Published:Updated:

தனிப்பட்ட பிரச்னைக்கு 'விபசார' வழக்கு!

தனிப்பட்ட பிரச்னைக்கு 'விபசார' வழக்கு!
பிரீமியம் ஸ்டோரி
தனிப்பட்ட பிரச்னைக்கு 'விபசார' வழக்கு!

அராஜகம்

தனிப்பட்ட பிரச்னைக்கு 'விபசார' வழக்கு!

அராஜகம்

Published:Updated:
தனிப்பட்ட பிரச்னைக்கு 'விபசார' வழக்கு!
பிரீமியம் ஸ்டோரி
தனிப்பட்ட பிரச்னைக்கு 'விபசார' வழக்கு!

கல் நெஞ்ச காக்கிகள்... 'தில்' நெஞ்ச சுபிஜா...

காவல்துறையினர் தங்களின் அதிகாரத்தை எந்தளவுக்கு அத்துமீறிப் பயன்படுத்துவார்கள் என்பதை, அவர்களின் அராஜகத்தை போஸ்ட்மார்ட்டம் செய்ததுபோலப் பேசிக்கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளிவந்த ‘விசாரணை’ திரைப்படம். இந்தப் படம் நிஜக்கதையின் பிரதிபலிப்பே. இதேபோல நிஜத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், தற்போது நீதிகேட்டு வீறுகொண்டு புறப்பட்டுள்ளார். ஹெட்கான்ஸ்டபிள் ஒருவர் தன் தனிப்பட்ட விரோதத்துக்கு எந்தத் தவறும் செய்யாத ஒரு பெண்ணின் மீது விபசார வழக்கு பதிவு செய்து, அவமானப்படுத்தி, 12 நாட்கள் ஹோமில் அடைத்த அநீதிக்கு எதிராகப் போராடினார் அந்தப் பெண். அது பொய்வழக்கு என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட, தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அந்தப் பெண் வழக்கு, தாக்கல் செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சுபிஜாவின் இந்த வழக்கு, காவல்துறையை மட்டுமல்ல, அவர்கள் புனையும் கதைகளை நம்பும் சமூகத்தையும், கண்மூடித்தனமாக பரப்பும் ஊடகங்களையும் ஓர் உலுக்கு உலுக்கியுள்ளது.

தனிப்பட்ட பிரச்னைக்கு 'விபசார' வழக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ `சாலையில் சென்று கொண்டிருந்தவரை உல்லாசம் அனுபவிக்க அழைத்த விபசார அழகி கைது. திருவட்டாறு போலீஸ் நடவடிக்கை’னு 2010-ம் வருஷம், குமரி மாவட்ட நாளிதழ்கள்ல என்னைப் பத்தி வந்த பொய் செய்தியைப் படிச்ச எல்லாருக்கும், அதுக்குப் பின்னாடி இருக்கிற காவல்துறையின் அயோக்கியத்தனமும், நான் அப்பாவிப் பெண் என்பதும் தெரியணும். அதுக்காக நான் நிறையப் பேசித்தான் ஆகணும்...’’

- நாம் சந்திக்கச் சென்றிருந்தபோது உறுதியான குரலுடன் ஆரம்பித்தார் சுபிஜா.

மார்த்தாண்டம் பக்கத்துல இருக்கிற பயணம்தான் எங்க ஊர். எங்கப்பா வாழைத்தார் மொத்த வியாபாரி. ஊர்லயும், கேரளாவிலயும் நிறைய விவசாய நிலம், நல்ல வருமானம்னு ஊருக்குள்ள ரொம்ப மரியாதை எங்கப்பாவுக்கு. வீட்டில் ரெண்டு சகோதரர்களும் நானும். ப்ளஸ் டூ முடிச்சிட்டு, யோகா கத்துக்கிட்டு, இலவச யோகா வகுப்புகள் எடுத்துட்டு இருந்தேன். சந்தோஷமா வாழ்ந்தோம்.

2009-ம் வருஷம், ஊர்ல குடியிருந்த வீட்டை இடிச்சுட்டு புதுசா கட்ட முடிவு செஞ்சோம். அதுவரை தங்குறதுக்கு ஒரு வீடு தேவைப்பட்டது. எங்க தோட்டத்துல வேலை செஞ்ச தோமன்கிறவர், மதுரையில கான்ஸ்டபிளா வேலை செய்யும் தன் உறவினர் ராஜ்குமார், வேலியான்விளையில் புதுசா கட்டின வீட்டை ஒத்திக்கு (லீஸ்) விடப்போறதா எங்ககிட்ட சொல்ல, என் பெயரில் ஒரு லட்ச ரூபாய் ஒத்தி அக்ரிமென்ட் போட்டோம். ஆனா, வேலை நடக்குதுனு ரெண்டு மாசம் கழிச்சுதான் சாவி கொடுத்தாங்க.

அந்த வீட்டுக்குப் போனா, தரையைக்கூடப் பூசாம அரைகுறையா எங்ககிட்ட கொடுத்திருந்தாங்க. ராஜ்குமார்கிட்ட கேட்டதுக்கு, ‘இன்னும் ஒரு லட்சம் கொடுங்க, வேலை பார்த்து தர்றோம்’னு சொன்னார். எரிச்சலா இருந்தாலும், வேற வழியில்லாம ரூபாய் 25 ஆயிரம் பணமும், நாலு பவுன் நகையும் கொடுத்தோம். அந்தக் காசுல மாடியில ரூம் கட்டிக்கிட்டு, ஹவுஸ் ஓனர் குடும்பம் வந்து தங்கிக்கிட்டாங்க. தரையையும் பூசல. போதாக்குறைக்கு, அவங்க உறவினர்கள் சிலர் எங்கம்மாகிட்ட தொழிலுக்கு வேணும், கார் வாங்க வேணும்னு கடனா காசு கேட்டு, நைஸா பேசி 20 பவுன் நகைக்கு மேல வாங்கி அடகு வெச்சிட்டாங்க. இப்படி அந்த வீடு எல்லா வகையிலும் எங்களுக்கு சிரமமா இருந்தது.

வீட்டை காலி செய்றோம்னு சொன்னதுக்கு, ரெண்டு மாசம் வெயிட் பண்ணச் சொன்னாங்க. இந்தச் சூழ்நிலையிலதான், வீட்ல வெச்சிருந்த ஆறாயிரம் ரூபாய் திருடுபோனது. விசாரிச்சதுல, ராஜ்குமாரோட உறவினர் தோமனின் மகன் சுபி என்பவன்தான் அதை எடுத்தான்னு தெரியவந்தது. இதைக் கேட்டதுக்கு, அந்தப் பையனும் அவன் சகோதரனும் எங்களை கத்தியால குத்த வந்தாங்க. நாங்க போலீஸுக்குப் போகக் கிளம்பினப்போ, ‘எங்க பையனோட எதிர்காலம் வீணாப்போயிடும்’னு அவங்க அப்பா, அம்மா அழுததால விட்டுட்டோம்.

உடல்நிலை சரியில்லாம இருந்த ராஜ்குமாரோட தந்தை இறந்துபோனப்போ, அதுக்கு நாங்கதான் காரணம்னு சம்பந்தமே இல்லாம எங்க மேல பழிபோட்டாங்க. இதனால ராஜ்குமார் வீட்டுக்கும் எங்களுக்கும் பிரச்னை வளர்ந்துட்டே போச்சு. இது அந்த ஏரியாவில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும். ‘இவங்க எப்பவுமே இப்படித்தான், எல்லார்

கிட்டயும் காசு வாங்கிட்டு திருப்பிக்கொடுக்க மாட் டாங்க. கேட்டா, போலீஸ் பவரைக்காட்டி மிரட்டுவாங்க. கவனமா இருங்க’னு அவங்க சொன்னப்போகூட நான் அதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கல. 

எங்கள் ஊர் பஞ்சாயத்து மெம்பர், என் தம்பி எல்லாரையும் கூட்டிட்டுப்போய், ‘நாங்க வீட்டை காலி செய்றோம். ஒத்திப் பணம், அடகு வெச்ச நகையைத் திருப்பிக் கொடுங்க’னு கேட்டப்போ, ‘பணமெல்லாம் கொடுக்க முடியாது. எங்கப்பா செத்ததுக்கு நீ பணம் கேட்டதுதான் காரணம். உன்னால எங்களுக்கு அவமானம் ஆயிடுச்சு. உன்னை என்ன செய்றேன் பார்’னு அசிங்கமா திட்டினார் ராஜ்குமார். அதோட வந்துட்டோம்’’ எனும் சுபிஜா, அதன் பின்னர்தான் நினைத்தும் பார்த்திராத அளவுக்கு போலீஸ் அதிகாரத்தால் பழிவாங்கப்பட்டுள்ளார்.

‘‘ஒருநாள் திருவட்டார் இன்ஸ்பெக்டர் லயோலா இக்னேஷியஸ், பெண் எஸ்.ஐ. உமா, சி.ஐ.டி. போலீஸ் ராஜரத்தினம் எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ‘வீட்டைக் காலி செய்யாம தகராறு செய்றதா ஹவுஸ் ஓனர் புகார் கொடுத்திருக்கார். அக்ரிமென்ட்டை எடுத்துட்டு ஸ்டேஷனுக்கு வா, விசாரிச்சுட்டு அனுப்புறோம்’னு கூப்பிட்டாங்க. ‘வீட்ல யாருமில்ல, அம்மாவும், தம்பியும் வந்ததும் வர்றேன்’னு சொன்னதைக் கேட்காம, வலுக்கட்டாயமா என் கையைப் பிடிச்சு போலீஸ் ஜீப்ல ஏத்தினாங்க. ஸ்டேஷன்ல, ‘நீ வீட்ல விபசாரம் செய்றியாம், உன் மேல புகார் வந்திருக்கு’னு இன்ஸ்பெக்டர் சொல்ல, அந்த அதிர்ச்சியை, அராஜகத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. ‘சார், என் குடும்பத்தையும், என்னையும் பத்தி ஊர்ல கேட்டுப்பாருங்க. நான் யோகா டீச்சர். அப்படிக் கேவலமா சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல. வீட்ல எனக்கு மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காங்க’னு அழுதுட்டே சொன்னேன்.

‘கான்ஸ்டபிள் ராஜ்குமார் கிட்ட பிரச்னை செய்யாம இருந்திருந்தா, நீ இங்க வந்திருக்க வேண்டியதில்ல’னு சொன்னவங்ககிட்ட, ராஜ் குமார் எங்களுக்குப் பணம் தரவேண்டிய விவரத்தைச் சொன்னேன். ஆனா அவங்க, ‘நீ விபசாரத்துக்கு அழைத்ததா சசிகுமார் என்பவர் உன் மேல புகார் கொடுத்திருக்கார். உண்மையை ஒப்புக்கோ’னு சொன்னாங்க. ‘சசிகுமார் யாருனே எனக்குத் தெரியாதே’னு சொன்ன என் மேல, விபசார வழக்கு பதிவுசெஞ்சாங்க. மறுநாள் நியூஸ் பேப்பர்ல, நான் விபசாரம் செய்றதா செய்திவர வெச்சாங்க. என்னைக் கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போய், அப்புறம் மதுரை, மகளிர் காப்பகத்துல அடைச்சாங்க. 13 நாட்கள் அங்க பித்துப் பிடிச்சவபோல சிறைபட்டுக் கிடந்தேன். தற்கொலை முடிவுவரைகூட யோசிச்சேன். அப்படிச் செய்தா, அந்தப் பொய் வழக்கே என் அடையாளமாப் போயிடும்னு நடைபிணமா இருந்தேன்.

யோசிச்சு பாருங்க... எவ்வளவு பெரிய பழி, அவமானம்? நான், என் பெற்றோர், சகோதரர்கள்னு எல்லோரும் எப்படி உடைஞ்சுபோயிருப் போம்? இருந்தாலும், காவல்துறையோட சீழ்பிடிச்ச முகத்தையும், நான் குற்றமற்றவள் என்பதையும் நிரூபிக்க, மனசைத் தேத்திக் கிட்டு மீண்டு வந்தோம். 13 நாட்கள் ஹோம்லஇருந்த நான் ஜாமீன்ல வந்து, வழக்கை எதிர் கொண்டேன். பத்மநாபபுரம் கோர்ட், என் வழக்கில் மேல் விசாரணை செய்யச்சொல்லி நாகர்கோவில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி-க்கு உத்தரவிட்டது.

அவர் விசாரணை நடத்தினதுல, தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்க என் மேல விபசார வழக்குப் போடப் பட்டதையும், புகார்கொடுத்ததா சொல்லப்பட்ட சசிகுமார்,டூவீலர் லைசன்ஸ் இல்லாததால பிடிச்சுவரப் பட்டு,    ‘உன்னை விடணும்னா சுபிஜா மேல புகார் கொடு’னு அவரை மிரட்டிப் பொய்ப்புகார் வாங்கின உண்மைகளையும் டி.எஸ்.பி தன்னோட அறிக்கையில் குறிப்பிட்டார். அந்த சசிகுமாரும் நீதிபதிகிட்ட நேரடி சாட்சியம் கொடுத்தார். என் மீதான பொய் வழக்கை ரத்து செய்யச் சொல்லி, உயர் நீதிமன்றத்துல வழக்குத் தாக்கல் செஞ்சேன். ஜூன் 2015-ல்,வழக்கு முற்றிலும் பொய்யானதுனு உயர் நீதிமன்றம் ரத்து செஞ்சது.

ஆனா, செய்யாத தப்புக்கு ஹோமில் இருந்த நாட்களில் அனுபவிச்ச வேதனை, நானும் எங்க குடும்பமும் பட்ட அவமானம், கேள்விக்குறியான என் திருமண ஏற்பாடு, அழுகையோடவே கழிந்த என் இளமைக்காலம், இன்னும் சொல்லமுடியாத மனஉளைச்சல்... இதுக்கெல்லாம் என்ன பதில்? எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கினவங்களுக்கு என்ன தண்டனை? ஒரு குடும்பப் பெண்ணை விபசாரியாக்கிற காவல்துறையின் திமிர்பிடிச்ச அராஜகத்தை, கோரமுகத்தை உலகத்துக்குக் காட்ட வேண்டாமா? அவங்க வீட்டுப் பொண்ணுங்களுக்கு இப்படி அவமானம் நடந்தா, அதை பொய்வழக்குனு தீர்ப்பு வாங்கிட்டு விட்டிடுவாங்களா? நானும் விடக்கூடாதுனு முடிவெடுத்தேன். எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கேன்.

இன்னும் வெளிவராம இருக்கிற சுபிஜாக்கள் எத்தனை பேரோ?! அவங்களுக்கு எல்லாம் தைரியம் கொடுக்கணும் என் வழக்கு. இனி சாதாரண மக்களை தனிப்பட்ட சுயநலத்துக்காக துன்புறுத்துற போலீஸின் அடாவடிக்கு எல்லாம், பாடமா இருக்கணும்’’

- கொட்டித் தீர்க்கும் சுபிஜா, இப்போது ஒரு தொண்டு அமைப்புடன் இணைந்து சேவைப்பணியில் உள்ளார். 

இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய உள்துறை செயலாளர், டி.ஜி.பி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உண்மை வெல்வது மட்டும் போதாது... காக்கிச் சீருடைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

செ.சல்மான் படங்கள்:இரா.யோகேஷ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism