Published:Updated:

இரு நிலம்... ஒரு பயணம்!

இரு நிலம்... ஒரு பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இரு நிலம்... ஒரு பயணம்!

பயணம்

மெட்ரோ நகரங்களின் பெரும் சாலைகளில், விரையும் 200 கார்களில் அதிகபட்சம் 500 பேர் வரை பயணிக்கிறார்கள். ஆனால், பேருந்துப் பயணம் என்பது, மனிதன் இப்படி சொகுசை முன்னிறுத்தித் தன்னைத் தனித்துக்கொள்ளும் பழக்கத்துக்கு நேரெதிரானது. ஆனால், அரை மணி நேரப் பயணத்தில்கூட பேசி, சிரித்து, நலம் விசாரித்து, விருந்துக்கு அழைத்து என, எடுக்கும் டிக்கெட்டுக்கு மக்கள் பயணத்துடன் வாழ்தலையும் பேருந்துக்குள் நிகழ்த்திவிட்டு, தங்கள் நிறுத்தத்தில் இறங்கும் கிராமப் பேருந்துகளின் பயணங்கள்... அன்பால் நிறைந்தவை. அப்படி ஒரு பயணத்தில் இணைந்தோம். 

இரு நிலம்... ஒரு பயணம்!

‘அடியேய் பேச்சி... வெரசாப்போயி பஸ் ஸ்டாண்டுல டோக்கனப்போடுடி, கூட்டம் வந்துரப்போகுது...  - சுருளியம்மா பாட்டி பெரும் சத்தத்துடன் பேசியபடி காத்துக்கொண்டிருக்கிறார். பாட்டியுடன் சேர்த்து இன்னும் பலர் இங்கு காத்திருப்பது, தேனி மாவட்டம், சின்னமனூரில் இருந்து இரவங்கலாறு செல்லும் பேருந்துக்காக. அந்தப் பேருந்துப் பயணத்தில் நடந்த, கடந்த அனுபவங்கள் தந்தன... எளிய மக்களுடைய அன்பின் தரிசனம்.

சின்னமனூர் வியாழக்கிழமை சந்தைக்குச் சென்றுவிட்டு, பலசரக்குப் பொருட் களை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும் வியாபாரி கள், தங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் விசேஷத்துக்கு பத்திரிகை வைத்துவிட்டுத் திரும்பிய குடும்பத் தலைவர்கள், தாத்தா, பாட்டிகளைப் பார்க்க மலைக் குச் செல்லும் பேரன்கள், சுற்றுலாப் பயணிகள்என உயிரோட்டம் கூடியிருந்தது பேருந்தில்.காலை 9.30 மணிக்கு சின்னமனூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து உறுமி வெளியேறிய போது, ‘இரவங்கலாறு போக கொறஞ்சது மூணு மணி நேரம் ஆகுமப்பு’ என்று சலசலவென பேச்சொலிகள் கிளம்ப ஆரம்பித்தன. ‘இரவங்கலாறு போகணும்னா எத்தனை ஊரத்தாண்டி போகணும்ணே?’ என ஒரு சுற்றுலாவாசி கேட்க, ‘சின்னமனூருல இருந்து தென்பழனி ரூட்டைப் பிடிச்சுட்டோம்னா, செத்தவடத்துல மலைப்பாதை ஆரம்பிச்சுரும். அப்படியே வண்டி மேல ஏறிச்சுனா மலையில மொதல்ல வர்றது சிலுவைக்கோயிலு. அடுத்தடுத்து கடநா எஸ்டேட்டு, மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டுனு மலைக்கிராமங்கள் இருக்குமப்பா. கடைசியா வர்ற ஊருதேன் இரவங்கலாறு. நானும் அங்கதேன் எறங்கணும், என்கூடயே வாப்பா’ என்றார் இரவங்கலாறு வியாபாரி கோட்டைசாமி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இரு நிலம்... ஒரு பயணம்!

‘‘யெய்யா... மாப்ள சிவா... நம்ம வீட்டுல செய்முறை விசேசமப்பா. வர்ற ஞாயித்துக்கெழம வெச்சிருக்கேன். அன்னிக்கு நம்ம வீட்டுலதேன் கறி, கஞ்சியெல்லாம். தங்கச்சி, புள்ளைக எல்லாரயும் கூட்டிட்டு வந்து சேரு!’’

“ஏன்யா... நாங்க எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதா..?”

“கோவிச்சுக்காத மாப்ள... அடுத்து ஒன்னயத்தானே கூப்புடப் போறேன்!’’ - இது ஹைவேவிஸைச் சேர்ந்த பயணி விசுவநாதனுக்கும், ஓட்டுநர் சிவக்குமார் மற்றும் நடத்துநர் லட்சுமணருக்கும் இடையே நடந்த வாஞ்சையான உரையாடல்.

“காசெல்லாம் சின்னமனூர்ல சாமான் வாங்கவே சரியாப்போச்சு. ஹைவேவிஸ் போனவுடனே செந்தில் கடையில டிக்கெட் காசு வாங்கித் தரட்டுமாய்யா..?’’

“ஒண்ணும் அவசரமில்ல. அடுத்த தடவை வர்றப்போ கொடுங்க. இந்தாங்க உங்களுக்கும், லக்கேஜுக்கும் டிக்கெட்டு..!” - பாப்பம்மா பாட்டியின் கைகளில் டிக்கெட்களுடன் கரிசனத்தையும் சேர்த்துத் திணித்த நடத்துநர் லட்சுமணர், பெருநகரப் பேருந்துகளின் நடத்துநர்களை ஒருகணம் பெருமூச்சுடன் நினைத்துப்பார்க்க வைத்தார்.

இரு நிலம்... ஒரு பயணம்!

தென்பழனி பாதையைக் கடந்து பேருந்து மலைப்பாதை அடைந்ததும் குளிர் காற்று தேகத்தைச் சில்லிட்டது. கூடவே மழைச்சாரல் விட்டுவிட்டுத் தூறி, வெயில் விட்டுவிட்டு அடிக்க என ஒரு இதமான தட்பவெப்பம் வழிநெடுகிலும் உடன் வந்தது. இந்த மலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் இருந்ததாகப் பயணி ஒருவர் தெரிவித்தார். குறுகலான அகலம், மழை அரிப்பு சரிசெய்யப்படாத குண்டும் குழியுமான சாலைகள், அருகில் பெரும்பள்ளத்தாக்கு, அடுத்தடுத்த குண்டூசி வளைவுகள் என புதுப்பயணிகளுக்கு கிலி கொடுக்கும் பாதையை, தன் அனுபவத்தால்  அசால்ட்டாகக் கடந்துகொண்டிருந்தார் ஓட்டுநர் சிவக்குமார். `‘டிரைவரு அண்ணே... உங்க தெறமைக்கு நீங்க ஃபிளைட்டே ஓட்டுவீக...’' என்று பயணிகளின் பாராட்டுகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒரு குண்டூசி வளைவில் ஏற சிரமப்பட்டுத் திணற, `‘இரு மாமா... நாங்க இறங்கித் தள்ளுறோம்’' என ஓட்டுநரிடம் சொல்லிவிட்டுப் பயணிகள் கீழிறங்கித் தள்ள, பேருந்து எளிதில் உந்தி மேலேறியது.

12.15 மணிக்கு ஹைவேவிஸை அடைந்த போதும் வெயில் உரக்க அடிக்கவில்லை. மேகமூட்டமாகவே இருந்தது. அதன் அருகில் இருக்கும் மேல்மணலாறு, வெண்ணியாறு, மஹாராஜா மெட்டைக் கடந்து இரவங்கலாறு வந்தடைந்தபோது, பேருந்து கடினப்பட்டே மலையின் மேல் ஏறியது. பின்னர் அங்கிருந்து சின்னமனூர் செல்லும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கீழிறங்கத் தொடங்கி, ஹைவேவிஸ் பகுதியில் சுற்றுலா பயணிகளின் சாப்பாட்டுக்காக சில மணி நேரம் நின்றது.

இரு நிலம்... ஒரு பயணம்!

நடத்துநர் லட்சுமணர், ‘`பாப்பாம்மா பாட்டி பேலன்ஸுக்கு கைகாட்டின செந்தில் இவருதேன்’' என்று நமக்கு அவரை அறிமுகப்படுத்தினார். சின்னமனூரில் பேருந்து கிளம்பியதில் இருந்து, இடையில் வண்டி பஞ்சர் ஆகி நிற்கிறது என்பதுவரை, பேருந்தின் நிலவரத்தை ஓட்டுநரிடம் அலைபேசியில் வாங்கி, ‘கால்கடுக்க நிக்குறோம் வண்டியக் காணாமே...’ என்று காத்துக்கிடக்கும் ஏழு ஊர் மக்களுக்கும் தகவல் சொல்லும் அக்கிராமத்துச் சனங்களின் அன்பன் அவர்.

‘‘இந்த மலையில மொத்தம் ஏழு தேயிலை எஸ்டேட்கள் இருக்குது. ஒரு எஸ்டேட்டுக்கு சுமார் 200 பேர் காலையில தேயிலை பறிக்கப் போவாங்க. அந்தக் குடும்பங்களுக்கு தினமும் காய்கறி வர்றது, இந்த பஸ்லதேன். மழைக்காலத்துல தேயிலை பறிக்கப்போறதும், வண்டி ஓட்டுறதும் ரொம்பவே கஷ்டம்.  ஆடி மாசம் அடைமழை பிடிக்க ஆரம்பிச்சுருச்சுன்னா தை வரை பெய்யும்; ஹைவேவிஸ்ல மூணு அணைகளும், வெண்ணியாறுல ஒரு அணையும், மஹாராஜா மெட்டுல ஒரு அணையும் தண்ணி நெரம்பி வழியும்; அங்கங்க சின்ன நீரோடைகள் ரோட்டுல கௌம்பிடும். அதுலயும் தீபாவளியப்போ பஸ்ஸுக்குள்ள கூட்டம் எகிடுதகிடா ஏறும். சில நேரம் மலைப்பாதையில யானை, சிறுத்தை எறங்கிரும். ஊர்க்காரங்க வந்து வெடிவெச்சு அதுங்களை காட்டுக்குள்ள விரட்டுவாங்க. அதேபோல பஸ் பஞ்சரானா எங்க சனங்களே உதவிக்கு வந்திருவாங்க. ‘கவர்மென்ட்டு பஸ்ஸு... எனக்கென்ன போச்சு...’னு இருக்க முடியாது. பிள்ளைக காலேஜுக்குப் போறதுக்கு, வேலைக்குப் போறதுக்கு இந்த வண்டியில்லைன்னா ரொம்பக் கஷ்டம்தேன். இந்த பஸ்ஸுல எங்க எல்லாருக்கும் உரிமையும் கடமையும் இருக்குல்ல...’’ - அந்தப் பேருந்து அவர்கள் வாழ்வின் பெரும் அங்கம் என்பதை நன்றியுடன் பகிர்ந்தார் செந்தில்.

இரு நிலம்... ஒரு பயணம்!

வண்டி சின்னமனூரை நோக்கிக் கிளம்ப, ‘இந்த தேய்ஞ்சுபோன ஸீட்டை என் பேத்தி பாட்டியாகிறதுக்குள்ளயாவது மாத்திடுவீகளாப்பு..?’ என்ற பாட்டிகளின் வக்கணையான பேச்சு, ‘ஏண்ணே... கையில நீரு, மோரு வெச்சுக்கிறது இல்லையா..? இந்தாங்க தண்ணி...’ என்று, நடத்துநர்-மலைவாசிகளின் உறவை மிஞ்சும் உரையாடல், ‘என்னலே, இப்படி தலைய தலைய சொழட்டுற? நான் ஸீட்டு மாறி உக்காந்துக்குறேன்... நீ காலை நீட்டித் தூங்கு. ஊரு வந்ததும் எழுப்பி விடுறேன்...’ என்று, முன் பின் தெரியாத பயணிகள் பரிமாறிக்கொள்ளும் உரிமையும், அன்பும், ஒரு இளம்தாரியின் சைனா செட்டில் இருந்து கசிந்த இளையராஜாவின் இசை... என பெருவாழ்வு நிகழ்ந்துகொண்டிருந்தது அந்தப் பேருந்துக்குள்!

ம.மாரிமுத்து படங்கள்:வீ.சக்தி அருணகிரி