
பாரம்பர்யம்
பித்தளை மீனை நம் கையில் கொடுத்தார் ஹேமலதா. அதன் செதில் பகுதியை மட்டும் பிடிக்கச் சொன்னார். செய்தோம். மீன் தண்ணீரில் நழுவுவதுபோல, அந்தப் பித்தளை மீன் கையில் அழகாகச் சுழன்றது. இது மட்டுமல்ல, கரண்டி முதல் நந்தி சிலைவரை, கிட்டத்தட்ட 200 வருடங்கள் பாரம்பர்யம் கொண்ட பல பித்தளைப் பாத்திரங்களைப் பாதுகாத்து வருகிறார், ஹேமலதா. இது சேகரிப்புப் பழக்கம் அல்ல. தன் பூட்டி, பாட்டி, அம்மா என்று அவர் தலைமுறைப் பெண்களால் அவருக்குக் கடத்தப்பட்ட வீட்டுப் பாத்திரங்களே! அவற்றை வாழையடி வாழையாக பாதுகாத்துப் பராமரித்து தினசரி பயன்படுத்தியும் வரும் ஹேமலதாவைச் சந்தித்தோம்.
மதுரை மாவட்டம், முத்துப்பட்டியில் உள்ள ஹேமலதாவின் வீட்டுக்குள் நுழைந்ததும், பித்தளைச் செம்பில் தண்ணீர், பித்தளை காபி டபரா என்று உபசரிப்பு இனித்தது. பின் பித்தளைக் குழிக்கரண்டியில் துளசி, பச்சைக் கற்பூரம் சேர்த்த குளிர்ந்த நீர் தந்து, ‘இப்படித் தினமும் காலையில் குடிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லதுனு பாட்டி சொல்வாங்க’ என்றபடியே வந்தமர்ந்தார் ஹேமலதா.
‘‘என் பாட்டியோட மாமியார், என் பூட்டி பத்திரப்படுத்திய, பயன்படுத்திய பித்தளைப் பொருட்களை எங்க பாட்டிக்குக் கொடுத்தாங்க. பாட்டி, எங்கம்மாவுக்குக் கொடுத்தாங்க. அம்மா, எனக்குக் கொடுத்தாங்க. இது எல்லோர் வீட்டிலும் நடக்கிற விஷயம்தான். ஆனா, அந்தப் பராமரிப்புச் சங்கிலி பெரும்பாலும் அறுந்துடும். ஆனா, எங்க வீட்டுல ஒரு சின்னக் கரண்டிகூட விடாம அத்தனையையும் அப்படியே கை மாற்றி கை பாதுகாத்துட்டு வர்றோம்’’ என்றவர், தன்னிடமுள்ள பொருட்களைக் காட்டுகிறார்.

‘‘முன்னுரையில் சொன்ன பித்தளை மீன், தேள் மற்றும் மீன் வடிவ மூடியிட்ட கண்மைக்கூடு (விளக்கெண்ணெயில் எரியும் தீபத்தில் இருந்து கிடைக்கும் மையை, இதில் சேகரித்து வைப்பாராம்), பித்தளை பொம்மையின் அழகான பித்தளை ஜடை, நாகர்வடம் கொண்ட வித்தியாசமான நந்தி சிலை, சக்கரத்துடன் உருளும் யானை விளக்கு, பாவை விளக்கு போன்ற கலைப்பொருட்களில் இருந்து பித்தளை அண்டா, வாளி, பானை, குண்டாசட்டி, முறம், அரிவாள்மனை, கரண்டி போன்ற பயன்பாட்டுப் பொருட்கள், மணி, கமண்டலம், தூபக்கால் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் என ஒவ்வொரு பொருளும் பல நூற்றாண்டுகள் ஆயுள்கொண்டவை. அத்தனையையும் மீறிய அழகுடன், சின்னச் சின்னச் சொப்புச் சாமான்கள்.

‘‘இந்தச் சொப்பு சாமான்கள் மூலமா பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளை வளரும்போதே கற்றுக்கொடுத்து வளர்த்திருக்காங்க. என் பொண்ணும் இதையெல்லாம் வெச்சு விளையாடி வளர்ந்ததாலதான், கல்யாணம் ஆகி அமெரிக்கா போனாலும், ‘எனக்கும் வேணும் இந்த பாரம்பர்ய பித்தளை சாமான்கள்’னு கேட்டு, பித்தளை யானை பொம்மை, கிளி பொம்மை, கொலுபொம்மைங்க, தேங்காய்னு ஃப்ளைட்ல எடுத்துட்டுப் போயிட்டா. இப்போ இங்க இருக்கிற பொருட்களை எல்லாம், நான் என் மருமகளுக்குக் கொடுப்பேன்’’ என்றவர்,
‘‘அரிய பித்தளைப் பொருட்களை எல்லாம் பரணில் பத்திரமா வெச்சிருப்பேன். பயன்படுத்தலைன்னா பச்சையம் அடைஞ்சிரும் என்பதால, நவராத்திரி, பொங்கல், தீபாவளிக்கு எல்லாத்தையும் கீழ இறக்கி, விளக்கி, பயன்படுத்திட்டு, மறுபடியும் இரும்பு டிரங்கு பெட்டிக்குள்ள பத்திரமா வெச்சிடுவேன். கல்லூரியில் வேதியியல் பேராசிரியா இருக்கும் என் கணவர் சுப்பிரமணியம், இந்தப் பித்தளைப் பொருட்களை பராமரிக்கிறதில் நிறைய டிப்ஸ் தருவார்’’ எனும்போது, எக்ஸ்ட்ரா சந்தோஷம் அவர் குரலில்.


‘‘முன்ன எல்லாம் கல்யாணம், காதுகுத்து, வளைகாப்புனு எந்த விழாவுக்கும் பிறந்த வீட்டுச் சீரா பித்தளைப் பாத்திரங்கள்தான் வைப்போம். இப்போ டப்பர்வேர் சீர் வைக்கிற அளவுக்கு வந்துட்டோம். உடம்புக்கு நல்லது செய்ற பித்தளையைவிட்டுட்டு, கேன்சருக்குக்கூட காரணமாச் சொல்லப்படுற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி, பாரம்பர்யம், ஆரோக்கியம் எல்லாத்தையும் அழிக்கிறோம். இப்பவும்கூட எல்லார் வீட்டுலயுமே சீருக்கு வெச்ச பித்தளைப் பாத்திரங்கள் பரண்மேலதான் கிடக்கும். அருமையை உணர்ந்தால், ஆரோக்கியம் கிடைக்கும். பித்தளைச் சட்டியில் செய்த உப்புமாவின் ருசியை, என் கணவர்கிட்ட கேட்டுப்பாருங்க’’ என்று புன்னகையுடன் முடித்தார், ஹேமலதா.
சே.சின்னதுரை படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
பித்தளையின் பெருமைகள்!
பித்தளையின் உலோக இயல்புகள் பற்றிச் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த வேதியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து.

‘‘தாமிரம் 60 முதல் 80 சதவிகிதமும், துத்தநாகம் 20 முதல் 40 சதவிகிதமும் கலந்த உலோகக்கலவையே பித்தளை. இரண்டையும் தனித்தனியே நேரடியாகப் பயன்படுத்தினால் நஞ்சு. அதுவே இரண்டும் இணையும்போது, அது நன்மை தருவதாக மாறுகிறது. அந்தப் பாத்திரங்களில் சமையல் செய்யும்போது, அது நுண்ணிய அளவில் நம் உடலில் சேர்வதால் கிடைக்கவல்ல நன்மைகள் பல.
பித்தளையில் இருக்கும் துத்தநாகம் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கவல்லது. மேலும் 300 வகை என்சைம்களின் இயக்கத்துக்கு இது உதவுவதோடு, மனிதனின் வளர்சிதை மாற்றத்துக்கும் துணைபுரிகிறது. பித்தளையில் இருக்கும் தாமிரம் உடல்செயல்பாட்டுக்கும், 13 வகை நொதிகளின் செயல்பாட்டுக்கும் ஊக்கம் தருகிறது. உடலில் இயற்கை வினைகளுக்குத் தூண்டுகோலாக உள்ளது. புரோட்டீன் செயல்பாட்டுக்கும் கைகொடுக்கிறது.’’
பித்தளைப் பாத்திரம்... பயன்கள் பல!
பித்தளை பாத்திரங்களின் பயன்பாட்டு நன்மை பற்றிச் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த அரசு சித்தமருத்துவர் திவ்யஷாலினி....

‘‘நல்ல தரமான பித்தளைக் குடத்தில் தண்ணீர் சேமித்துக் குடிக்கும்போது, உடலின் வெப்பம் குறையும்.
பித்தளைப் பாத்திரத்தில் வெந்நீர் வைத்துக் குடிக்கும்போது, சரும நோய்களை எதிர்க்கக்கூடிய சக்தி கிடைக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது.
பித்தளைப் பாத்திரத்தில் தேநீர் தூளைக் காயவைத்துக் குடிக்கும்போது, அது வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
குழந்தைகள் பித்தளைச் செப்பு சாமான்கள் வைத்து விளையாடும்போது அந்த உலோகம் அவர்கள் சருமத்தில் உரசுவதால் அவர்களுக்கு நுண் உயிரித் தாக்குதல் குறைக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
பித்தளைப் பானையில் பொங்கல் சமைக்கும்போது, அரிசியில் இருக்கும் மாவுச்சத்து, பருப்பில் இருக்கும் புரதச்சத்து, நெய்யில் இருக்கும் கொழுப்புச்சத்து, ஏலக்காயின் ஜீரண சக்தி போன்றவை அப்படியே உடலுக்குக் கிடைக்கப்பெறும்.’’