Published:Updated:

கதை கதையாம் காரணமாம்... 3

கதை கதையாம் காரணமாம்... 3
பிரீமியம் ஸ்டோரி
கதை கதையாம் காரணமாம்... 3

கதை கதையாம் காரணமாம்... 3

கதை கதையாம் காரணமாம்... 3

கதை கதையாம் காரணமாம்... 3

Published:Updated:
கதை கதையாம் காரணமாம்... 3
பிரீமியம் ஸ்டோரி
கதை கதையாம் காரணமாம்... 3

வடை சொன்ன கதை

புத்தம் புதிய கதை ஒன்றை நீங்கள் படிக்கத் தயாரா?

ஒரு ஊர்ல, பாட்டி ஒருத்தங்க வடை சுட்டுட்டு இருந்தாங்களாம். அங்கே பறந்துவந்த காக்கா...

‘நிறுத்துங்க... நிறுத்துங்க. இதுவா புதுக் கதை? எங்க பாட்டி சொல்லி சொல்லி ஓய்ஞ்சு போன கதை இது’ என்கிறீர்களா? உண்மைதான். இது ரொம்ப பழைய கதைதான். இந்தக் கதையை உல்டா செய்து நிறையக் கதைகளையும் பலர் உருவாக்கியிருக்கிறார்கள். கதை சொல்லி ஜீவா ரகுநாத், இந்தக் கதையை... சொல்லப்படும் கோணத்தைச் சற்றே மாற்றிச் சொல்வார். எப்படியென்றால், காக்காவால் தூக்கிச் செல்லப்படும் வடையே அந்தக் கதையைச் சொன் னால் எப்படி இருக்கும்? படிப்போமா..?!

கதை கதையாம் காரணமாம்... 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இன்னிக்கு என்ன விசேஷம்னு தெரியல, எங்கள (வடை) நிறைய சுட்டு வெச்சிருக்காங்க. இங்க பாரு... பக்கத்தில் கறுப்பா ஒருத்தன் இருக்கான், இந்தப் பக்கத்தில் சரியாக வேகாமல் மாவுப்பயலாட்டம் ஒருத்தன் இருக்கான். நான்தான் சரியா வெந்து, அழகான கலர்ல சூப்பரா இருக்கேன். ஆமா, நான் எங்கே இருக்கேன்? ஓ... பாட்டி எங்களை, விற்கிறதுக்காக சுட்டு வெச்சிருக்கங்களா!

என்னை யாரோ குறுகுறுன்னு பார்க்கிற மாதிரி இருக்கே! யாரது? ஆ! அதோ அந்த மரத்துல ஒரு காக்கா உட்கார்ந்துட்டு என்னையே பார்க்குது. `பாட்டி, என்னைப் பத்திரமா பார்த்துக்கோ... அந்தக் காக்கா பார்க்கிறதே பயமா இருக்கு’னு சொல்லிட்டே இருக்கேன், அதைக் காதிலேயே வாங்காம பாட்டி விறகை எடுக்கத் திரும்பிட்டாங்க. அந்த நேரத்தில் அந்தக் காக்கா என்னைத் தூக்கிட்டு பறக்குது.

என் இடுப்புல மூக்கை வெச்சு அழுத்துது, ரொம்ப வலிக்குது. ஆனா, இவ்வளவு உயரத்திலேருந்து இந்த ஊரை நான் பார்த்ததே இல்லை. என்னைச் சுட்ட பாட்டி, என் உயரம்தான் இருங்காங்க. ஆத்துல குளிக்கிற மாடெல்லாம் குட்டி குட்டியாகத் தெரியுது. சரி, இந்தக் காக்கா என்னை எங்கதான் தூக்கிட்டுப் போகுது?

அப்பாடா... ஒரு மரத்துலே உட்கார்ந்துடுச்சு. அய்யோ, அடுத்து என்னைக் குத்திக் குத்திச் சாப்பிடப் போகுதா, நான் தப்பிக்க வழியே இல்லையா? என்ன திடீர்னு கெட்ட ஸ்மெல் வருது. கீழே வர்றது நரி மாதிரி இருக்கே. நரியேதான். ‘காக்கா, நீ ரொம்ப அழகா இருக்கே... ஒரு பாட்டு பாடேன்’னு நரி சொல்லிச்சு. ‘யேய் காக்கா, நரி சும்மா சொல்லுது... என்னைக் கீழே விட்டுடாதே’னு’ காக்காகிட்ட சொல்லிட்டு இருக்கும்போதே, பெரிய பாடகருன்னு நினைச்சிட்டு, காக்கா ‘கா... கா...’னு சொல்லிச்சா... நான் கீழ விழுந்துட்டேன்... நரி என்னைத் தூக்கிட்டு ஓடிடுச்சு!’’

பலமுறை நீங்கள் கேட்ட கதையாக இருந்தாலும் வேறொரு கோணத்தில் சொல்லும்போது, கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா? இதை நீங்கள் நடித்துக்காட்டிக் கொண்டே சொல்லும்போது இன்னும் சுவையானதாக மாறிவிடும்.

இதே கதையை பள்ளி மாணவி ஒருவர் வேறு கோணத்தில் சொன்னார். அதாவது, காக்கா இந்தக் கதையைச் சொன்னால் எப்படி இருக்கும்?!

“ஒருநாள் எனக்கு ரொம்ப பசியாக இருந்துச்சு. பறக்கவே முடியல. சோர்ந்துபோய் ஒரு கோயில் மதில் மேல உட்கார்ந்தேன். மதில் பக்கத்துல பாட்டி ஒருத்தங்க மொறுமொறுன்னு வடை சுட்டு வெச்சிருந்தாங்க. அவங்க திரும்பின நேரத்தில் வடையைத் தூக்கிட்டு, பறந்து வேறு ஊருக்கு வந்து, மரத்தில் உட்கார்ந்தேன். அப்போ, நரி வந்து, ‘காக்கா... நீ பார்க்கிறதுக்கே இவ்வளவு அழகா இருக்கியே... பாடினா சூப்பரா இருக்கும்! எனக்காக ஒரு பாட்டு பாடேன்’னு சொன்னது. என்னை ஏமாற்றத்தான் நரி சொல்லுதுனு தெரியும். எல்லோரும் குயில் பாட்டுதான் நல்லாயிருக்கும்னு சொல்வாங்க. நரிதான் முதன் முதலாக என் பாட்டு நல்லாயிருக்குனு சொல்லியிருக்கு. அதனால நானும் ‘கா... கா...’னு பாட, கீழே விழுந்த வடையை நரி தூக்கிட்டுப் போயிடுச்சு!”

அந்த மாணவி இந்தக் கதையை வேறு ஒரு திசைக்கே கொண்டுபோய்விட்டார். பாட்டு என்றால், உடனே நம் நினைவுக்கு வருவது குயில்தான். இசைக்குயில்னு என்றெல் லாம் பட்டம் கொடுப்போம். ஆனால், அது காக்காவுக்கு வலியாக இருக்கும் என மாணவி நினைத்தது ஆச்சர்யம். இந்தச் சிந்தனை அந்த மாணவிக்கு, அவரை அறியாமலே ஏற்கெனவே இருந்திருக்கும்; அதை வெளிப்படுத்த, மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள கதைசொல்லல் பயன்பட்டிருக்கிறது.

ஒரு வீட்டில் ஆண் - பெண் குழந்தைகள் இருந்தால், ஆண் குழந்தைக்கு சிறப்பு கவனிப்பும், சுதந்திரமும், பெண் குழந்தைக்கு கூடுதல் வேலையும் கட்டுப்பாடும் விதிக்கப்படுவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. அப்படியான சூழலில் வளரும் பெண்ணாக அந்த மாணவி இருந்திருக்கலாம். நிராகரிப்புக்கு இடையில் பாராட்டு பொய்யாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளவே மனம் விரும்பும். அதனாலேயே பாட்டி வடை சுட்ட கதையின் முடிவுக்கு இப்படியொரு விளக்கத்தைத் தந்திருக்கலாம்.

கதை சொல்வது, பொழுதுபோக்குவதற்கான விஷயம் மட்டுமல்ல. கதை சொல்பவர்களின் மனதில் ஊறி, ததும்பி, எப்படி வழிவது என்று நிற்கும் விஷயங்களை, சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் மாறும். உங்களின் மகன் சொல்லும் கதையில் வரும் கரடிக்கு ஊதா கலர் சட்டையே பிடிக்காதாம் என்று கதையின் போக்கில், அவன் ஒரு வரியில் சொல்லிச் செல்லலாம். நீங்கள் நன்கு கவனித்துப்பார்த்தால், ஊதா நிறச் சட்டையை உங்களின் பிடிவாதத்தினாலேயே விழாக்களுக்கு அவன் அணிந்துவந்ததை உணரமுடியும். கதை என்பது நமக்குப் புதிய திசைகளை அறிமுகப்படுத்தும்.

ஓகே... கதைப் பயிற்சிக்குச் செல்வோமா?

பாட்டி வடைசுட்ட கதையை, பாட்டியே சொல்வதுபோல ஒருநாளும், நரி சொல்வதுபோல ஒருநாளும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்குச் சொல்லுங்கள்.

விஷ்ணுபுரம் சரவணன்

பேசாத குழந்தை பேசியது!

ஜீவா ரகுநாத்... தமிழின் புகழ்பெற்ற கதைசொல்லி. உலகின் பல நாடுகளுக்கும் சென்று குழந்தைகளுக்கு கதைகளையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி வருபவர். கடந்த 20 ஆண்டுகளாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கதைசொல்லல் பயிற்சி அளித்து வருபவர்.

கதை கதையாம் காரணமாம்... 3

“சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கதை சொல்லிட்டு இருந்தேன். எல்லோரும் கைதட்டி ரசிச்சிட்டு இருந்தாங்க. முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு குட்டிப் பொண்ணுக்கு 4 வயசு இருக்கும். ரொம்ப கவனமா கதை கேட்டா, மெலிசாத்தான் சிரிச்சா. கதை நிகழ்வு முடிந்தது. அந்தக் குட்டிப் பெண் எழுந்துவந்து, என் கையைப் பிடிச்சு இழுத்தா. நான் குனிந்து ‘என்னடா..?’னு கேட்க, என் காதில் ‘I like your story Aunty’னு சொன்னா.

இதுபோல பல நிகழ்ச்சிகளில் நடந்திருக்கு. ஆனா, இது மறக்க முடியாத பாராட்டா ஆனதுக்குக் காரணம், அந்தக் குட்டிப் பெண்ணின் அம்மா கண்களில் நீர்பூக்க எங்கிட்ட சொன்ன விஷயம்தான். ‘மேடம்... பிறந்ததிலிருந்து இவ சில வார்த்தைகளைத் தவிர பேசவே மாட்டா. இன்னிக்கு உங்களோடு பேசினது எங்களுக்கு...’னு சொல்ல வந்ததைச் சொல்லக்கூட முடியாம ஆனந்தக் கண்ணீரோட நின்னார் அந்த அம்மா.

கதைக்கு எதையும் சாதிக்கும் சக்தி இருக்குங்கிறதை, இன்னும் ஆழமா நான் அன்னிக்குப் புரிஞ்சுக்கிட்டேன். பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கதை சொல்வதுதான் அவங்ககூட பிரிக்க முடியாத ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கிறதுக்கான வழி. கதைகள், நம் தொப்புள் கொடி உறவுகளின் முழு அர்த்தத்தை விளங்கவைக்கும். தூங்க வைக்கணுமேனு கடமைக்கு கதை சொல்லாம, நீங்க ஆத்மார்த்தமா சொல்லும்பட்சத்தில் அந்தக் கதை வழியே, நல்ல மாற்றங்கள் நிச்சயம் நிகழும்’’ என்கிறார் ஜீவா.