Published:Updated:

"விவசாயம் எங்களோட முடிஞ்சிருமா..?!"

சமூக பிரச்னை

"விவசாயம் எங்களோட முடிஞ்சிருமா..?!"

சமூக பிரச்னை

Published:Updated:

ன்ன இது, போன பொங்கலுக்கு கிலோ 20 ரூபாய் வித்த கத்திரிக்காய்... இப்ப, கிலோ 60 ரூபாய் விக்குது. கிலோ 25 ரூபாய் வித்த தக்காளி... நூறு ரூபாய்க்கு போயிடுச்சு... என்னதான் நடக்குது நாட்டுல'' - மாநகரங்களில் உட்கார்ந்துகொண்டு இப்படியே பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஆமாம்... என்னதான் நடக்குது நாட்டுல?

"விவசாயம் எங்களோட முடிஞ்சிருமா..?!"

மருத்துவர் மகன் மருத்துவர் ஆகிறார். இன்ஜினீயர் மகன் இன்ஜினீயர் ஆகிறார். நடிகர் மகன் நடிகர் ஆகிறார். ஆனால், விவசாயின் மகன்? பெரும்பாலும் விவசாயி ஆக முன்வருவதில்லை. அதனால் விவசாயம் பார்க்க ஆளில்லை. விவசாயத்துக்குப் போதுமான மரியாதையும் இல்லை. இதுதான் நடக்கிறது நாட்டில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"விவசாயம் எங்களோட முடிஞ்சிருமா..?!"

ஐ.டி துறை வேலையைவிட்டு விவசாயத்துக்குத் திரும்பிய இளைஞர், கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் இளைஞர் என விவசாயத்தை நாடி வரும் இளைஞர்கள் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக அறியப்பெறும் செய்திகள், விவசாயத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தினாலும்.... இன்னொரு பக்கம், பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், விவசாயத்தைத் தொடராமல் வேறு தொழிலை நாடுவது அதிகரித்

துள்ளது என்பதுதான் உண்மை. `இதுதான் விவசாயத்தின் கடைசித் தலைமுறையா?' என்று பயத்தை ஏற்படுத்துகிறது இத்தகைய சூழல்.

தன் பாட்டன் மோட்டை மிதித்து, தண்ணீர் பாய்ச்சி, அறுவடை செய்த பரம்பரை விவசாயத்தை தனக்குப் பிறகு யார் செய்யப்போகிறார்கள் என்ற கேள்விதான், இன்று ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் உள்ள ஆதங்கம். அத்தகைய விவசாயி தகப்பன்களைச் சந்தித்தோம் பொங்கல் சிறப்பிதழுக்காக...

‘‘விவசாயச் சங்கிலி அறுந்துவிடுமா?!’’

‘‘திருப்பிச் செய்வாகனு நெனைச்சு பெத்த புள்ளைகள யாரும் வளக்குற

தில்ல. அவுகள ஆளாக்க வேண்டியது நம்ம கடமை. அப்புடித்தேன் வெவசாயமும்... தலமொற தலமொறயா நம்மோட ஓடிவர்ற தொழில். நட்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் நான் செஞ்சுக்கிட்டேதேன் இருப்பேன். ஆனா, எனக்குப் பின்னாடினு யோசிச்சாதான் பதில் இல்ல...’’

- வருத்தத்துடன் ஆரம்பிக்கிறார் தமிழ்ச்செல்வன். மதுரை, பாலமேடு அருகில் 66-மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி. பருவநிலை மாற்றத்தாலும், அரசாங்கத் தின் முதலாளித்துவ கொள்கைகளாலும், சர்வதேசப் பொருளாதார ஏற்ற இறக்கங்களாலும் இந்தியாவில் வேளாண் தொழில் நசுக்கப்பட்டு வரும் சூழலிலும், விடாமல் விவசாயம் செய்துவருபவர்களில் ஒருவர்.

"விவசாயம் எங்களோட முடிஞ்சிருமா..?!"

‘‘அஞ்சாவது வரைக்குந்தேன் படிச்சேன். அப்போவெல் லாம் படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்த மாட்டாக. ஏன்னா, மத்த வேலைகளவிட வெவசாயத்துல பணம் கொட்டும். இப்ப மாதிரி கெடையாது, பருவமழையும் சரியான காலத்துல பெய்யும், பாசனத்துக்குத் தேவையான தண்ணியையும் திறந்துவிடுவாக. குடும்பமா, சந்தோசமா வெள்ளாம செஞ்சோம். அந்த வருமானத்துலதேன் வீட்டுச் செலவு, கல்யாணம், காதுகுத்து, நல்லது கெட்டதுனு பாத்துக்கிட்டோம். வீடு வாசலெல்லாம் கட்டினோம். இன்னிக்கு கை நட்டம் வராம வௌஞ்சாலே போதும்னு ஆயிருச்சு. பெரும்பாலான சம்சாரிங்க நெலத்தை சும்மா போடக்கூடாதுன்னு, பரம்பரை கவுரவத்துக்காக கடனஒடன வாங்கியாவது வெவசாயம் செஞ்சுட்டு வர்றாக...’’

- அச்சம்பட்டியிலுள்ள தன் தோட்டத்தில் விதைப்புக்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டே பேசியவர்...

‘‘தாத்தாவுக்குத் தொணையா எங்கப்பா, அப்பாவுக்குத் தொணையா நான்னு வயல்ல இறங்குனமாதிரி இல்லாம, எம்புள்ளைகள நல்லா படிக்கவெச்சேன். எனக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. மூத்த பையன் சசிகுமார் பி.ஏ படிச்சுட்டு கவர்மென்ட்டு வேலை பாக்குறாரு. ரெண்டாவது பையன் அசோக்குமார் ஐ.எஃப்.எஸ் படிச்சுட்டு ஒரிஸ்ஸாவுல அதிகாரியா இருக்காரு. பொண்ணு படிப்பை முடிச்சதும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். இந்த விவசாயத்தாலதேன் அவுகளை எல்லாம் வளத்து ஆளாக்குனேன். ஆனா, இன்னிக்கு இந்த விவசாயத்தைப் பாக்க ஆளில்லாமப் போச்சு’’ - பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து பின்னிப் பிணைந்து வரும் விவசாயச் சங்கிலி, தன் தலைமுறையோடு அறுந்துவிடுமோ என்ற கவலை அவர் குரலை முடக்குகிறது.

‘‘ஐ.டி-யில சம்பாதிக்கிறதைவிட ஆட்டுப் பண்ணையில சம்பாதிக்கலாம்!’’

‘‘இந்த 15 ஏக்கர் நெலம்தான் என் மூச்சு. கிணத்துப் பாசனம்தான் பிரதானம். கரும்பு, நெல்லு, மஞ்சள், மரவள்ளிக்கெழங்குனு மாத்தி மாத்தி வெள்ளாமை பண்ணிக்கிட்டிருக்கேன். 9 வயசுல எடுத்த கலப்பை, மண்வெட்டியை இன்னும் விடல. இந்த 69 வயசுலயும், ஒயாம ஓடி உழச்சிட்டே இருக்கேன். `என்னதான் பண்ணை ஆட்கள் இருந்தாலும், வயல்வேலை தெரிஞ்சாத்தான் விவசாயிக்கு மதிப்பு, அதுதான் என்னிக்கும் அவனுக்கு கைகொடுக்கும்’னு எங்கப்பா சென்னியப்பன் அடிக்கடி சொல்லுவாரு. அப்படித்தான் நானும் உழவு, பாத்தி, விதைப்பு, களை, அறுவடை, மாடுகட்டி போரடித்து, தாம்பு ஓட்டுறது, வண்டி பூட்றதுனு எல்லா வேலைகளையும் ஆட்களோடு ஆட்களா வெயில், மழை, குளிர்னு பார்க்காம முழுசாக் கத்துக்கிட்டேன்!’’

- சேலம் பாகல்பட்டியைச் சேர்ந்த மூத்த விவசாயி பெரியண்ணனின் வார்த்தைகளில் மின்னுகிறது கிராமத்துக் கம்பீரம்.

"விவசாயம் எங்களோட முடிஞ்சிருமா..?!"

‘‘அந்தக் காலத்துல, ‘படிச்சு முடிச்சு கலெக்டர் வேலைக்கா போகப்போற? கலப்பைதானே புடிக்கப்போற?’னு கையெழுத்துப் போடுற அளவுக்குப் படிச்சதுமே பள்ளிக்கூடத்தை விட்டு நிப்பாட்டி மாடுமேய்க்க அனுப்பிடுவாங்க. இப்ப அப்படி முடியுங்களா? எனக்கு ரெண்டு ஆணு, ஒரு பொண்ணு. மூணு பேரையும் நல்லா படிக்க வெச்சேன். கல்யாணமும் பண்ணி வெச்சேன். ‘படிச்சு பட்டம் வாங்கியாச்சு, விவசாயத்துக்கு வாங்கப்பா’னு கூப்பிட்டேன். ‘விவசாயம் எல்லாம் சரிப்பட்டு வராதுப்பா’னு பதிலைச் சொல்லிட்டு, வெள்ளைச்சட்டை வேலையில சேர்ந்துட்டாங்க. பட்டணவாசியாகிட்டாங்க. பண்டிகை, திருவிழாவுக்குக் கூப்பிடும்போது குடும்பத்தோடு வர்றாங்க. சுடுதண்ணிய காலுல ஊத்தின மாதிரி உடனே திரும்பிடுறாங்க.

‘தோட்ட நிலத்தையெல்லாம் குத்தகைக்கு அடைச்சிட்டு நீங்க டவுனுக்கு வாங்கப்பா’னு நம்மளயும் கூப்பிடுறாங்க. ‘உங்க ஏ.சி-யும், பஞ்சு மெத்தையும் வேணாம். மாட்டுத்தொழுவமும், வைக்கோல் மெத்தையுமே போதும்’னு சொல்லிட்டேன். இருந்தாலும் நமக்குப் பின்னாடி இந்த நிலத்தை பார்க்கப்போறது யாரு?

ஐ.டி-யில சம்பாதிக்கிறதைவிட ஆட்டுப் பண்ணையில சம்பாதிக்கலாம். அங்க 30 நாள் முடிஞ்சாத்தான் சம்பளம். ஆனா, பட்டுப்புழு வளர்த்தா மாசம் ரெண்டு சம்பளம். மாட்டுப்பண்ணை வெச்சு பால் விற்கலாம், கோழிப்பண்ணை வெச்சு கோடீஸ்வரனாகலாம். அந்நிய நாட்டுல அஞ்சு லட்சம் ரூபாய் சம்பாதிச்சாலும், சொந்த ஊருல 50 ஆயிரம் சம்பாதிக்கிற நிம்மதி கிடைக்காது. இப்படியே போனா... பெத்தவங்கள முதியோர் இல்லங்களும், சொந்த நிலத்தை பன்னாட்டு நிறுவனங்களும் கைப்பத்திக்கும். உங்க மண்ணு உங்களுக்கு இல்ல. நீங்க அந்நிய நாட்டு அநாதைங்கதான்!’’ ஆற்றாமையும் கோபமுமாகச் சொன்னார், பெரியண்ணன்.

‘‘மூணு பேருல யாராச்சும் ஒருத்தன் வாங்கடா!’’

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணை ஆற்றுப்பாசனத்தில் விவசாயம் செய்து வருகிறார், கோவிலடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கனகராஜு. ‘‘எனக்கு ரெண்டு அண்ணன், ஒரு தம்பி. மூணு பேரும் கப்பல்படை, ராணுவம், விமானப்படைனு வேலைக்குப் போயிட்டாங்க. அப்பா இறந்துட்டார். ‘நீயும் வேலைக்குப் போயிட்டா நம்ம முப்பாட்டன் விவசாயத்தை யாரு பார்த்துக்கிறது?’னு விவசாயத்தைக் கத்துக்கொடுத்தாங்க எங்கம்மா.

வொக்கேஷனல் அக்ரி குரூப் படிச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சது. வேலைக்குப் போனாலும், விவசாயம்தான் முதல் தொழில். காலையில எழுந்து வயல மிதிச்சிட்டுத்தான் பள்ளிக் கூடத்துக்குப் போவேன். அப்போ மாணவர்களும் அப்படித்தான் வயல்ல வேலை செஞ்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு வருவாங்க. இந்த 72 வயசுலயும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற வயலை காலை, மதியம், சாயங்காலம்னு மூணு வேளைக சுத்தி வந்திருவேன்’’ என்றவர்,

"விவசாயம் எங்களோட முடிஞ்சிருமா..?!"

‘‘மூத்த மகன், கடைசி மகன், மக மூணு பேரும் எம்.சி.ஏ படிச்சாங்க. ரெண்டாவது மகன் டிப்ளோமா படிச்சான். இப்போ சென்னை, பெங்களூரு, திருச்சினு வேலைக்குப் போயிட்டாங்க. நானும் மனைவியும்தான் விவசாயத்தை பார்த்துக்கிட்டு இருக்கோம். திருச்சியில இருக்கிற ரெண்டாவது மகன்கிட்ட நெலத்தைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, கத்தார்ல இருக்குற என் மக வீட்டுக்குப் போயிட்டேன். ‘அப்பா, என்னால முடியல, வாங்க’னு போன் பண்ணிட்டான். ‘டேய்... உங்க மூணு பேருல யாராச்சும் ஒருத்தன் விவசாயத்தை ஒப்புக்கொள்ளுங்கடா’னு ஒருநாள் கண்ணுகலங்க பேசினதுக்கு அப்புறம், சென்னையில சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருக்கிற மூணாவது பையன் போஸ், ‘நான் விவசாயத்தைப் பார்த்துக்கிறேன்’னு சொல்லிருக்கான். பார்ப்போம்!’’ - காத்திருக் கிறார் கனகராஜு.

‘‘எதுக்கு வெளிய சம்பளத்துக்கு வேலைக்குப் போகணும்?!’’

‘‘ரெண்டு மகன்கள் பழனிச்சாமியும், சுப்பிரமணியும் விவசாயம் பழகினாங்க. ஆனா, என் பேரனுங்க, வெளியூர் வேலைக்குப் போயிட்டானுங்க...’’ - 100 வயதாகும் முத்துக்கவுண்டரின் வார்த்தைகளில் வருத்தம். கோவை, பேரூரையடுத்த ஆறுமுககவுண்டன்புதூரைச் சேர்ந்த இந்த மூத்த விவசாயியால் அதிகம் பேச முடியாததால், மகன் சுப்பிரமணி பேசினார்.

‘‘எங்களுக்குப் பூர்வீகம், கண்ணம்பாளையம். இங்க குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செஞ்சு, இடைவிடாம பாடுபட்டு 12 ஏக்கர் நிலத்தை வாங்கினாரு அப்பா. நானும் அண்ணனும் அந்த விவசாயத்தையே தொடர்ந்து பார்த்தோம். எங்க மகனுங்க நெலத்தைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டேங்குறாங்க. மகன் எம்.பி.ஏ படிச்சுட்டு தனியார் கம்பெனியில வேலை பார்க்கிறான். என் அண்ணன் மகனுக்கும் விவசாயத்துல ஆர்வம் இல்லை. குறைஞ்ச சம்பளமா இருந்தாலும் வெளிய வேலைக்குப் போறோம்னு சொல்றாங்களே தவிர விவசாயத்தைப் பார்க்க மாட்டேங்குறாங்க.

என் மகன் வேலைக்குப் போறதைப் பாத்துட்டு, ‘எதுக்கு வெளியே சம்பளத்துக்கு வேலைக்குப் போறான்? இதை எல்லாம் விட்டுட்டுப் போனா யார் பாக்குறது?’னு அப்பா மனசு ஒடிஞ்சு, அவனுங்களைத் திட்டிட்டே இருப்பார். ஆனா, வேறு தொழில்தான் செய்யணும்னு அவனுங்க நினைக்கிறானுங்க. நெலத்தை வித்து அவங்களுக்கு ஏதாவது செஞ்சு கொடுக்கணும். வேற என்ன செய்ய முடியும்?!” என்றபோது, அவர் கண்கள் பாரத்தில் தரை கவிழ்ந்தன.

இளையதலைமுறைக்கு விவசாயத்தின்மீது எப்படி நம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறோம்?!

ச.ஜெ.ரவி, செ.சல்மான், கோவிந்த் பழனிச்சாமி, ஏ.ராம், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், க.தனசேகரன், கே.குணசீலன், தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism