அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வீட்டில் மலரும் தாமரை !

வீட்டில் மலரும் தாமரை !
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டில் மலரும் தாமரை !

வீட்டுத்தோட்டம்

‘‘நான் என் செடிகளுக்கு ஆசையும் அன்புமா தண்ணீர்விட்டுக் கண்ணுங்கருத்துமா பார்த்துக்கிறதுல, என் பிள்ளைங்களுக்கு அதுங்ககிட்ட கொஞ்சம் பொறாமைகூட உண்டு!’’

- பெரிய சிரிப்புடன் சொல்கிறார், அவள் விகடன் 18-ம் ஆண்டு சிறப்பிதழில் தொடங்கிய 18 பவுன் தங்கத்துக்கான மெகா பரிசுப் போட்டிகளில்,  `கார்டன் டு கிச்சன்' போட்டியின் வெற்றியாளர்... கேரள மாநிலம், திருவனந்தபுரம் கரமனையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் லலிதகுமாரி. வீட்டு வாசலில் கம்பீரமான பலாமரம், உள்ளே செடி, கொடிகள் என அசத்துகிறது அவர் தோட்டம்.

வீட்டில் மலரும் தாமரை !

‘‘என் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல். குழித்துறை தேவிகுமாரி பெண்கள் கல்லூரியில் பணியாற்றினேன். முப்பத்து ஏழரை வருஷ சர்வீஸ் முடிச்சு பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்தப்போ, என் தோட்டம்தான் எனக்கான பொழுதுபோக்கு. அந்தச் சமயத்துல, ‘கேரளா அரசு சார்பில் மாடித்தோட்டம் குறித்த 10 நாள் பயிற்சி நடக்குது. எனக்குத் துணைக்கு நீங்களும் வர்றீங்களா ஆன்ட்டி?’னு என் பொண்ணோட தோழி ஒருத்தி கூப்பிட, கிளம்பினேன். அதுவரை மாடித்தோட்டம்னா என்னன்னே தெரியாத நான், `மாடித்தோட்டம் அமைக்கிறது எப்படி, ரசாயன உரத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது, அதனால் ஏற்படும் ஆரோக்கியக்கேடுகள் என்ன, மாடித்தோட்டம் அமைக்கிறதால் கிடைக்கும் நன்மைகள் என்ன'னு ஏ டு இஸட் எல்லா தகவல்களையும் தெரிஞ்சுக்கிட்டேன்.

பயிற்சி முடிந்த பத்தாவது நாள், ‘இயற்கை உரம் பயன்படுத்திதான் மாடித்தோட்டம் அமைப்பேன், எக்காரணம் கொண்டும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தமாட்டேன்’னு கலந்துக்கிட்டவங்க எல்லோரும் உறுதிமொழி எடுத்த பிறகுதான் பங்கேற்புச் சான்றிதழே கொடுத்தாங்க. வீட்டுக்குவந்த கையோட, அடுத்தநாளே வீட்டு மாடியைச் சுத்தம் செய்து, கோணிச்சாக்குகள் வாங்கி மணலை நிரப்பி சாணகத்தூள் (சலித்த சாணப்பொடி), வேப்பம் பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு, காய்ந்த இலைத்தூள் எல்லாத்தையும் கலந்து ஒவ்வொரு கோணிசாக்குலயும் அடி உரமா வெச்சேன்.

முதல்கட்டமா குடமிளகாய், நீள வெண்டை, வெள்ளரி, காராமணி, பாகல்,

பூசணி, தக்காளினு விதைகளைத் தூவினேன். நாலாவது நாளே முளைப்புத் தெரிஞ்சு நல்லா வளர்ந்துச்சு. ரசாயன உரம் எதுவும் பயன்படுத்தாம என்னோட வீட்டுல நானே வளர்த்த செடிகள் கொடுத்த காய்களைச் சமைத்துச் சாப்பிட்டப்போ, அந்தப் பெருமையை வார்த்தைகளில் சொல்ல முடியாது. தொடர்ந்து கத்திரிக்காய், மிளகாய், சீனிக்கிழங்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லினு எல்லாவித காய்கறிகளையும், செண்டு மல்லி, பிச்சி, கனகாம்பரம்னு எல்லா வகைப் பூக்களையும் தொட்டிகளில் வளர்க்க ஆரம்பிச்சேன். பலா, கறிப்பலா, வாழை, கொய்யா, ரம்பூட்டான் ஆகிய மரங்களையும் நட்டேன்.

இப்போ என் தோட்டத்தை வெள்ளை மிளகாய், பச்சை மிளகாய், மரவள்ளிக்கிழங்கு, சீனிக்கிழங்கு, மணத்தக்காளி, பப்பாளி, ரம்பை, எலுமிச்சைப்புல், தூதுவளை, துளசி, மணத்தக்காளி, அகத்தி, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மிளகு, ரோஜா, செவ்வந்தி, மல்லி, முல்லை, மந்தாரை, செண்பகம், அரளினு காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், பூக்கள், பழ வகைகள்னு செடியும், மரமுமா சோலை ஆக்கிட்டேன்’’ என்றவருக்கு, பக்கத்துவீட்டுப் பாட்டி மூலமாக ஆர்கிட்ஸ் செடிகள் அறிமுகமாகியிருக்கின்றன.

‘‘மண் தேவையில்லை, அடி உரம் தேவையில்லை, தண்ணி மட்டும் கொஞ்சமாத் தெளிச்சாக்கூடப் போதும்னு ரெண்டு பூச்செடியை ஒடிச்சுக் கொடுத்தாங்க அந்தப் பாட்டி. சின்ன தொட்டியில கரித்துண்டு, தேங்காய் கூடு இதை மட்டும் வெச்சு தண்ணி ஊத்தினேன். ரெண்டாவது நாளே பிரமாதமா தளிர்க்க ஆரம்பிச்சுடுச்சு. பலா மரத்துலதான் ஆர்க்கிட்ஸ் செடிகளைத் தொட்டியில் வெச்சுக் கட்டித் தொங்கவிட்டிருந்தேன். காத்து அடிக்கும்போதெல்லாம் ஊஞ்சல்மாதிரி அங்கேயும் இங்கேயும் ஆடிக்கிட்டே இருக்கிறதைப் பார்க்கவே அழகா இருக்கும். நோய் வந்துட்டதுனால இப்போ முதல்தள மாடியில தனியா பசுமைக்குடில் அமைச்சு அதுல தொட்டில் மாதிரி தொங்கவிட்டு அணில், பறவைகள், பூச்சிகள் தொல்லை இல்லாம பாதுகாப்பா வளர்க்கிறேன்’’ என்றவர், காற்றை மட்டும் சுவாசித்து வளரும் ஏர் பிளான்ட்ஸ் வகைகள், போன்சாயில் ஆலமரம், அரசமரம் என்று அசத்துகிறார்.

வீட்டில் மலரும் தாமரை !

லலிதாகுமாரியின் தாமரைத்தொட்டியை நாம் ஆச்சர்யத்துடன் எட்டிப்பார்க்க, ‘‘எட்டு வருஷத்துக்கு முன்னால என்னோட சொந்த ஊரான குளச்சலுக்கு ஒரு குடும்ப விழாவுக்குப் போயிருந்தப்போ, எங்க கோயில் தெப்பக்குளத்துல அஞ்சு தாமரைக் கிழங்குகளைப் பறிச்சு, பத்திரமா பிளாஸ்டிக் வாளிக்குள்ள தண்ணி நிரப்பி உள்ளே போட்டு வீட்டுக்குக் கொண்டுவந்தேன். மறுநாளே, கொத்தனாரை வரச்சொல்லி தரையில இருந்து 4 அடி உயரத்துல திண்டுகட்டி, திண்டுல இருந்து 4 அடி உயரம், 6 அடி நீளம், 4 அடி அகலத்துல தொட்டி கட்டச்சொல்லி, அரைத்தொட்டி அளவுக்கு மணலை நிரப்பி, அதுக்கு மேல ஒரு சட்டி பசுஞ்சாணத்தைபோட்டு, ஓலைப் பெட்டிக்குள்ள தாமரைக்கிழங்கை வெச்சு இறுக்கமா கட்டி தொட்டிக்குள்ளபோட்டு, தொட்டி முழுசும் தண்ணி நிரப்பிட்டேன். ரெண்டே மாசத்துல தொட்டிக்கு மேல தாமரைக்கொடி எட்டிப்பார்த்துச்சு. எட்டாவது மாசத்துல ஒரே சமயத்துல அஞ்சு பூக்கள் பூத்துச்சு. அதில் இருந்து, பக்கத்துல இருக்குற வராகமூர்த்தி பெருமாள் கோயிலுக்கு தொடர்ந்து என் தாமரைத்தொட்டி பூக்கள் தந்துட்டே இருக்கு’’ என்றவர்,

‘‘தினமும் காலையில 6 மணிக்கு முதல் தளத்துல இருக்குற ஆர்க்கிட்ஸ் செடிகளுக்கும், மாலை 4 மணிக்கு மாடித்தோட்டத்துச் செடிகளுக்கும் தண்ணீர் ஊத்துவேன். என் கணவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்னு யாரையுமே நம்பி அந்தப் பொறுப்பைக் கொடுக்கமாட்டேன். என் ரெண்டு பிள்ளைகளும் கல்யாணமாகி வெளியூர்கள்ல இருக்காங்க. என் தோட்டம்தான் எப்பவும் எனக்கானது. இப்போ ‘அவள் விகட’னிடம் அது எவ்வளவு பெரிய அங்கீகாரம் வாங்கிக் கொடுத்திருக்கு!’’

- முகத்தில் மின்னல் லலிதகுமாரிக்கு.

இ.கார்த்திகேயன்  படங்கள்:ரா.ராம்குமார்