Published:Updated:

தூத்துக்குடிப் பெண்... இப்போது கர்நாடகா IPS

தூத்துக்குடிப் பெண்...  இப்போது கர்நாடகா IPS
பிரீமியம் ஸ்டோரி
தூத்துக்குடிப் பெண்... இப்போது கர்நாடகா IPS

டானிக் ஸ்டோரி

தூத்துக்குடிப் பெண்... இப்போது கர்நாடகா IPS

டானிக் ஸ்டோரி

Published:Updated:
தூத்துக்குடிப் பெண்...  இப்போது கர்நாடகா IPS
பிரீமியம் ஸ்டோரி
தூத்துக்குடிப் பெண்... இப்போது கர்நாடகா IPS

“ஒரு நிலையான வேலையில் இருந்துட்டே யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாரானது, பள்ளியில் இந்தி படிச்சவ ப்ரிலிம்ஸ் தேர்வுக்குத் தமிழைத் தேர்ந்தெடுத்து, அ, ஆ-வில் இருந்து படிக்க ஆரம்பிச்சு தேர்ச்சி அடைந்தது, கட்டுப்பாடான இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து வந்து, விரல் நீட்டிப் பேசின பலரையும் வாயடைக்கவெச்ச மாதிரி வெற்றி பெற்றதுனு... நான் ஐ.பி.எஸ் ஆன கதையில் தன்னம்பிக்கை எபிசோடுகள் நிறைய!’’

தூத்துக்குடிப் பெண்...  இப்போது கர்நாடகா IPS

- அதிரச் சிரிக்கிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த முகமது சுஜிதா. தனது இரண்டு ஆண்டு ஐ.பி.எஸ் பயிற்சியை முடித்து, சென்ற மாதம் கர்நாடக மாநிலம், `ஷிவமொகா'வில் (`ஷிமோகா' என்றிருந்த பெயர் சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது) தன் பணியை ஆரம்பித்திருக்கும் 27 வயது இளம் எனர்ஜி!

‘‘ஸ்கூல்ல படிக்கும்போது நான் ஆவரேஜ் ஸ்டூடன்ட்தான். அப்பா முகமது சல்மான், போர்ட் டிரஸ்ட்ல கிளார்க்கா வேலை பார்த்தார். அம்மா முகமது அஸீஸா இல்லத்தரசி. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, போர்ட் டிரஸ்ட்டின் சேர்மனான மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ் கிட்ட என்னை அழைச்சுட்டுப் போய், ‘சார் மாதிரியே நீயும் பெரிய ஆளா வரணும்’னு சொன்னார் அப்பா. சிவில் சர்வீஸ் ஆர்வம், அப்போ விழுந்த விதை. ப்ளஸ் டூ வரை ஆங்கிலோ இண்டியன் பள்ளி. முடிச்சதும் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல நான் பி.பி.ஏ சேர, எனக்காகவே அம்மாவும், அப்பாவும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்துட்டாங்க.

படிப்பை முடிச்சவொடன, ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு என்னை ஒப்படைச்சிடல. முதல்ல, எனக்கு ஒரு ஸ்திரமான வேலை வேணும்னு நினைச்சேன். ஹெச்.சி.எல்-ல ஹெச்.ஆர் எக்ஸிக்யூட்டிவா வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலை, என்னோட சாஃப்ட் ஸ்கில்ஸை வளர்த்துக்க ரொம்ப உதவியா இருந்தது; எந்தக் கூட்டத்திலும் தெளிவா பேசும் தன்னம்பிக்கையும், திறமையையும் தந்தது. மேலும், மனித வளத்தைச் சரியா பயன்படுத்தினா, நிர்வாகம் நிலைத்து நிற்கும் என்பதையும் அனுபவத்தில் உணர்ந்து கத்துக்கிட்டேன்’’ எனும் சுஜிதா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் இருந்து விலகி, முழு நேரம் ஐ.ஏ.எஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

‘‘ ‘மனித நேய அறக்கட்டளை மற்றும் ‘சத்யா அகாடமி’யில் ரெண்டு வருஷம் பயிற்சி முடிச்சு, 2011-ல் ப்ரிலிம்ஸ் க்ளியர் செய்தேன். ஆனா, எழுத்து தேர்வு எழுதும்போது லேங்குவேஜ்ல ஃபெயில் ஆயிட்டேன். சின்ன வயசுல இருந்து படிச்ச இந்தியில ஃபெயில் ஆனது ரொம்ப ஏமாற்றமா இருந்தது. 2012-ல மீண்டும் விண்ணப்பிச்சப்போ, ப்ரிலிம்ஸ்லயே தோல்வி. வருத்தத்தை, ஏமாற்றத்தை எல்லாம் ஓரமா வெச்சிட்டு, மீண்டும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆர். வேலையில் சேர்ந்துட்டேன். அங்க எனக்குக் கிடைச்ச நண்பர்களில் இருந்து உயரதிகாரிகள்வரை பலரும் என்னோட ஐ.ஏ.எஸ் கனவுக்கு உறுதுணையாவும், ஊக்கமாவும் இருந்தாங்க.

வேலை பார்த்துட்டே 2013-ல் மீண்டும் யு.பி.எஸ்.சி முயற்சி. இம்முறை, ஏற்கெனவே ரெண்டு முயற்சிகளில் செய்த தவறுகளை எல்லாம் நுணுக்கமா களைஞ்சேன். அப்படித்தான், மொழிப்பாடத்துக்கு இந்தி வேண்டாம், இந்த முறை தமிழ் எடுக்கலாம்னு முடிவெடுத்தேன். ‘ரிஸ்க் எடுக்காதே... உலகத்துலயே சிரமமானது தமிழ் மொழி. அதை புதுசா இனிமே நீ எழுதப் பழகி, பரீட்சையில் கரை சேர்றது எல்லாம் நடக்காத காரியம்’னு பலரும்

சொன்னாங்க. ‘மனிதநேயம் அறக்கட்டளை’ பயிற்சி மையத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் கார்த்திக், இருவருமே குருவாக இருந்து ‘உன்னால முடியும்’னு நல்ல வார்த்தை சொல்லி நம்பிக்கை தந்தாங்க. முழு முயற்சி எடுத்துப் படிச்சேன். எழுத்துப் பிழைகளோட படிக்க ஆரம்பிச்சவ, மூணு மாசத்துல தமிழை நல்லாவே கத்துக்கிட்டேன். 2013-ம் ஆண்டுத் தேர்வில் நான் பாஸாக, தமிழும் ஒரு காரணம்!’’ என்று அசத்தியவர்,

‘‘பொதுவா, எங்க குடும்பத்துல படிப்பை முடிச்சதுமே பொண்ணுங்களுக்குக் கல்யாணம் செய்து வெச்சிடுவாங்க. ‘பரீட்சை எழுதுறேன்னு அது ஃபெயிலாயிட்டே இருக்கு. புள்ளைக்கு வயசு ஏறிட்டே போகுது. நீங்க பார்த்துக்கிட்டே இருக்கீங்க...’னு எல்லாம் எங்க சொந்தபந்தம்கிட்ட இருந்து வந்த பேச்சுகளை எங்கப்பாவும், அம்மாவும் அணையாத் தடுத்துத் தாங்கிட்டு, எங்கிட்ட எதையுமே வெளிக்காட்டிக்காம, ‘நீ படிம்மா...’னு சொல்வாங்க. என் ஃப்ரெண்ட்ஸ், நான் அப்பப்போ யு.பி.எஸ்.சி கனவை விட்டு விலகி நின்னாக்கூட, அவங்க அதை எடுத்துட்டு வந்து எங்கிட்ட சேர்த்திடுவாங்க. 27 வயதில் என் பெயருக்குப் பின்னால சேர்ந்திருக்கிற ஐ.பி.எஸ் என்ற வெற்றியில், இவங்க எல்லாருக்குமே பங்கிருக்கு’’ என்ற சுஜிதா,

‘‘ பெண்களுக்கு கரியர் ரொம்ப முக்கியம். அதனால, உங்க கனவை நோக்கிப்போகும்போது, ஒரு வேலையில் உங்களை நிலைநிறுத்திக்கிறது பலமும், பல அனுபவங்களும் தரும். வெளி உலகம் வந்து சாதிக்கத் துடிக்கிற பெண்கள், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாதது இந்தச் சமூகம்னு தங்களோட எல்லையில் எந்த சமரசமும் செய்துக்க வேண்டாம். நல்லவங்க, கெட்டவங்க எல்லா இடங்களிலும், ஏன்... உங்க வீட்டுக்குள்ளேயும்தான் இருப்பாங்க. தைரியமாவும் ஜாக்கிரதையாவும் முன்னேறிப் போவோம். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!’’

- ஸ்வீட்டாக முடித்தார், சுஜிதா ஐ.பி.எஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ச.சந்திரமௌலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism