Published:Updated:

ஸ்மார்ட்போன் டிஸ்ஆர்டர்கள் ... உஷார் மக்கா..!

ஸ்மார்ட்போன் டிஸ்ஆர்டர்கள் ... உஷார் மக்கா..!

Smartphone

ஸ்மார்ட்போன் டிஸ்ஆர்டர்கள் ... உஷார் மக்கா..!

Smartphone

Published:Updated:
ஸ்மார்ட்போன் டிஸ்ஆர்டர்கள் ... உஷார் மக்கா..!

ஸ்மார்ட்போனிலேயே விழித்து, ஸ்மார்ட்போனிலேயே உறங்கும் தலைமுறை இது. இப்படி ஓவர் டியூட்டியாக மொபைலைக் கொஞ்சிக்கொண்டே இருப்பதால், ஒவ்வொரு நாளும் பல உடல்நல, மனநல நோய்கள் புதிது புதிதாகப் பெயர்வைக்கப்பட்டு பெருகிக்கொண்டே வருகின்றன என்று, அந்த லிஸ்ட்டை அப்லோடு செய்துகொண்டே இருக்கிறது மருத்துவ உலகம். உங்களுக்கு ஒரு செக் லிஸ்ட் இங்கே!

ஸ்மார்ட்போன் டிஸ்ஆர்டர்கள் ... உஷார்  மக்கா..!

பித்துப்பிடிக்கிறதா?!

மொபைல் இல்லாமல் சில நிமிடங்கள்கூட இருக்க முடியவில்லையா? பர்ஸுக்குள் பத்திரமாக வைத்திருந்தாலும், மொபைல் இருக்கிறதா என்று அடிக்கடி எடுத்துப் பார்த்து உறுதிசெய்து கொள்கிறீர்களா? நோட்டிஃபிகேஷன்ஸ் செக் செய்துகொண்டே இருக்கிறீர்களா? வாழ்த்துகள்... உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயை ஸ்கேன் செய்தாகிவிட்டது. அது, ``நோமோஃபோபியா’ (Nomophobia). ‘மொபைல் இல்லாம நான் எப்படி இருப்பேன்?’ என்று பதறவைக்கும் இந்த நோமோஃபோபியா, நோ மொபைல் ஃபோபியா என்பதன் சுருக்கம். மொபைலை தூங்கும்போது தலையணைக்குக் கீழே வைத்துக்கொள்வதில் இருந்து, கிளாஸ் ரூமில் டெஸ்க்டாப்புக்கு கீழே வைத்துக்கொள்வது வரை, நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கும் எல்லாமே இந்த நோயின் அறிகுறிகளே! மொபைலைக் காணாத சமயங்களில் நிதானம் இழந்து பித்துப்பிடித்தது போலத் தேடி னால், இன்னொரு முறை வாழ்த்துகள்... நோய் முற்றிய நிலை என்று அர்த்தம். இதற்கு ஒரே தீர்வு... மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் செல்வது.

‘காதுமா’ ஆக ஆசையா?!

உதயநிதியும் சந்தானமும்போல நீங்களும் ஹெட்செட்டும் எப்போதும் ஒன்றாகவே சுற்றுகிறீர்களா? அதில் ஹை பிட்ச்சில் ‘ஆரோமலே’ கேட்கிறீர்களா? உங்கள் செவித்திறன் சீக்கிரமே எக்ஸ்பயரி ஆகலாம். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஹெட்செட் பயன்படுத்துவது, ஃபுல் வால்யூமில் தொடர்ந்து பாடல்கள் கேட்டுக் கொண்டே இருப்பது இதெல்லாம் காதுகளைக் கடுமையாகப் பாதிக்கலாம். ‘எனக்கு காது கேட்காது... யார்கிட்டயும் சொல்லிடாதீங்க’ என்று ‘காதுமா’வாகும் நிலைமை வராமல் இருக்க, தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஹெட்செட் பயன்படுத்தக்கூடாது, 75 பர்சன்ட்டுக்கு மேல் வால்யூம் வைக்கக்கூடாது, `இன்னர் ஹெட்செட்’டைத் தவிர்ப்பது நலம் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.

டைப்பிக்கொண்டே இருந்தால்...

`வாட்ஸ்அப்’பில் பிரியத்துக்கு உரியவர் கான்டாக்டில் ‘டைப்பிங்’ என்று நோட்டிஃபிகேஷன் பார்ப்பது வரம். ஆனால், அந்த வரத்துக்குப் பின் இருக்கும் சாபம் பற்றித் தெரியுமா? டிவிட்டரில் 140 வார்த்தைகளுக்குள் டைப் செய்வதாக இருந்தாலும் சரி, ஃபேஸ்புக்கில் 140 பேரா வரை டைப் செய்வதாக இருந்தாலும் சரி... எப்போதும் மொபைல் கீபேடில் `டக்டக்டக்டக்’ என டைப்பிக் கொண்டே இருந்தால், விரல்கள் விரைவாக பாதிக்கப்படும். சீக்கிரமே எலும்புத் தேய்மானம் ஏற்படலாம். ‘செல்ஃபோன் எல்போ’ (Cellphone elbow) என்று பெயர்வைக்கப்பட்டிருக்கும் இந்த நோயின் அறிகுறிகள், விரல்கள் வீங்குதல் மற்றும் மரத்துப்போதல். உங்கள் வலதுகை கட்டைவிரலை எதற்கும் ஒருமுறை கூர்ந்து பாருங்கள்.

நிமிர்ந்து நில்!

குனிந்த தலை நிமிராமல், மொபைல் திரையில் கவிழ்ந்தே நடக்கும் தலைமுறையே... நோட் இட். கழுத்தில் எப்போதும் ஒரு மெல்லிய வலி உறுத்திக்கொண்டே இருக்கிறதா? ‘நந்தா’ பட சூர்யாபோல கழுத்தை முறுக்கிப்பார்த்தாலும் சரியாகவில்லையா? அதுதான்... அதேதான்! தலையை எப்போதும் 45 டிகிரியில் சாய்த்து மொபைல் மேய்பவர்களுக்கு சீக்கிரமே கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டு ஏற்படும் நோய்தான், `டெக்ஸ்ட் நெக்’ (Text neck). 70% இந்தியர்கள், அவர்களே அறியாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதற்குத் தீர்வு பாரதி (‘ஜெயம்’ ரவி என்றும் வைத்துக்கொள்ளலாம்) சொன்னதுதான்... நிமிர்ந்து நில். மொபைலை கண் பார்வைக்கு நேராகவைத்துப் பயன்படுத்தவும்.

டோன்ட் டேக் செல்ஃபி புள்ள!

செல்ஃபி என்பதை ஹாபியாகவும், டியூட்டியாக வும் செய்துகொண்டிருக்கும் மக்கா... அது ஒரு சீரியஸான மனநோய் என்கிறார்கள் மருத்துவர்கள். அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் உங்கள் உடல் பற்றி ஒரு தாழ்வுமனப்பான்மை ஏற்படும். ‘பாடி டிஸ்மார்ஃபிக் டிஸ்ஆர்டர்’ (body dysmorphic disorder) எனப்படும் அந்த பாதிப்பால், ‘நான் அழகா இல்ல’ என்று யோசிப்பதில் இருந்து ‘எனக்கு இந்த உருவமே வேணாம்’ என்று வெறுக்கும் அளவுக்கு மனஉளைச்சல் ஏற்படும். சிம்பிள் தீர்வு... சிறிது நாட்களுக்கு ஸ்மார்ட்போனை தூக்கிப்போட்டுவிட்டு நோக்கியா 1100-க்கு மாறுங்கள்.

இஸ்க் இஸ்க் எனக் கேட்கிறதா?!

மொபைல் ஸ்விட்ச் ஆஃப் மோடில் இருக்கும்போதுகூட, ‘ரண்டக்க ரண்டக்க’ என்று அதன் ரிங்டோன்

சத்தம் கேட்கிறவர்களுக்கு, ‘ரிங்ஸைட்டி’ (Ringxiety) பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். அதாவது, மொபைல் ரிங் ஆகாமலேயே ரிங் ஆவதுபோன்ற ஒரு பதற்றம் ஏற்படுவது. மேலும், ‘என்ன சத்தம் இந்த நேரம்...’ என்று அடிக்காத மொபைலை அடிக்கடி செக் செய்துகொண்டே இருந்தால், ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன் நோய்’ (அது என்ன நோய் என்று கூகுளாண்ட வரிடம் கேட்கவும்) வரை இது கொண்டு போகும். அதேபோல, மொபைல் அடிக்கடி வைப்ரேட் ஆவதாக உணர் பவர்களுக்கு ‘பேன்டம் வைப்ரேஷன் சிண்ட்ரோம்’ (phantom vibration syndrome) பாதிப்பு இருக்கலாம் என்கிறார் கள். இவற்றுக்கு எல்லாம் தீர்வு... ஒரே ரிங்டோனை நீண்ட நாட்களுக்கு தேயவிடாமல், அடிக்கடி மாற்றுங்கள். அப்புறம்... மூச்சை இழுத்துவிடுங்கள். அட, தியானம்ப்பா!

இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் எளிமையான தீர்வு ஒன்று இருக்கிறது... ஸ்விட்ச் ஆஃப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லோ.சியாம் சுந்தர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism