Published:Updated:

"நான் இயற்கைக்கு செல்லம்!"

சந்திப்பு

"நான் இயற்கைக்கு செல்லம்!"

சந்திப்பு

Published:Updated:

மிழ் சினிமாவின் டார்லிங் வில்லன் பிரகாஷ்ராஜ், பூமிக்குச் செல்லம்! ஆம்... அவர் ஒரு விவசாயி! சென்னையில் மகாபலிபுரம், ஹைதராபாத்தில் கொண்டாரெட்டிபள்ளி, கம்மதானம் மற்றும் கொடைக்கானல் ஆகிய ஊர்களில் பண்ணை வீடுகள் அமைத்து, விவசாயம் செய்துவருகிறார். இதற்காகவே விவசாயப் பட்டதாரிகள் மூவரை நியமனம் செய்துள்ளார். பொங்கல் சிறப்பிதழுக்காக விவசாயி பிரகாஷ்ராஜை சந்தித்தோம்.

"நான் இயற்கைக்கு செல்லம்!"

‘‘விவசாயம் நம்ம நாட்டின் முதுகெலும்புனு சொல்றோம். ஆனா, அதைத் தழைக்க வைக்கிறதுக்கான வழிகளைச் செய்யலைன்னா, உலக நாடுகள் முன்னால் நாம கூனிதான் போகணும். நாட்டின் முன்னேற்றம் ஒரு பக்கம்னா, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் விவசாயம் தியானம் மாதிரி. இயற்கையோட நாம பேச ஒரு நல்ல வழி. இந்த 10 ஏக்கர் நிலத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள், செடிகள் இருக்கு. இதையெல்லாத்தையுமே என் பிள்ளைங்கபோல ஆர்வமாவும் ஆசையாவும் வளர்க்கிறேன். இந்தச் செல்லங்களோட நான் உட்கார்ந்திருக்கிறதே பெரிய சந்தோஷமா இருக்கு. நம் பிள்ளைங்க சோறுபோட நாம சாப்பிடுறது ஒரு குடுப்பினை. எனக்கு, என் குடும்பத்துக்கு, சுற்றத்துக்குச் சோறுபோடும் பூமி இது!’’ - பேச்சின் நடுவே, காற்று அசைத்துவிட்ட ஏணி, பப்பாளி மரம் ஒன்றின் மீது விழுந்தது. ‘‘ஒரு நிமிஷம், குழந்தைக்கு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வர்றேன்” என்று சொல்லிச் சென்றவர், ஏணியை நிமிர்த்திவிட்டு, மரத்துக்கு ஏதும் சேதமா என்று பார்த்துவிட்டுத் திரும்புகிறார்.

‘‘நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று எப்போதும் பிஸியாக இருக்கும் தேசிய விருது பெற்ற இந்தக் கலைஞருக்கு விவசாயத்தில் ஆர்வம் வந்தது எப்படி?’’

“சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே வாழ்க்கை ரொம்ப பரபரப்பா ஆயிடுச்சு. எப்பவுமே ஃப்ளைட்ல போறதும் வர்றதுமா இருந்தேன். சில மணி நேரம் தரையில உட்காரமாட்டோமானு ஏக்கம் வந்தது. ஒருமுறை சென்னை டு பெங்களுரு காரில் போனப்போ, பச்சைப் பசேலென காடு, சில்லுனு காத்து இதெல்லாம் என்ன ரொம்பவும் ஈர்த்துடுச்சு. அப்படியான அடுத்தடுத்த பயணங்களும், ஜன்னலோரமா இயற்கையை ஏக்கத்தோட பார்க்க வெச்சது. கான்க்ரீட் காடுகளை விட்டு விலகி, இயற்கையின் மடியில் இளைப்பாற முடிவெடுத்தேன். ஒரு அப்பார்ட்மென்ட் வாங்குற காசுக்கு ஏக்கர் கணக்குல நிலத்தை வாங்கினேன். மரங்கள் வளர்த்தேன், அழகான பூந்தோட்டம் அமைச்சேன், காய்கறிகள் பயிரிட்டேன், டிராக்டர் ஓட்டப் பழகினேன். அப்போ கிடைக்கிற சந்தோஷம், காஸ்ட்லி கார்ல போகும்போதுகூட எனக்குக் கிடைச்சதில்லை.

நான் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன் இல்லை. ஆனாலும், கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்,  இயற்கை விவசாயி சுபாஷ் பாலேக்கர். அவரைச் சந்திச்சு, ‘எனக்கும் இதைப் பற்றிக் கற்றுக்கொடுங்க’னு கேட்டேன். ‘ஒரு நடிகருக்கு விவசாயத்தில் இவ்வளவு விருப்பமா?!’னு சர்ப்ரைஸ் ஆனார். ரொம்பத் தெளிவானவர், நேர்படப் பேசுவார். ‘நாட்டு மாடு வாங்கி நிலத்தில் வளர்க்கணும்’ என்பது, அவர் எப்போதுமே சொல்ற ஒரு விஷயம். நானும் அப்படியே செய்தேன். ரெண்டு, மூணு வருஷத்துல நிலம் விருத்தியாச்சு. அந்த மாட்டோட சாணமும் கோமியமும் மண்ணை வளமாக்கியது. அடிக்கடி அவர் என் பண்ணைக்கு வருவது, நான் அவர் பண்ணைக்குச் செல்வதுனு, இன்றுவரை அவருடன் நட்பு தொடர்வது, எனக்குப் பெருமையா இருக்கு.

கொண்டாரெட்டிபள்ளினு ஒரு கிராமத்தைத் தத்தெடுத்திருக்கேன். அங்கயிருக்க 230 விவசாயிகளுக்கும் நல்ல வாழ்வாதாரமும் பொருளாதாரமும் அமையணும், நமக்கு அடுத்த தலைமுறை எல்லாம் நல்ல ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிடணும்னு நினைச்சு, ‘வெஜ் மந்திரா’ என்ற விவசாயிகள் சந்தையை 2015-ல் ஆரம்பிச்சோம். கிராமத்தில் 16 ரூபாய்க்கு விற்பனையாகிற பாவற்காய் 150 கிலோ மீட்டர் தாண்டினவுடனே 60, 70 ரூபாய் ஆயிடுது. உழுதவனுக்கு கிடைக்காத ஊதியம் இடைத்தரகர்களுக்குக் கிடைக்குது. அதைத் தடுத்து மொத்த விலையையும் விவசாயிக்கு தருவதே இதன் நோக்கம். மேலும் வார இறுதிகளில் பள்ளிச் சிறுவர்கள், குடும்பங்கள்னு இந்தப் பண்ணையை வந்து பார்த்து இயற்கை விவசாயம் பற்றி புரிந்துகொள்ளவும் இது ஒரு தளமா எதிர்காலத்தில் நிச்சயம் அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நான் இயற்கைக்கு செல்லம்!"

நான் ஏதோ இயற்கையைக் காப்பாத்துறேன்னு சொல்ல வரல. இயற்கை ரொம்பப் பெருசு. டைனோசரையே பார்த்த இயற்கைக்கு நாம எம்மாத்திரம்? நமக்கு ஒரு நொடி எவ்வளவு வேகமாக் கழியுமோ அதே மாதிரி இயற்கைக்கு 100 வருடங்கள் கழியும். பூமியோட ஆயுள் அவ்வளவு அதிகம். நம்மோட இந்த குறுகிய

"நான் இயற்கைக்கு செல்லம்!"

ஆயுசுலேயே பூமியை இவ்வளவு சேதப்படுத்திட்டா, நமக்கு அடுத்து வர்றவங்கதான் அந்த விளைவைச் சந்திக்கணும். நாம இயற்கையோட ஒன்றி வாழ்ந்தாதான் அது நம்மைப் பாதுகாக்கும். அதுக்கு முதலில் செய்ய வேண்டியது, பூமிக்கு நீரைக்கொண்டு சேர்ப்பது. வீட்டில் மொசைக்கில் மொழுகுவது, ரோட்டில் தாரை ஊற்றி மொழுகுவதுனு நீர் செல்லும் வழிகளையெல்லாம் அடைச்சுட்டா, பூமிக்கு அவதிதான். நம்மை மூக்கை பிடிச்சுட்டு, நல்லா மூச்சுவிடச் சொல்ற மாதிரி. மரங்களோட வேர்தான் நீரை பூமிக்குச் செலுத்தும். அதனால, மரங்கள் வளர்க்கிறது ரொம்ப முக்கியம். மாடித்தோட்டத்தில் நல்ல மாற்றங்களை உண்டாக்கின பெண்கள், அடுத்ததா மரங்கள் உருவாக்குவதிலும் முயற்சி எடுப்பாங்கனு நம்பிக்கை இருக்கு.

சோறு தண்ணி எல்லாத்துக்கும் நாம பூமியை நம்பிதான் இருக்கோம். அதை அழிச்சு நம்ம அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்து ஒண்ணும் ஆகப்போறதில்லை. புலி வேட்டையாடினாகூட ஒரு மானை மட்டும்தான் கொல்லும். பசிக்கு, ஈவினிங் டிபனுக்கு, இரவு டின்னருக்கு, நாளை பிரேக்ஃபாஸ்ட்டுக்கு, தனது பிள்ளை, பேரன் பேத்திக்குனு சேர்த்து வைக்கிறதில்லை. எல்லா இயற்கை வளத்தையும் காசா மாத்திட்டு சாப்பிடவும் குடிக்கவும் என்ன பண்ணுறது? அது, மரத்தோட உயரமான ஒரு கிளையில உட்கார்ந்துட்டு அதே கிளையை வெட்டுற மாதிரி!”

- தன் ஆழமான கண்களால் ஊடுருவிப் பார்க்கிறார், பிரகாஷ்ராஜ்!

சந்திப்பு மற்றும் படங்கள்: ச.சந்திரமௌலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism