Election bannerElection banner
Published:Updated:

காதல் அழிவதில்லை!

காதல் அழிவதில்லை!
காதல் அழிவதில்லை!

-கண்முன்னே ஓர் உதாரண ஜோடி...காதலர் தின ஸ்பெஷல்

தான் உருகி உருகிக் காதலித்த ஜான்சன், விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் கிடைக்க... வாழ்க்கையே வெறுத்துப்போனார் ரோஸ். கன்னியாஸ்திரி ஆக நினைத்து, அதற்கான படிப்பில் சேர்ந்தார். ஆனால், 10 வருடங்களுக்குப் பின் ஜான்சன் தன் கண் முன்னே உயிரோடு நிற்பார் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அப்படி அவரைச் சந்தித்த நிமிடங்களில் கிளர்ந்தெழுந்த பேரன்பு, பிரபஞ்சத்தின் அழகு!

சினிமா கதை போல விரிகிறது, லீமா ரோஸ் விவரிக்கும் நிஜக்கதை!

காதல் அழிவதில்லை!

“எனக்குச் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்துல இருக்கிற ஒரு கிராமம். 2003-லதான் அவரைப் பார்த்தேன். அப்போ நான் லெவென்த் படிச்சிட்டு இருந்தேன். கார் டிரைவரான அவர், எங்க ஊருல இருக்கிற தன்னோட தூரத்து சொந்தமான அக்கா வீட்டுக்கு வந்திருந்தார். அவர்கிட்ட எதார்த்தமா நான் பேச்சுக் கொடுத்தப்ப, `நல்லா படிக்கணும்'னு ஆரம்பிச்சு நிறைய அறிவுரைகள் சொன்னார். அது, அவர் மேல எனக்கு மரியாதையை உருவாக்கிச்சு. அடுத்தடுத்த நாட்கள்ல, ‘உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’னு அவர் சொன்ன தருணத்துல அது காதலா மாறுச்சு. ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சோம். சில மாசங்கள்தான் போயிருக்கும். வந்த வேலை முடிஞ்சு, சொந்த ஊரான தேனி மாவட்டம், ராயப்பன்பட்டிக்கு கிளம்புறதா சொன்னார்” என்ற ரோஸை, தொடர்ந்தார் ஜான்சன்...

``மதுரையில டிரைவர் வேலை கிடைச்சது. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் என் வீட்டு நம்பருக்கு ரோஸ் கால் பண்ணுவாங்க. போன் வழியா எங்க காதல் தொடர்ந்தது. 2004-ல் நடந்த கார் விபத்துல நான் கோமா நிலைக்கு போயிட்டேன். 23 நாள் கழிச்சு கண் முழிச்சப்ப, ஒவ்வொருத்தரையா பார்க்கப் பார்க்கத்தான், அவங்க யாரு, என்னனு அவங்களைப் பத்தின பழைய ஞாபகமே வந்தது. இந்தக் களேபரத்துல என் காதல், எனக்கு மறந்துபோச்சு’’ என்று, தான் காதலைத் தொலைத்த நொடியை, இப்போதும் கண்ணீருடன் பகிர்கிறார் ஜான்சன்.

‘‘திடீர்னு அவர்கிட்ட இருந்து போன் வர்றது நின்னுபோயிடுச்சு. அவர் வீட்டு இணைப்பும் `துண்டிக்கப்பட்டது’னு வந்துருச்சு. யார்கிட்டேயும் கேட்க பயம். எங்க வீட்லயோ... மாப்பிள்ளை தேடுற படலம் என்னை நெருக்க ஆரம்பிச்சது. வேற வழியே இல்லாம தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, எங்க ஊருல இருக்கிற அவரோட தூரத்து சொந்தமான அந்த அக்காகிட்ட கேட்டுட்டேன். அவர் ஆக்சிடென்ட்ல இறந்துட்டதா சட்டுனு அவங்க சொன்ன அந்த நிமிஷம்... என் உயிரையே உருவிப்போட்ட மாதிரி இருந்துச்சு. வீட்டுல இந்த விஷயத்தை சொல்லி, ‘எனக்குக் கல்யாணம்னா, அது ஜான்சன்கூடத்தான் நடந்திருக்கணும். இனி எனக்குக் கல்யாணமே வேண்டாம். நான் கன்னியாஸ்திரியா போறேன்’னு பிடிவாதமா சொல்லிட்டேன். ‘ஆயுளுக்கும் தனியா கஷ்டப்படப் போறியா?’னு கேட்டவங்களுக்கு, என் வைராக்கியம்தான் பதில். வேற வழியில்லாம என் தங்கச்சி கல்யாணத்தை முடிச்சுட்டாங்க’’ என்ற ரோஸுக்கு, தொடர்ந்த நாட்கள் தவமாக மாறியிருக்கின்றன.

‘‘கன்னியாஸ்திரி ஆவதற்கான 8 வருஷ படிப்பை படிக்க, 2006-ம் வருஷம் நான் திருச்சிக்குப் போனேன். 2014-ம் வருஷம், கோர்ஸின் கடைசி வருஷ பயிற்சிக்காக ஜான்ஸனோட ஊரான ராயப்பன்பட்டி சர்ச்சுக்கு போக வேண்டிய சூழ்நிலை. அவரைப் பத்தி நான் பல பேர்கிட்ட விசாரிக்க, யாருக்குமே அவரைத் தெரியல. மனசெல்லாம் நிறைஞ்ச கனத்தோட சர்ச் கிரவுண்டை விட்டு ஒரு நாள் வெளியே வந்தப்ப, யாரோ என்னை கூப்பிடற மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தா...!'' வார்த்தைகள் தயங்குகின்றன ரோஸுக்கு.

சிறிய இடைவெளிக்குப் பின் தொடர்ந்த ரோஸ், ``யார் இல்லைனு நான் துறவறம் படிக்க வந்தேனோ... அந்த மனுஷன் உசுரோட என் கண்ணு முன்னால வந்து நிக்கிறார். கனவா, நனவானு தெரியாம கண்ணீர் பொங்க, ‘ஏன் மாமா இப்படி என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க...’னு அழ ஆரம்பிச்சுட்டேன். அந்த நிமிஷத்து ஆனந்தத்தை வார்த்தைகள்ல சொல்ல முடியாது” - தழுதழுக்கிறார் ரோஸ்.

இந்தக் காதல், சுபத்தில் முடிந்த மிச்சக் கதையை சந்தோஷமாகச் சொன்னார் ஜான்சன்...

“ரோஸைப் பார்த்த அந்த காலகட்டத்துல, லோன் போட்டு ஒரு கார் வாங்கி ஓட்டிட்டு இருந்தேன். இடைப்பட்ட வருஷங்கள்ல எனக்கான திருமண முயற்சிகள் எல்லாம் ஏதோ ஒரு தடங்கல் காரணமா நின்னபடியே இருந்தது. எனக்கும் உள்மனசுல கல்யாணம் பண்ணிக்கவே தோணலை. எங்க காதல் காரணமா குடும்பத்துல பிரச்னைகள் வந்ததால, நான் செத்துட்டதா அந்த அக்காவும் சொல்லிட்டாங்க போல. பத்து வருஷத்துக்குப் பிறகு ரோஸை பார்த்த நிமிஷம், எல்லாம் ஞாபகத்துக்கு வந்து, மறுபடியும் புதுசா பிறந்தேன். ரோஸ், துறவறப் படிப்பில் இருந்து விலகறதா கடிதம் சமர்ப்பிச்சாங்க’’ என்றவரைத் தொடர்ந்த ரோஸ்,

காதல் அழிவதில்லை!

‘‘எங்க வீட்டுக்கு வந்து இவர் பொண்ணு கேட்க, என்னை வீட்டுச் சிறையில் வெச்சுட்டாங்க. 2014ம் வருஷம் ‘சர்டிஃபிகேட் வாங்க போறேன்னு சொல்லிட்டு தப்பி வந்து தேனி-ஆண்டிபட்டி கணவாய்ல இருக்கிற சர்ச்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போவரைக்கும் எங்க வீட்டுல ஏத்துக்கல’’

-ரோஸின் குரல் உடைகிறது.

‘‘எங்களுக்கு இப்போ பையன் பிறந்திருக்கான். ஜோஷ்வானு பேர் வெச்சிருக்கோம். சீக்கிரம் என் கார் லோனை அடைக்கணும், என் ரோஸை கண் கலங்காம பார்த்துக்கணும்!’’

- வைராக்கியத்துடன் ஜான்சன் சொல்ல,

‘‘தயவுசெஞ்சு எங்க போட்டோ போடவேண்டாம். ‘எங்களை அவமானப்படுத் துறியா?’னு கோபப்படுற நிலைமைதான் இன்னும் இருக்கு. அதனாலதான் என்னோட ஊர் பேரைக்கூட நான் சொல்லல. ராயப்பன்பட்டியில இப்ப நாங்க சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கோம்...’’

- காதல் வாழ்க்கையின் சாட்சியமாக பிறந்திருக்கும் மகன் உறங்கும் தொட்டிலை ஆட்டியபடியே சின்னதாகச் சிரிக்கிறார் ரோஸ்.

உண்மைக் காதலுக்கு அழிவே கிடையாது!

ம.மாரிமுத்து  ஓவியம்:ஸ்யாம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு