‘‘அனு பாவமா... லக்கியா?’’

செலக்டிவ் படங்கள், சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் என சினிமா, சின்னத்திரை இரண்டு தளங்களிலும் தனக்கென ஓர் இடம் பிடித்தவர், அனுஹாசன். அவர் தன் வார்ட்ரோப் கதவுகள் திறக்கிறார்... நமக்காக!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஃபேஷன் என்பது, நமக்குப் பொருந்துவ தாவும் இருக்க வேண்டியது முக்கியம். ஆடை விஷயத்தில் நான் எப்போதுமே ஒருத்தரைப் பார்த்து வியந்து அவரை மாதிரி நானும் உடுத்தணும்னு நினைச்சதில்ல. அப்படி செய்தா, நான் என்னோட தனித்துவத்தை இழந்துடுவேன். டிரெஸ் என்பது அவரவர் உடலமைப்பைப் பொறுத்தது. இந்த பிராண்ட்தான், இந்த கடைதான்னு எந்த பாலிசியும் எனக்கு இல்லை. எனக்கு என்ன பொருந்துதோ, எது கம்ஃபர்டபிளா இருக்கோ... அதைத்தான் விரும்புவேன். 

ஷாப்பிங்னாலே பெண்களுக்கு குஷிதான். ஆனா, எனக்கு அது ரொம்ப போரிங்கான விஷயம். பொதுவா பெண்கள் கடைக்குப் போனதும், அழகா இருக்கிற அல்லது அவங்களுக்கு அழகாத் தெரியுற டிரெஸ்ஸை எல்லாம் தேர்வு செய்வாங்க. ஆனா, நான் வீட்டில் இருந்து கிளம்பும்போதே, ஃபுல் ஸ்லீவ் குர்தி, மைல்ட் ஷேட் டி-ஷர்ட்னு என்ன வாங்கணும் என்பதை முடிவெடுத்துட்டுதான் கிளம்புவேன். ஆடையை செலக்ட் செய்ய வேண்டிய ஏரியாவை இப்படி ப்ரீ ப்ளான் பண்ணி லிமிட் செய்துக்கிறதால, நேரமும் காசும் மிச்சம். இன்னும் சொல்லப்போனா, ஒரு டி-ஷர்ட் சைஸ் எனக்கு எப்பவும் இல்லாத வகையில் ரொம்ப கரெக்ட்டா மேட்ச் ஆனதுன்னா, அதே பேட்டர்னில் 6 கலர்ஸ் வாங்கி வார்ட்ரோபை நிறைச்சிடுவேன்.

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 3

ஷாப்பிங்ல நான் ரெண்டு ரூல்ஸ் வெச்சிருக் கேன். விழாக்களுக்கு, வெளியிடங்களுக்குப் போட்டுட்டுப் போக எடுக்கிற கிராண்ட் டிரெஸ்ஸுக்கு விலை பார்க்கமாட்டேன். ஆனா, டெய்லி யூஸ் டிரெஸ்ஸை குறைந்த விலையில்தான் வாங்குவேன். எப்பவும் தனியாதான் ஷாப்பிங் போவேன். ஒருமுறை தெரியாத்தனமா என் தோழி அபர்ணா பிள்ளை மற்றும் அவ அம்மா கூட ஷாப்பிங் போயிட்டேன். என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஷாப்பிங் அது. நாலு மணி நேரம்... கடையைச் சுத்தி சுத்தி வந்து ஷாப் பண்ணினாங்க. அப்போதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது... ஷாப்பிங் என்ற ஜீன் என் க்ரோமோசோமிலேயே மிஸ்ஸிங்! ஏன்னா, எனக்கு அது ஒரு பரவசமான அனுபவமா எப்பவும் இருந்ததே இல்ல. என் அப்பாவுக்காக ஷாப் பண்ணினா மட்டும், ரொம்ப சந்தோஷமா இருக்கும். அந்த சந்தோஷம்கூட அப்பாவாலதான், ஷாப்பிங்னால இல்ல. அப்பா எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்.

எனக்குப் புடவை கட்டிக்க ரொம்பப் பிடிக்கும். புடவைனாலே தனி அழகுதான். ஆனா, கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றது ஜீன்ஸ், ஷர்ட்லதான். ஆனாலும், எந்த இடத்துக்கு எந்த உடை என்ற வரையறையும் எனக்குத் தெரியும். ஒண்ணு தெரியுமா... வீடு, தோழிகள்னு பலரும் என் டிரெஸ்ஸிங் சென்ஸோட முரண்படுவாங்க. ஆனா, நான் அதையெல்லாம் கண்டுக்கமாட்டேன். சின்ன வயசுல இருந்தே என் இஷ்டத்துக்கு டிரெஸ் எடுக்க, உடுத்த சுதந்திரம் கொடுத்துட்டாங்க வீட்டுல. நடிகையாவதற்கு முன்னும், பின்னும், இப்பவும், எப்பவும்... அனுவுக்குப் பிடிச்ச உடைகளைத்தான் அனு உடுத்துவா... அது மத்தவங்களுக்குப் பிடிக்கலைன்னாக்கூட! 

இப்போ சினிமா முதல் சேனல் வரை ஸ்டார்ஸுக்கு பிரத்யேக காஸ்ட்யூம் டிசைனர்ஸ் இருக்காங்க. ஆனா, காலேஜ் கேர்ள்ஸில் இருந்து ஆபீஸ் கோயர்ஸ், ஹோம்மேக்கர்ஸ்வரை இப்போஇருக்கிற பெண்களைப் பார்த்தா, எல்லாருக்குமே தனியா காஸ்ட்யூம் டிசைனர் இருப்பாங்களோனு ஆச்சரியப்படுற அளவுக்கு டிரெஸ்ஸிங், ஆக்சஸரீஸில் அசத்துறாங்க. அந்த ரசனைக்கு ஹேட்ஸ் ஆஃப் டு யூ கேர்ள்ஸ்!

செலிப்ரிட்டி செலக்‌ஷன்! - 3

இந்த இடத்துல ஒரு சீக்ரெட் சொல்லணும். என் வாழ்க்கையில் இந்த வயதுவரை, எனக்கு யாருமே டிரெஸ் செலக்ட் செய்து கொடுத்ததில்லை. அனு பாவமா, லக்கியா?!

நான் வெளிய எங்க போனாலும், டிரெஸ் அழகா இருக்கிறதைவிட, எனக்கு அழகா, பொருத்தமா, வசதியா இருக்கிறதைதான் போட்டுட்டுப் போவேன். அப்போதான் போற இடத்தில் கான்ஃபிடன்ட்டா இருக்க முடியும். இல்லைன்னா, ஷோகேஸ் டால் மாதிரி அப்படியே நிக்கணும்; சைஸ், ஃபிட்டிங், பேட்டர்ன் எல்லாம் சரியா இருக்குமானு ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு யோசிச்சு அடியெடுத்து வைக்கணும். அப்படியும்கூட, அழகா தெரிய சில நேரங்களில் நிறைய அட்ஜஸ்ட் செய்துக்க வேண்டிதான் வருது. நான் ஒவ்வொரு முறை புடவை அணியும்போதும் அதைத்தான் செய்றேன்!’’

சு.சூர்யா கோமதி