`ஆர்ஜே’, `விஜே’ ஆகவேண்டுமா?!

ளம் பட்டாளத்துக்கு பேசுவது என்றாலே கொள்ளை ஆசைதான். அதுவும் சம்பளம் கொடுத்து பேசச் சொன்னால்..? நினைத்தாலே இனிக்கும் இந்த `ஆர்ஜே’, `விஜே’ வேலைகளுக்கான தகுதி, முயற்சி என பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்க இந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில் வழிகாட்டுகிறார்... `ஆர்ஜே’ கம் `விஜே’ பாலாஜி!

ஒரு டஜன் யோசனைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1.நியூஸ் அப்டேட்

தொலைக்காட்சியிலோ வானொலி யிலோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, உங்களுக்கான முதல் தகுதி சமுதாய நிகழ்வுகளில் அப்டேட்டடாக இருப்பது. தினமும் இரண்டு செய்தித்தாள் படிக்க வேண்டியது கட்டாயம். லைவ் நிகழ்ச்சிகளைக் கையாள்பவர்கள், நடப்புச் செய்திகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பகிரும் லாகவம் அறிந் திருக்க வேண்டும்.

2.மொழிப் புலமை

‘மீடியாவுக்கு வரணும்னா நல்லா இங்கிலீஷ் பேசத் தெரிஞ்சிருக்கணும்’ என்பது வதந்தி. ஆனால், தாய் மொழியில் ஆளுமை வேண்டும். தடையறப் பேசும் வேகம் வேண்டும். நிகழ்ச்சியில் சரியான தருணத்தில் சரியான வார்த்தைகளாகப் பயன்படுத்த வேண்டும். உச்சரிப்பும் முக்கியம்.

3.ஷார்ட் அண்ட் ஸ்வீட்

ஒரு தகவலை அப்படியே மக்க ளிடம் சொல்வதற்கு செய்தி வாசிப்பாளர் போதும்... `ஆர்ஜே’, `விஜே’ தேவைஇல்லை. எனவே, எந்த ஒரு செய்தியையும் உங்கள் கருத்துடன் சேர்த்துப் பகிருங்கள்; எந்த ஒரு பிரச்னையைப் பேசும்போதும் அதற்கான தீர்வையும் சேர்த்து ஆலோசியுங்கள். மிக முக்கியமாக, ஒரு விஷயத்தை முடிந்த அளவு ஷார்ட் ஆக, அதே சமயம் ஸ்வீட் ஆகச் சொல்லத் தெரிய வேண்டும்.

4.கோணம் புதிது

சமுதாய நிகழ்வுகளை உற்று நோக்க வேண்டும். பெரிய செய்திகள் மட்டுமல்ல, சின்னச் சின்ன நிகழ்வுகளையும் அறிந்துவைத்திருந்தால்தான் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூட்ட முடியும். எந்த நிகழ்வையும் புதிய கோணத்தில் பார்க்கப் பழகுங்கள். செய்தித்தாளில் படிக்கும் செய்திகளை, பல்வேறு கோணத்திலும் சிந்திக்கப் பழகினால்தான், மீடியாவில் அதைப் பகிரலாமா, கூடாதா என்ற தெளிவு கிடைக்கும். மேலும், ஒரு செய்தியை உங்களுக்கான ஒரு பிரத்யேக கோணத்தில் முன்வைக்கும்போது, பாராட்டும் கிடைக்கப் பெறலாம்.

5.படிப்பைவிட திறமைக்கு `டிக்’

ஜாக்கி என்பது படிப்பு சார்ந்த வேலை அல்ல, திறமை சார்ந்த வேலை. எனவே, மீடியா சார்ந்த படிப்பு படித்திருந்தால் சிறப்பு என்றாலும், படிக்காதவர்களுக்கு வாய்ப்பில்லை என்பதல்ல. `ஆர்ஜே’, `விஜே’ ஆக, ஒரு டிகிரி முடித்தவுடன் நேரடியாக எஃப்.எம் சேனல்களுக்கு விண்ணப்பம் போடலாம். மீடியா பணிக்கான அடிப்படை ஆர்வம், அறிவுடன் ஆடிஷனில் நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், பணி குறித்து அவர்களே பயிற்சி வழங்குவார்கள்.

6. இலக்கில் தெளிவு

நிறைய பேர் செய்யும் தவறு, ‘முதல்ல `ஆர்ஜே’ ஆகிட்டா, `விஜே’ ஆவது ஈஸி... அப்படியே சினிமாவுக்கு போயிடலாம்’ என்று பெரும் பிளான்களுடன் வருவது. அது சரியான திட்டமிடல் அல்ல. ஒரு தீர்மானமான இலக்கை நிறுவி, அதை நோக்கிப் பயணியுங்கள். `ஆர்ஜே’தான் உங்கள் இலட்சியம் என்றால் அதற்காக உங்களைத் தயார்படுத்துங்கள். `ஆர்ஜே’ என்பது `விஜே’வுக்கான தகுதி அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். துறைகளை மாற்றிக்கொண்டே இருந் தால் வெற்றி கைவிட்டுப்போகும். மேலும், பணியாற்றும் துறையில் முழு அர்ப்பணிப்பு இல்லாமல் இருந்தால் தனித்துவத்தை வெளிப்படுத்த முடியாது.

7. 19 வயதினிலே

இப்போது ஜாக்கி ஆக குறைந்தபட்ச தகுதி ஒரு டிகிரி என்றாகிவிட்டது. எனவே, டிகிரிக்கு சைடு பை சைடாக மேலே சொன்ன தகுதிகளையும் வளர்த்துக்கொண்டால், 19 வயதில் சிறப்பான ஜாக்கியாக உங்களால் உருவாகியிருக்க முடியும்.

8.அழகு முக்கியமா?

அழகு என்பது வேறு, பெர்சனாலிட்டி என்பது வேறு. `ஆர்ஜே’ ஆக அழகு, பெர்சனாலிட்டி ஒரு சதவிகிதம் கூட தேவையில்லை. ஒரு நிகழ்ச்சியை எந்தளவுக்கு நீங்கள் சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கிறீர்கள் என்பதே அங்கு உங்களின் அழகு. `விஜே’ ஆக, பெர்சனாலிட்டி அவசியம். அது மீடியா வேலைக்குச் சென்ற வுடன் தானாக வந்துவிடும்.

9.குரல் முக்கியமா?

இதற்கும் இல்லை என்பதே பதில். ஆம்... குரல் நன்றாக இருந்தால் ஓ.கே! ஆனால், சுமாரான குரலாக இருந்தாலும்கூட, மக்களைக் கவரும் அளவுக்கு மேஜிக்கல் மொழி ஆளுமை, சமயோஜித அறிவு இருந்தால், குரல் இரண்டாம் பட்சம் ஆகிவிடும்.

10.நண்பர்களே நடுவர்கள்

ஜாக்கி ஆகும் ஆசை உள்ள மாணவர்கள், கல்லூரியில் நிகழ்ச்சிகளைத் தயக்கமின்றி தொகுத்து வழங்குங்கள். அது உங்களுக்குத் தன்னம்பிக்கையும், நல்ல அனுபவமும் தரும். மேலும், உங்கள் ப்ளஸ், மைனஸ்களை உங்கள் நண்பர்களைவிட உரிமையாகவும், உண்மையாகவும் சுட்டிக்காட்டுபவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். எனவே, மாணவர்களுக்கு கல்லூரி மேடைகளே சிறந்த பயிற்சிக்களம்.


11.பொறுமை அவசியம்

ஜாக்கி பணியில் நிறைய பிரச்னைகள், சங்கடமான சூழ்நிலை களைக் கையாள வேண்டியிருக்கும். எதிர் முனையில் பேசுபவர்கள் எந்த மனநிலையிலும் இருக்கலாம். அவர்களைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். லைவ் புரோகிராமில் அந்த நிமிடத்தில் ஏற்படும் பிரச்னையை சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எந்தச் சூழலிலும், பொறுமை மிக அவசியம்.

12.கிரியேட்டிவிட்டி

மேலே சொன்னவை எல்லாம், ஜாக்கி வேலையில் உங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்கான தகுதிகள். கிரியேட்டிவிட்டி என்பது, நீங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான திறன். வழக்கமான நிகழ்ச்சி அமைப்பைத் தவிர்த்து, தகர்த்து, ஒரு புதிய கோணத்தில், புதுமையான முயற்சியுடன் களமிறங்கும்போது, தனித்துவமான ஜாக்கியாக கவனிக்கப்படுவீர்கள். மேலும், இது ஃபீல்ட் அவுட் ஆகாமல் இருப்பதற்கான முக்கியத் திறனும்கூட!

ஸ்டே லைவ்... ஆல்வேஸ்!

சு.சூர்யா கோமதி