Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

காரியத்தடை நீக்கும் திருமேனிநாதர்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் உள்ள திருமேனிநாதர் சிவன் கோயில், கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழம்பெரும் ஆலயம்.  சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் உள்ள சிவன் கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோயில், திருப்பத்தூரில் உள்ள சிவன் கோயில் உள்ளிட்ட  14 திருத்தலங்கள், பாண்டிய நாட்டின் திருத்தலங்கள் என பெருமையோடு போற்றப்படுகின்றன. அவற்றில் 10-வது திருத் தலம், இந்த திருச்சுழி திருமேனிநாதர் ஆலயம்.

ஆலயத்தின் மூத்த பட்டர் சாமிநாதன் பேசும்போது... ‘‘பாண்டியர்களின் காலத்தில் திருச்சுழி என்ற இந்த ஊரின் பெயர் ‘கானப்பேர்’ என்று இருந்தது. அப்போது திருச்சுழியைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஊரும், இதைச் சுற்றியுள்ள கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கி அழியக்கூடிய நிலை. கிராம மக்களும், சிவனடியார்களும் திருமேனிநாதரான சிவபெருமானை நோக்கி வழிபட, சிவபெருமான் தன் கையில் இருந்த திருச்சூலாயுதத்தால் தற்போதுள்ள சந்நிதிக்கு முன்பு ஒரு சுழியலை ஏற்படுத்தி, வெள்ள நீர் முழுவதையும் அந்தச் சுழியல் வழியாக பூமிக்குள் இறக்கினார். அது முதல் இந்த ஊர் ‘திருச்சுழியல்’ ஆனது. காலப்போக்கில் மருவி இப்போது திருச்சுழி என்றழைக்கப்படுகிறது’’ என்றவர்,

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘இதிகாச காலத்தில் இரணியன் என்ற அசுரன், பூமியில் செய்த கொடும் செயல்களைப் பொறுக்க முடியாத பூமாதேவி, அவனை அழித்து, தன் பாவத்தை இந்தப் புனித தலத்தில் சிவனை வழிபட்டு நிவர்த்தி செய்துகொண்டார். எனவே, பாவம் போக்குவதில் ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக சிறந்த சிவஸ்தலமாக விளங்குகிறது, இந்த திருமேனிநாதர் ஆலயம். திருச்சுழிக்கு வந்து சிவனை வழிபட்டால்... அறிந்து செய்த பாவம், அறியாது செய்த பாவம், மறந்து செய்த பாவம், மறவாது செய்த வஞ்சம் போன்ற பாவங்கள் யாவும் பஞ்சுபோல பறந்துவிடும்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

நாயன்மார்களான மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் போன்றோர் இங்கே வந்து சிவபெருமானை வழிபட்டு பாடல்கள் பாடிய வரலாறு உண்டு. காசி, திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், சிதம்பரம், கும்பகோணம் முதலிய தலங்களில் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை, திருச்சுழியில் சிவனடியார்களுக்கு வழங்கும் ஒரு பிடி சோறு நல்கும் என்பது ஐதீகம். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் வழிபாடும், இங்கு பிரபலம். திருமணத்தடை, காரியத்தடை, சொத்துப் பிரச்னை, வீடு வாங்குவதில் பிரச்னை என எல்லாப் பிரச்னைகளுக்கும், இங்கு வந்து வேண்டினால் தடைகள் தகர்ந்து விருப்பங்கள் நிறைவேறும். ரமண மகரிஷி பிறந்தது இந்த திருச்சுழியில்தான். சிறு வயதில் அவர் தினமும் வழிபட்டது, இந்த சிவனாரைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது’’ என ஆலயத்தின் பெருமைகள் சொன்னார் பட்டர்.

திருச்சுழியைச் சேர்ந்த கனகா தன் திருமணத்தடை நீங்க திருமேனிநாதரை வேண்டியவர். ‘‘நான் பி.எஸ்ஸி பட்டதாரி. என் உறவினரான பொறியாளர் சூர்யப்பிரகாஷும் நானும் விரும்பி னோம். சொந்தமா இருந்தும் எங்க கல்யாணத்தில் நிறைய பிரச்னைகள் உண்டாக... இங்கே வந்தோம்; நல்ல படியா கல்யாணம் நடத்திவைக்க வேண்டினோம். ரெண்டு குடும்பத்துக்கும் இடையில் இருந்த எல்லாப் பிரச்னைகளும் நீங்கி, சில மாசங்களிலேயே எங்க திருமணம் சுபமா நடந்து முடிஞ்சது’’ என்றார் மகிழ்ச்சியாக!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

விருதுநகரைச் சேர்ந்த கமலாம்மாள், தான் வீடு வாங்க இங்கு  வந்து  வேண்டுதல் செய்துவிட்டு போயிருக் கிறார் . ‘‘நாங்க குடியிருந்த வீட்டுக்கு முன்னாடி ஒரு காலியிடம் இருந்தது. அதை வாங்கப்போனப்போ, சொத்துப் பிரச்னை ஏற்பட்டிருச்சு. காரியத்தடை நீக்கும் இந்தக் கோயிலைப் பத்திக் கேள்விப்பட்டு, அந்த இடத்து மண்ணை எடுத்துட்டு வந்து, இந்தக் கோயில் பட்டர்கிட்ட கொடுத்தேன். அவர் அதை சாமிகிட்ட வெச்சு பூஜை செஞ்சு, இந்த கோயிலில் இருந்து ஒரு பிடி மண்ணைக் கொடுத்து எங்க வீட்டு பூஜை அறையில் வெச்சு வழிபடச் சொன்னார். ஆண்டவன் அருளால கொஞ்ச நாள்லயே எல்லாப் பிரச்னைகளும் சேர்ந்து, அந்த இடம் எங்களுக்குக் கிடைச்சது’’ என்று பரவசத்துடன் கூறினார்.

சிவனின் ஈடற்ற அருள் பெறவும், எடுக்கும் முயற்சிகள் சுபத்தில் முடியவும் சென்றுவரலாம் திருச்சுழிக்கு!

எம்.கார்த்தி, படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

எப்படிச் செல்வது?

அருப்புக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருச்சுழி. காலை 4.30 மணி முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். கோயிலுக்குச் செல்ல விரும்புவோர் அருப்புக்கோட்டை, ராமேஸ்வரம் பஸ்களில் ஏறினால் அவை திருச்சுழி வழியாக செல்லும். கோயிலின் தொலைபேசி எண்: 04566 - 282644. கோயிலின் செயல் அலுவலர் விக்னேஷ்வரனின் அலைபேசி எண்: 98941 98841.