Published:Updated:

தீபாவளிக்கு புறகணிப்பு... பொங்கலுக்கு வரவேற்பு!

ஆச்சர்யக் கிராமங்கள்

தீபாவளிக்கு புறகணிப்பு... பொங்கலுக்கு வரவேற்பு!

ஆச்சர்யக் கிராமங்கள்

Published:Updated:

ந்திய நாட்டின் மிகப்பெரிய பண் டிகை, தீபாவளி. தமிழர் திருநாளாக இருந்தாலும், தமிழ்நாட்டில் பொங்கல் எல்லாம் தீபாவளிக்கு பிறகுதான். கிட்டத்தட்ட ஒரு மாதமாக பள்ளிச் சிறுவர்களில் இருந்து முதியவர்கள் வரை தீபாவளியை வரவேற்கத் தயாராகிவிட, புதுத்துணியில் இருந்து பட்டாசு வரை அது தொடர்பான வர்த்தகங்களும் பரபரப்பாகிவிடும்.

தீபாவளிக்கு புறகணிப்பு... பொங்கலுக்கு வரவேற்பு!

ஆனால், 57 ஆண்டுகளாக 12 கிராம மக்கள் ‘தீபாவளியே எங்களுக்கு வேண்டாம்’ என்று இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், அதை ஈடுகட்டும் விதமாக பொங்கல் திருநாளை மற்ற ஊர்களைவிட வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி யையே மொத்தமாகப் புறக்கணிக்கும் இவர்கள், அதற்குக் கூறும் காரணம்... போற்றுதலுக்கு உரியது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீபாவளிக்கு புறகணிப்பு... பொங்கலுக்கு வரவேற்பு!

சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரிக்கு அருகில் இருக்கும் எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திரப் பட்டி, தும்பைப்பட்டி, இடையப்பட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிப்பட்டி, வலையப்பட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புப்பட்டி, இந்திராநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள்தான், அந்த ஆச்சர்ய மனிதர்கள்.

எஸ்.மாம்பட்டிக்குச் சென்றோம். ஊர்ப் பெரியவரான ஜெயராமன் கம்பீரமாகப் பேசினார்... ‘‘எனக்கு இப்ப 65 வயசாகுது. எனக்கு எட்டு வயசா இருந்தப்போ ஊருல தீபாவளி கொண்டாடிப் பாத்திருக்கேன். அப்ப நடந்த ஊர்க்கூட்டத்துல, ஊர் நன்மைக்காக 12 கிராம மக்களும் இனி தீபாவளி கொண்டாடக்கூடாதுன்னு உத்தரவு போட்டாக. உத்தரவு போட்ட அம்பலக்காரவுக இப்ப இல்லையினாலும், அவுகபோட்ட உத்தரவை தெய்வவாக்கா நினச்சு கடைப்பிடிச்சுட்டு வர்றோம். எங்க புள்ளகுட்டிக எல்லாம் தீபாவளின்னு ஒரு பண்டிகை இருக்குனு கேள்விப்பட்டிருந்தாலும், அன்னிக்கு என்ன பண்ணுவாக, எப்படிக் கொண்டாடுவாகனு எல்லாம் தெரியாது. எங்களுக்கெல்லாம் எப்பவும்போல அந்த நாளும் போயிரும். ஒரு வெடிச்சத்தம் கேக்காது. வீட்டுல வழக்கமான சோறு, கஞ்சிதேன். எந்தப் பரபரப்பும் இருக்காது!’’ என்றார்.

தீபாவளிக்கு புறகணிப்பு... பொங்கலுக்கு வரவேற்பு!

எஸ்.மாம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவி செண்பகம் மாணிக்கம், ‘‘அந்தக் காலத்துல ஊருல ஒரு சிலருக்குத்தேன் பண்டிக கொண்டாடுற வசதி இருந்துருக்கு. அவுக தீபாவளி கொண்டாடுறதைப் பாத்து வசதி இல்லாதவுகளும் வட்டிக்கு வாங்கிச் செலவு செஞ்சிருக்காக. ஒருநாளு சந்தோசமா தீபாவளியைக் கொண்டாடிட்டு அந்த வருஷம் முழுக்க சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்டுருக்காக.

இதையெல்லாம் பாத்த ஊர்ப் பெரியவுக, அதுக்கு ஒரு முடிவு கட்ட நெனச்சு, `வெதப்பு (விதைப்பு) காலத்துல வர்ற தீபாவளிய நாம கொண்டாட வேணாம்; அந்த நேரத்து சிரமத்துல தீபாவளிக்கும் சேத்து செலவழிக்க வேணாம். வௌஞ்சு வருமானம் வர்ற தைமாசத்துல பொங்கலை சிறப்பா கொண்டாடலாம்'னும், `இந்த உத்தரவு ஊருலயிருக்குற அத்தனை சாதிக்கும், ஏழை, பணக்காரன் எல்லாருக்கும் பொருந்தும்'னு சொல்லிட்டாக. `மீறினா ஊருக்குக் கெடுதல் நடக்கும்'னு சொல்லிட்டாக. அத அப்புடியே இன்னிக்கு வரைக்கும் நாங்க கடைப் பிடிச்சிட்டு வர்றோம் அதனால தீபாவளி எங்க சனத்துக்குப் பெருசா தெரியல’’ என்றார். 

தீபாவளிக்கு புறகணிப்பு... பொங்கலுக்கு வரவேற்பு!

ஒப்பிலான்பட்டியைச் சேர்ந்த பெரியவர் சபாபதி அம்பலம், ‘‘எங் கப்பா பெரி.சேவுகன் அம்பலந்தேன் இந்த உத்தரவைப் போட்டது. அப்போவெல்லாம் நூறு ரூபாய் கடனுக்கு ஒரு மூட்டை நெல்லை வட்டியா கொடுக்கணும். வருஷம் வருஷம் இப்புடியே நடக்க... என்ன செய்யலாம்னு எல்லாரும் கூடிப் பேசுனாக.

வசதியுள்ளவுக சில பேரு, `தீபாவளியைக் கொண்டாடுனா என்ன தப்பு'னு வாதம் செஞ்சாக. இதை எங்கப்பாரு ஒப்புக்கல. ‘இருக்குறவன் வீட்டுப்புள்ளைக கோடித்துணி உடுத்தினா, இல்லாத வீட்டுப்புள்ளைக மனசு எவ்வளவு வேதனப்படும்? அதனால, நம்ம 12 கிராமங்களும் இனிமே தீபாவளியே கொண்டாடப்படாது. அன்னிக்கு வீட்டுல பலகாரம் செய்யக்கூடாது. வெளியூருக்காரவுக நம்ம ஊருக்கு வந்தாலும் இத கடைப்பிடிக்கணும். அதே மாதிரி நம்ம ஊர்க்காரவுக வேற ஊருல இருந்தாலும் இதையேதேன் செய்யணும். கையில காசு பணம் வந்து சேருற தைமாசத்துல பொங்கல் திருநாளை வெகுசிறப்பா கொண்டாடணும்’னு ஊர் உத்தரவை, காடுகாவலர்சாமி மேல சத்தியம் செஞ்சு அறிவிச்சாக.

தீபாவளிக்கு புறகணிப்பு... பொங்கலுக்கு வரவேற்பு!

ஒருசில ஊருகள்ல, இந்த மாதிரி உத்தரவுக்குப் பிரச்ன வந்துருக்கும். ஆனா, எங்க ஊர்க்காரவுக எல்லாரும் ஒத்துமையா, அதை சிந்திச்சுப் பாத்து, `நம்ம நல்லதுக்குத்தானே சொல்றாக'னு ஏத்துக்கிட்டாக. 57 வருஷம் ஓடிருச்சு!’’ என்கிறார் அதிரச் சிரித்து.

சுகதேவன் சொல்லும்போது, ‘‘12 கிராமங் கள்லயும் கல்யாணமான புதுப்பொண்ணு மாப்பிள்ளையை தலைதீபாவளி விருந்துக்குக் கூப்புடவும் மாட்டோம், வெளியூர் விருந்துக்குப் போகவும் மாட்டோம். எப்பவும் வீட்டுல பண்ணுற இட்லி, தோசை பலகாரத்தைக்கூட தீபாவளிக்குப் பண்ண மாட்டோம். ஆனா... பொங்கலப்போ ரெண்டு, மூணு நாளைக்கு ஆட்டம் பாட்டம், ஜல்லிக்கட்டுனு கொண்டாடி அசத்திருவோம். சொந்தக்காரவுக, பழக்கக்காரவுகளை எல்லாம் ஊருக்கு விருந்துக்கு கூப்பிட்டுனு, தெருவெல்லாம் திருவிழாக்கோலமா இருக்கும்!’’ என்றார்.

ஊர் இளைஞர்களிடம், ‘‘தீபாவளி கொண்டாட முடியாத வருத்தம் இருக்கா?’’ என்றோம். ‘‘இதுவரைக்கும் அப்படியெல்லாம் நெனச்சதேயில்ல. எங்களுக்குப் பண்டிகைனா பொங்கல்தேன். ஊரு நல்லதுக்காக சாமி பேரால உத்தரவு போட்ட எங்க தாத்தன், பாட்டன்களை நெனச்சா பெருமையா இருக்கு!’’ என்கிறார்கள் நேசச் சிரிப்புடன்.

மந்தையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம், ‘‘ஏம்ப்பா பட்டாசு வெடிச் சிருக்கீங்களா?’’ என்றோம். ‘‘அது சாமிக்குத்தம், செய்யக்கூடாது!’’ என்றனர்.

தமிழர் கிராமம்!

செ.சல்மான் படங்கள்:ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism