிகளை எடுக்காமல் இருந் திருக்கிறார். எட்டு வருட திருமண வாழ்க்கையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்வை ரசித்துக் கொண்டிருந்த இந்த விவசாயத் தம்பதிக்கு, நேர்ந்தது ஒரு பேரிடி. ஒரு சாலைவிபத்தில் தன் காதல் கணவரைப் பறிகொடுத்தார் மகேஸ்வரி.

‘‘உடைந்து நொறுங்கிக் கிடந்த எனக்கு இன்னொரு அதிர்ச்சி செய்தியும் வந்தது. ‘வெளிநாட்டு நிதிஉதவிகள் நிறுத்தப் பட்டதால நீங்க வேலைபார்த்து வந்த புராஜெக்ட் நிறுத்தப்பட்டது. வேறு வேலை பார்த்துக்கொள்ளலாம்’னு தகவல் சொன்னாங்க. ரெண்டு பெண் குழந்தைகளோட நிராதரவா நின்னேன். கிராமப்புறம் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, அந்த மக்களோட பாராட்டைப் பெற்றேன். அந்தச் சமயத்தில்தான் முல்லைப்பெரியாறு பிரச்னை விஸ்பரூபம் எடுக்க, தமிழ்நாட்டில் படித்து கேரளாவில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு தொந்தரவுகள் அதிகமாச்சு. என் வேலையையும் தொடரமுடியாமல் போனது. `சரி, கணவரோட நிலத்தில் விவசாயம் செய்வோம்’னு வயலில் இறங்க, அவங்க குடும்பத்தார் பிரச்னை செய்தாங்க. என் கணவரோட வாழ்ந்த வாழ்க்கை மட்டும் போதும்னு, சொத்துக்காக போராடாமல், என் சான்றிதழ்கள், குழந்தைகளோட தமிழ்நாட்டுக்கு வந்தேன்’’ என்பவருக்கு, இங்கும் மண்ணே மீண்டும் அவர் வாழ்க்கையை மலர்த்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆயிரத்தில் ஒருத்தி!

‘‘பொருளாதார நிர்பந்தம் ஏற்பட்ட சூழலிலும், களப்பணியை விட்டு கைநிறையச் சம்பளத்தில் அலுவல் பணிக்குப் போகலாம்னு நான் நினைக்கல. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாரத்தில் செயல்படும் ‘அட்மா’ திட்டத்தில் தற்காலிகப் பணியாளரா வேலையில் சேர்ந்தேன். கடந்த அஞ்சு வருஷமா விவசாயிகள், கல்லூரி மாணவர்கள்னு ‘அட்மா’ திட்டப்பணிகளை செஞ்சுட்டு வர்றேன். விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை மனுஷியா இருக்கேன். பலன் எதிர்பார்க்காத உழைப்புக்கு என்னிக்குமே மரியாதைதான்’’ எனும் மகேஸ்வரி, குழந்தைகளின் கல்விக்கான அரசு உதவிக்காக ஆதரவற்ற விதவை என்கிற சான்றிதழ் பெற கடந்த மூன்று ஆண்டுகளாக பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறார் என்பது வருத்தம்.

‘‘பொதுவா, பல்லாயிரக்கணக்கில் ஊதியம் வாங்கும் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பலரும் வயல்வெளிகளுக்கு வந்து விவசாயிகளைச் சந்திக்கிறதில்லை. அவங்க ஏட்டில் படிக்கும் விவசாயப்பாடம் வேற... களத்தில் விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்னைகள் வேற. சொற்ப சம்பளம் வாங்கும் என்னைப் போன்ற களப்பணியாளர்கள்தான் அதை நேரடியா கண்டறிந்து விவசாயிகளுக்குத் தீர்வு சொல்லிவர்றோம். இனியாவது விவசாயத்துல ஆர்வம் உள்ளவங்க, விவசாயத்துறையில ஈடுபட விரும்புறவங்களுக்கு மட்டும் விவசாயக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யணும். மருத்துவம் படிச்சவங்க அஞ்சு வருஷம் கிராமப்புறங்களில் வேலை பார்க்கணும் என்பதுபோல, விவசாயம் படிச்சவங்களும் குறைந்தது அஞ்சு வருஷமாச்சும் கிராமப்புறங் களில் விவசாயம் பார்க்கணும் என்பதைக் கட்டாயமாக்கணும்!’’ என்றவர், மரத்தடியில் அமர்ந்திருந்த விவசாயிகளுக்கு மீண்டும் ஆரம்பிக்கிறார் வகுப்பை!

கோவிந்த் பழனிச்சாமி  படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism