
குயிக் லாபம் தரும் தொடர்!
க்யூட் ஜுவல்லரி பாக்ஸ்...க்வில்லிங்கில்!
‘‘எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரி. கல்யாணமாகி சென்னைக்கு வந்தப்போ, ஏதாச்சும் தொழில் தொடங்கலாம்னு நினைச்சா, எல்லா தொழிலுக்கும் முதலீடு அதிகமா தேவைப்பட்டுச்சு. அப்போ கிராஃப்ட்டை தொழிலா செய்துட்டு இருந்த என் தோழி ஒருத்திதான், எனக்கும் இந்தப் பாதையைக்

காட்டினா. அவ தந்த ஆலோசனைகளோட களத்தில் இறங்கினேன். பயிற்சி வகுப்புகள் எதுவும் போனதில்லை. பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்னு கத்துக்கிட்ட கிராஃப்ட் தான். ஜுவல்லரி மேக்கிங், டெரகோட்டா ஜுவல்லரி, ஆரி வொர்க், பிளவுஸ் டிசைனிங்னு இப்போ இந்த ஏரியாவில் நான் எக்ஸ்பர்ட். பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன். ஆன்லைனில் அப்லோடு செய்ததும், ஆர்டர்கள் குவிய ஆரம்பிக்க, இப்போ மாசம் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்... வேலைக்குப் போற ஸ்ட்ரெஸ் இல்லாம, வீட்டில் இருந்தே!’’ என்று நிதானமாக பேசும், சென்னையில் உள்ள ‘கிருத்தியா கிரியேஷன்ஸ்’ஸின் உரிமையாளர் விஜி ராஜா, க்வில்லிங் ஜுவல்லரி பாக்ஸ் செய்யக் கற்றுத் தருகிறார் இங்கு...

அடிப்படை உருவங்கள் செய்வோம்...
சிங்கிள் கலர் காயில்
படம் 1: க்வில்லிங் ஊசியில் இருக்கும் துளையில் க்வில்லிங் பேப்பரை நுழைத்து டைட் காயில் போல சுற்றவும்.

படம் 2: சுற்றிய பேப்பர் உருவிவிடாதவாறு காயிலின் மையத்தில் பிடித்துக்கொண்டு ஊசியில் இருந்து மெதுவாகக் கழற்றி, அதன் ஒரு முனையில் ஃபெவிக்கால் தடவிக் காயிலுடன் ஒட்டிக் காயவிடவும்.
டபுள் கலர் காயில்
படம் 1: இரண்டு வண்ண க்வில்லிங் பேப்பர் களை ஒன்றோடு ஒன்று ஒட்டி அதன் நீளத்தை அதிகரிக்கவும்.

படம் 2: காயிலுக்குச் சுற்றியதுபோலவே சுற்றி ஃபெவிக்கால் தடவி ஒட்டினால், டபுள் கலர் காயில் ரெடி.
பெட்டல் வடிவம்
படம் 1: இரண்டு வண்ண க்வில்லிங் பேப்பர்களை ஒன்றோடு ஒன்று ஒட்டி அதன் நீளத்தை அதிகரிக்கவும்.

படம் 2: ஒரு காயில் செய்து அதைப் படத்தில் காட்டியுள்ளபடி அழுத்தி மேல் பகுதியைக் கூர்மையாக்கவும்.
ஜுவல்லரி பாக்ஸ் செய்ய தேவையானவை:
3 mm -க்வில்லிங் பேப்பர் - வெள்ளை - 50, பிங்க் - 70, வெள்ளை நிற முத்து - 1, க்வில்லிங் ஊசி, வார்னிஷ், பிரஷ், கத்தரிக்கோல்.
செய்முறை:
படம் 1: ஜுவல்லரி பாக்ஸின் சுவர்கள் செய்ய, முதலில் 50 பிங்க் க்வில்லிங் பேப்பர்களை எடுத்து தனித்தனியே சுற்றி 50 சிங்கிள் பிங்க் காயில்கள் செய்யவும்.
படம் 2: அதேபோல 25 வெள்ளை க்வில்லிங் பேப்பர்களை எடுத்து 25 சிங்கிள் வொயிட் காயில்கள் செய்யவும்.

படம் 3: 15 வெள்ளை க்வில்லிங் பேப்பரையும், 10 பிங்க் க்வில்லிங் பேப்பரையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி (விரும்பும் வகையில் பேப்பர்களின் விகிதத்தை, நிற அடுக்குகளை மாற்றிக்கொள்ளலாம்) படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு பெரிய டபுள் கலர் காயில் செய்து காயவிடவும். இவை ஜுவல்லரி பாக்ஸின் பேஸ் மற்றும் மூடிக்கு.
படம் 4: ஒரு பிங்க் க்வில்லிங் பேப்பர், ஒரு வெள்ளை க்வில்லிங் பேப்பர் எடுத்து, ஒன்றோடு ஒன்று ஒட்டி பெட்டல் வடிவம் செய்யவும். அதேபோல மொத்தம் பத்து பெட்டல் வடிவங்கள் செய்து காயவிடவும்.
படம் 5: பெட்டல் வடிவங்களை படத்தில் காட்டியுள்ளபடி ஃபெவிக்கால் தடவி ஒன்றோடு ஒன்று பூ வடிவத்தில் ஒட்டவும்.
படம் 6: பூ வடிவத்தின் நடுவில் வெள்ளை முத்து ஒன்றைவைத்து அலங்கரிக்கவும்.
படம் 7: டபுள் கலர் பெரிய காயில் ஒன்றின் மீது, சிங்கிள் கலர் காயில்களை, 2 பிங்க் காயில், 1 வெள்ளை காயில் என்ற விகிதத்தில் ஒரு வரிசை ஒட்டவும்.
படம் 8: இப்போது வெள்ளை காயில், பிங்க் காயில் என படத்தில் காட்டியுள்ளபடி `ஸிக்ஸாக்'காக ஒட்டவும்.

படம் 9: இதேபோல 9 வரிசை ஒட்டி முடிக்கவும்.
படம் 10: மற்றொரு பெரிய காயிலின் நடுவில் ஃபெவிக்கால் தடவி, செய்துவைத்துள்ள பூ டிசைனை
படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டவும்.
படம் 11: வார்னிஷ் அப்ளைசெய்து காயவிடவும்.
படம் 12: செம க்யூட்டான க்வில்லிங் ஜுவல்லரி பாக்ஸ்... உங்கள் கைகளில்!
``இந்த வெயிட்லெஸ் க்வில்லிங் ஜுவல்லரி பாக்ஸ்... ஹேர்க்ளிப்ஸ், சேஃப்டிபின், லிப்ஸ்டிக் என்று வைத்து, பெண்கள் ஹேண்ட்பேக்கோடு எடுத்துச் செல்ல வசதியானது என்பதால், தோழிகளுக்கு கிஃப்ட் செய்ய பலராலும் விரும்பி வாங்கப்படும். விசேஷ வீடுகளுக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டாகவும் ஆர்டரின் பேரில் செய்து கொடுக்கலாம். குறைந்தபட்சம் ரூபாய் 300 விலை வைக்கக்கூடிய இந்த ஜுவல்லரி பாக்ஸை, அளவு, கலர் காம்பினேஷன், டிசைன் என ஜமாய்த்தால், இன்னும் விலை கூட்டலாம்!’’ உற்சாகமாக சொல்லி முடித்தார் விஜி.
- க்வில்லிங் கிளாஸ் தொடரும்....
சு.சூர்யா கோமதி, படங்கள்:ஜெ.வேங்கடராஜ்