Published:Updated:

நோய் நாடி..!

நோய் நாடி..!
நோய் நாடி..!

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!

வதைக்கும் மூட்டுவலி... தவிர்க்கலாம்... விரட்டலாம்!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான்.

நோய் நாடி..!

நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்து வரும் ‘நோய் நாடி’ தொடரில், மூட்டுவலி பற்றி விரிவாகப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வேல்முருகன்.

‘‘மூட்டுவலி... இளைஞர்கள் முதல் முதியவர்கள்வரை யாருக்கும் ஏற்படலாம். கடந்த சில ஆண்டுகளாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது இளம் வயதினரை அதிகளவில் வதைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், கணினி வாழ்க்கை முறை’’ என்றவர், மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்கள், அதற்கான சிகிச்சைகள், மூட்டுவலியைத் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றிய தகவல்கள் தந்தார்.

மூட்டுவலி... ஏன்?


‘‘மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படக்கூடிய பிரச்னை என்பதில்லை. மிக அதிக வேலை, அல்லது மிகக் குறைந்த வேலை என்றிருக்கும் எந்த வயதினருக்கும் வரக்கூடும். பொதுவாக, 45 வயதைக் கடந்தவர்களுக்கு மூட்டு எலும்புகள் தேய்மானம் அடைவதால், மூட்டுவலி ஏற்படலாம். மெனோ பாஸ் கட்டத்தைத் தாண்டிய பெண்களுக்கும் 40 ப்ளஸ் வயதில் இந்தப் பிரச்னை வர அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர் 8 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதையும், விளையாட்டுத் துறை யில் உள்ளவர்கள் மூட்டுகளுக்கு அதிக இயக்கம் கொடுப்பதையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த இரண்டு வகையினரும் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடல் அசையாமல் இருப்பது, மாடுபோல் உழைப்பது... இரண்டுமே மூட்டுவலியை விரைவாகப் பரிசளிக்கும்.

நோய் நாடி..!

சத்தான உணவும் போதிய உடற்பயிற்சியும் இல்லாமல் இருக்கும் வாழ்க்கைமுறையும் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணமாகிறது. தவிர, டி.பி, சர்க்கரை நோய், சொரியாசிஸ் பாதிப்பு, உடல்பருமன், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு கொண்டவர்களும் மூட்டுவலிக்கு எளிதில் இலக்காவார்கள். சிலர், கால்களில் ஏற்படும் புண்களைச் சரிவர கவனிக்காமல்விட்டு செப்டிக் ஆகும் நிலையிலும், அப்பகுதியில் உள்ள மூட்டு பாதிக்கப்படலாம்.

இளம் தலைமுறையினருக்கும்..!


கடந்த சில வருடங்களாக 15, 16 வயதில் இருந்தே கழுத்து, இடுப்பு, மூழங்கால் மூட்டு என இளம் பருவத்தினர் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. புத்தகப் பை சுமப்பது தொடங்கி, மணிக்கணக்கில் வீடியோ கேம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என கணினியில் நிமிர்ந்தே கிடப்பது மற்றும் மொபைலில் கவிழ்ந்தே கிடப்பது போன்றவை இதற்கு காரணங்களாகும். குழந்தைகள் கை, கால் வலிக்கிறது என்றால், முழுமையான ஓய்வு கொடுக்கவும். ஆனால், தொடர்ந்து வலி இருப்பதாகச் சொன்னால், மருத்துவரிடம் செல்லவேண்டியது அவசியம். வயதான பின் நோய் வந்தால், சிகிச்சைகள், மருந்துகள், ஓய்வு என்று கழிக்கலாம். இளம்வயதிலேயே மூட்டுகளை எல்லாம் தேயவிட்டால், ஓட வேண்டிய வாழ்க்கை தூரத்தைக் கடப்பது மிகச் சிரமமாகிவிடும்... ஜாக்கிரதை. 18 வயதைக் கடந்தவர்கள் கால்சியம் சத்து மிகுந்த கீரை, பால், முட்டை, மீன் போன்றவற்றை மாற்றி மாற்றி தினசரி உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பரிசோதனைகள், சிகிச்சைகள்!

மூட்டுவலியைப் பொறுத்தவரையில் எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் எளிமையாக குணப்படுத்திவிட முடியும். இதற்கான பரிசோதனை என்பது, வலிக்கும் இடத்தில் மருத்துவர் அழுத்திப் பார்ப்பது, மடக்கச் சொல்லிப் பார்ப்பது, நடக்கச் சொல்லிப் பார்ப்பதில் இருந்து, எக்ஸ் ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் வரை செய்யப்படும். ஆரம்ப நிலை மூட்டுவலிக்கு சில உடற் பயிற்சிகளும், வாழ்க்கை முறை மாற்ற ஆலோசனைகளும், உணவு முறைப் பரிந்துரைகளும் வழங்கப்படும். மாத்திரை, மருந்து... நோயின் தேவையைப் பொறுத்து தவிர்க்க முடியாதது. அதிகமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

நோய் நாடி..!

அறுவை சிகிச்சை... செலவு என்ன?

மூட்டுத் தேய்மானத்தால் எலும்பு கோணலா வதில் தொடங்கி, இன்னும் பல பாதிப்புகளோடு இயக்கம் குறைந்து, சரிபடுத்தக்கூடிய கட்டத்தைக் கடந்துவிட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். அதற்கு முன்பாக, அதைத் தாங்கும் தகுதி சம்பந்தப்பட்டவர் உடலுக்கு இருக்கிறதா என்பதும் பரிசீலிக்கப்படும். இல்லை எனில், அறுவை சிகிச்சை அவருக்கு மேலும் பிரச்னைகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம்வரை செலவாகக்கூடிய இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

மொத்தத்தில், மிக அதிக வேலை, உடல் இயக்கம் இல்லாத மிகக் குறைந்த வேலை... இவற்றுக்கு குட்பை சொல்வோம். சத்தான உணவுக்கும் மிதமான உடற்பயிற்சிக்கும் வெல்கம் சொல்வோம். இந்த எளிய ஃபார் முலா மூட்டுவலியை விரட்டும் என்றால், சந்தோஷமாக ஃபாலோ செய்யலாம்தானே?!

- நோய் நாடி வெல்வோம்...

சா.வடிவரசு, படங்கள்: ம.நவீன்

வலி மாத்திரைகள் வேண்டாம்!

நோய் நாடி..!

மருத்துவர் பரிந்துரையின்றி, வலி நிவாரணி மாத்திரைகளை சுயமாக எடுத்துக்கொண்டால், சிறுநீரகப் பிரச்னை ஏற்படக்கூடும். மருத்துவர் ஆலோசனை, உடற்பயிற்சியுடன், நம் பாரம்பர்ய உணவுகளான கம்பு, சாமை, தினை, வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டுவலிப் பிரச்னைக்கு சிறந்த நிவாரணம் தரும்.

உடற்பருமனும்... மூட்டுவலியும்!

நோய் நாடி..!

மூட்டுவலிக்கு உடற்பருமனும் முக்கியக் காரணம். உடலின் எடையை கால் மூட்டுகள்தான் தாங்குகின்றன. அதற்குத் தகுந்தவாறு மூட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக உடற்பருமனால் மூட்டுக்களில் அழுத்தம் ஏற்பட்டு, குறுத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது. எனவே, எப்போதும் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருப்பது, மூட்டுவலியைத் தவிர்ப்பதற்கான வழிகளில் ஒன்று.

வராமல் தடுக்கும் வழிகள்..!


உடலுக்கும், மூட்டுக்கும் மிக அதிக வேலை கொடுக்கக் கூடாது.

தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் உடற்பயிற்சியோ, நடைப் பயிற்சியோ அவசியம். உடலில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் வேலை கொடுப்பதுபோல் சின்னச் சின்னப் பயிற்சிகளாகச் செய்ய வேண்டும். 

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் 30 நிமிடங் களுக்கு ஒருமுறை எழுந்து நின்று, மூட்டுகளுக்கு அசைவு கொடுத்து அமர்வதும், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடம் சிறிது தூரம் நடப்பதும் நல்லது.

உயரத்துக்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டும், உடல் பருமனைத் தவிர்க்க வேண்டும். 

கால்சியம், புரதம், நார்ச் சத்து, பாஸ்பரஸ் சத்துகள் நிறைந்த உணவுகள், சிறுதானிய உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, ஏதாவது ஒரு சத்து இருக்கும் உணவை தொடர்ந்து சாப்பிடாமல், எல்லா சத்துகளும் கிடைக்கும் வகையிலான சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெயிலில் இருந்து இயற்கை யாகக் கிடைக்கும் `விட்டமின்-டி’ பெற, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குறைந் தது 30 நிமிடமாவது உடலில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர் களுக்கு மூட்டு வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், மிதமான உடற்பயிற்சியை இவர்கள் வழக்கமாக்கிக்கொள்ள
வேண்டும்.

உடற்பயிற்சியே உற்ற மருந்து!

நோய் நாடி..!

மூட்டுவலி ஏற்படுவதற்கான 75 சதவிகிதம் காரணம், உடற்பயிற்சி இன்மையே. அப்படியே செய்தாலும் சிலர் டிரெட்மில், அப்டமன் பயிற்சி என்று செய்யும்போது, அது உடலின் சில எலும்புகளுக்கு மட்டும் வேலை தருவதாக அமையும். காலையில் சூரிய ஒளியில் நடைப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் முதலான யோகப் பயிற்சிகள் செய்யும்போது, எலும்புகள் சீராகவும், உறுதியாகவும் வளரும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்குவது, மூட்டுவலியில் இருந்து காக்கும். மூட்டு வலி வந்தவர்கள் நடக்க முடியாதபட்சத்தில், நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் போன்றவற்றைச் செய்யலாம். குடும்பத் தலைவிகள் தங்களது அன்றாட வேலைகளையே உடற்பயிற்சியாகவும் செய்யலாம். மாடிப்படிகள் ஏறி இறங்குவது, துணி துவைப்பது, தரையில் அமர்ந்து எழுவது போன்ற சின்னச் சின்ன பயிற்சிகள்கூட மூட்டுவலிக்கு பெரிய மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

அறிகுறிகள்...

நோய் நாடி..!

தினசரி நடவடிக்கையால் மூட்டுப் பகுதியில் வலி.

காலையில் எழுந்ததும் உடல் அசைவில் புதிதாகத் தெரியும் சிரமமும், வலிகளும்.

நடப்பதில் சிரமம் உண்டாகி தாங்கித் தாங்கி நடப்பது.

தரையில் அமர்ந்து எழுவதில் அதிக சிரமம்.

காலைக் கடன்களை முடிப்பதில் சிரமம்.

உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், அருகில் உள்ள மூட்டுப்பகுதியில் வலியை உணர்வது.

இவையெல்லாம் மூட்டு வலிக்கான அறிகுறிகள். நோயை முற்றவிட்டு இயக்கம் முழுமையாக முடக்கப்படுவதற்கு முன், இந்த அறிகுறிகளை அறிந்தவுடனேயே சிகிச்சைக்கு விரைந்திட வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு