Published:Updated:

தலைமகள்!

தலைமகள்!
News
தலைமகள்!

சிறுகதை

அவள் விகடன்  18-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி அறிவிக்கப்பட்ட 18 பவுன் தங்கம் மெகா பரிசுப் போட்டிகளில், சிறுகதைப் போட்டியில் (போட்டி எண் 7) வெற்றிபெற்ற, சங்கீதா கிருஷ்ணன் எழுதிய சிறுகதை இதோ...

திகாலை 5.30 மணியளவில் அந்தச் சிறிய பங்களாவின் அவுட் ஹவுஸில் சங்கரியின் செல்போன் ‘ஒவ்வொரு பூக்களுமே’ என்று அலறியது. தூக்கம் கலைந்து எடுத்து காதுக்குக் கொடுத்தாள். இந்த நேரம் வழக்கமாக அவள் யோகா முடித்து தியானப்பயிற்சி செய்யும் நேரம். நேற்றிரவு 10-ம் நம்பர் வீட்டு வைத்தியநாதன் வீட்டு செப்டிக் டேங்க் கிளீன்செய்ய வந்த ஆட்களுடன் மேற்பார்வைசெய்து வீடு திரும்ப 12 மணிக்கு மேல் ஆகிவிட்டது. போனில் 6-ம் நம்பர் வீட்டு சாம்பு மாமா குரல்... `‘சங்கரி, சித்த சீக்கிரம் வாம்மா... பாத்ரூம் போன மாமியால வெளியில வர முடியல. பயப்படறா. ஒரே தண்ணி. பைப்ப திருகிருக்கா. புடுங்கிண்டுது!’'

`‘தோ வரேன் மாமா!’' என்று விரைவாக வாயைக் கொப்பளித்து முகம் கழுவி ஓடினாள்.

‘மாமி பயப்படாதீங்கோ! கையைப் புடிச்சிக்கோங்கோ!’ - மெதுவாகக் கைப்பிடித்து வெளியே அழைத்துவந்தாள். ஒரு காட்டன் துணிகொண்டு பைப் வாயைக் கட்டினாள்.

தலைமகள்!

`‘மாமா... 7.30 மணி வாக்கில் ப்ளம்பரை அழைச்சுண்டு வரேன். காபி குடிச்சிட்டு ரெஸ்ட் எடுங்கோ’' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

சங்கரி அந்த ‘பினாக்கிள் பேர்ள்’ குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக ‘ஜஸ்ட் ஃபார் யூ’ என்ற அலுவலகத்தை நடத்தி வருகிறாள். அந்தக் குடியிருப்பு நகர்புறத்துக்கு சற்று வெளியே ஆடம்பரமான அப்பர் மிடில் கிளாஸ் மக்களைக் கொண்டது. முக்கால்வாசி வீடுகளில் வயதான தம்பதிகள், தம் மக்களை ஒபாமாவுக்கும், டேவிட் கேமரூனுக்கும் குத்தகைக்கு விட்டுவிட்டு அவர்கள் அனுப்பும் டாலர்களிலும், பவுண்டுகளிலும் தனித்து வாழ்பவர்கள். எஞ்சியிருக்கும் வீடுகளிலும் ஆண், பெண் இருபாலரும் வேலைக்குச் செல்லும் பிஸிவாசிகள்.

அந்தக் குடியிருப்பு வாசிகளின் தேவைகள், வீடுகளில் சின்னச் சின்ன மராமத்து வேலைகள், கேபிள், டெலிபோன் பில் போன்ற மாதாந்தர வேலைகள், மாணவர்களின் கல்விக்கு ஜெராக்ஸ், புராஜெக்ட்களுக்கு பிரின்ட் அவுட், செமினார் எடுக்க கூகுளில் தேடிக் கொடுப்பதுவரை சகலமும் சங்கரிதான். அவளின் சிங்கிள் பெட்ரூம்

அவுட் ஹவுஸே வீடு, ஆபீஸ் எல்லாம். வைஃபை வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் ஒருபுறம், பிரின்டருடன் கூடிய ஜெராக்ஸ் மெஷின்ஒருபுறம் என ஹாலை அலங் கரித்தன. நேர்மையான அறை.

எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், தச்சர், கொத்தனார், மினரல் வாட்டர் என சகல நம்பர்களும் சங்கரியிடம். இவள் அழைத்தால் சிறு வேலைகளுக்கும் வருவார் கள். பெரிய வேலை வரும் போது இவளே அழைத்து கட்டாயம் வாய்ப்பு தருவாள். அழகாக மேற்பார்வை பார்த்து வேலை முடிந்தவுடன் கமிஷன் பெற்றுக்கொள்வாள். இன்று ஒவ்வொரு வீட்டு போனின் ஸ்பீட் டயலிலும் சங்கரியின் எண் உள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன் இவள் சங்கரி அல்ல... சங்கர். அவள் இருக்கும் அவுட் ஹவுஸின் முன் உள்ள பெரிய வீட்டின் தலைமகன். அவனுக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. ப்ளஸ் டூ-வில் 95% மதிப்பெண் பெற்று பிரபல கல்லூரியில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தான். மூன்றாமாண்டு முடிவில் அவனுள் பல மாற்றங்கள். தங்கையின் ஆடை, அணிகலன்மேல் ஆசை கொண்டு அணிந்தான். உதட்டுச் சாயம், கண் மை போன்றவை அவனைஈர்த்தன. மனதுள் போராட் டம். கல்லூரியில் அவனை கேலி, கிண்டல் செய்தனர். சொந்த வீடே சிறையானது. தாய், தந்தையின் உதாசீனத்துக்கு ஆளானான். அவன் வீட்டில் இருப்பதையே அருவருப்பாக நினைத்தனர். தம்பி, இதுதான் சாக்கு என்று வெளிநாட்டிலேயே இருந்துவிட்டான். தங்கை, இவன் இப்படி இருந்தால் தனக்கு மாப்பிள்ளை கிடைக்காது என்று காதலனோடு ஓடினாள்.

தனிப்பறவையானான் சங்கர். வீடு நரகமாகியது. தன்னைப்போல பலர் வீட்டைவிட்டு வெளியேறி வந்த கதியை நினைத்துப் பார்த்தான். பூர்வீக வீடாததால் தன் பங்காக அவுட் ஹவுஸை எடுத்துக்கொண்டான். ‘சங்கரி’ என்று பெயரை மாற்றினான்.... மாறினாள்.

இயந்திரத்தனமாக வாழாமல் வாழ்க்கையை அனுபவித்து வாழத் தொடங்கினாள். பிடித்ததைச் செய்து உண்டாள். கோயில், பார்க் என்று சுற்றினாள். சுற்றுலா சென்றாள். நடை உடையிலும் மாற்றம் கொண்டு வந்தாள். பருத்தியினாலான சல்வார், புடவையை கண்ணியமாக உடுத்தினாள். யோகா, தியானம் செய்து அநாவசிய அங்க சேஷ்டைகளை நிறுத்தினாள். இதோ இன்று கௌரவமாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள்... வெறுத்த பெற்றோருக்கும் உதவி செய்துகொண்டு.

செல்போன் மறுபடியும் அழைத்தது. ‘அப்பா’ என்று ஒளிர்ந்து அடங்கியது. முன்பக்க வீட்டுக்குக் கிளம்பினாள். எதிரில் வந்த அப்பாவிடம் போன் பில்லைக் கொடுத்துவிட்டு, அம்மாவின் அறை நோக்கிப்போய் பெட் பேன் வைத்தாள். கிளவுஸ் போட்டுக்கொண்டாள். அம்மாவை ஏறிட்டாள்.

‘`ஏம்மா இதேபோல நீ நாங்கள்லாம் சின்னதா இருக்கும்போது செய்ததில்லையா? கிளவுஸ் போட்டுக்கிட்டா செஞ்சே? இல்லேல்ல..? நான் ஏன் போட்டுக்கிறேன்னா, நான் தொட்டா உனக்கு அருவருக்குமே... அதான்!

அம்மா... மாற்றுத்திறனாளிகளிடம் பரிவு, அன்பு காட்டறாங்க. திறமைகளை மதிக்கிறாங்க. ஆனா, வெளியில தெரியாத ஊனம், எங்களோட டிஎன்ஏ. நாங்க மட்டும் ஏன் கேலி, கிண்டலுக்கு ஆளாகிறோம்? இழிதொழிலுக்குப் போறோம்? உங்கள மாதிரி பெற்றோரோட உதாசீனத்தாலதான். ஏதோ என் அதிர்ஷ்டம் இந்த வீடும் கொஞ்சம் மூளையும் இருந்தது. இல்லேன்னா...’' -  நீர் மணிகள் உதிர்ந்தன... நான்கு விழிகளில்.

‘`ஹலோ சீதாப்பாட்டி...  சொல்லுங்க! பாம்பா..? இதோ உடனே நம்ம மாதய்யனை வரச் சொல்றேன். கதவைத் திறக்காதீங்க... நான் வந்துட்டே இருக்கேன்!’'

இன்று அவள் வீட்டுக்கு மட்டுமல்ல, அந்த குடியிருப்பின் பல வீடுகளுக்கு சங்கரிதான் தலைமகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கே.குணசீலன், ஓவியம்: ஸ்யாம்