Published:Updated:

கலையும் காதலும் ஜெயிக்கும்!

கலையும் காதலும் ஜெயிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
கலையும் காதலும் ஜெயிக்கும்!

வாழ்க்கைப் பயணம்

கலையும் காதலும் ஜெயிக்கும்!

வாழ்க்கைப் பயணம்

Published:Updated:
கலையும் காதலும் ஜெயிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
கலையும் காதலும் ஜெயிக்கும்!

ஷீலா ராஜ்குமார்... நாடகத்துறையில் வளர்ந்து வரும் இளம் கலைஞர். இரண்டு வருடங்களுக்கு முன் நாடகக் கலைஞர் தம்பிச்சோழனுடன் ஆவணப்படம் ஒன்றில் இணைந்து பணியாற்றியபோது இருவருக்கும் காதல் மலர, மகளிர் காப்பகம் முதல் சிறைச்சாலை வரை, பல தடைகளுக்குப் பிறகு இணைந்தது காதல் ஜோடி. இப்போது தன் கணவருடன் இணைந்து பல மேடை நாடகங்களில் பங்கேற்று வரும் ஷீலாவின் முகநூல் பக்கத்தில், அவரின் அழகிய கண்களுக்கும் கூந்தலுக்கும் குவிந்துகிடக்கின்றன லைக்ஸ்.

கலையும் காதலும் ஜெயிக்கும்!

தற்போது நடனம், நாடகம் என கலையுலகில் பரபரப்பாக இருக்கும் ஷீலாவுடைய வாழ்க்கையின் வலிகளை வார்த்தைகளால் கடத்திவிட முடியாது. பெற்றோரிடமிருந்து விடுபட்ட பால்யம், பகுதி நேர வேலையால் ஜீவித்த இளமைக்காலம், தடைகள் பல தாண்டிய திருமணம் என அனைத்தையும் நாணலாய் வளைந்து கடந்து தொடர்ந்து இயங்குகிறார் ஷீலா... தன்னம்பிக்கையின் குறியீடாக!

‘‘எனக்குச் சொந்த ஊர் ஜெயங்கொண்டம். அப்பா, அம்மா இருந்தும் அவங்களோட அரவணைப்பு எனக்கு தூரம்தான். பள்ளிப் படிப்பை ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். ப்ளஸ் டூ முடிச்சதும் எனக்குக் கல்யாணம் செய்றதில் மும்முரமானாங்க பெற்றோர். ஆனா, எனக்குச் சின்ன வயசுல இருந்தே நாட்டியம் கத்துக்க ஆசை. ‘ஒண்ணும் வேணாம்’னு இரக்கமே இல்லாம வீட்டுக் கதவைத் சாத்த, அவங்களை மீறி கல்லூரியில் சேர்ந்தேன். திருச்சி, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பி.எஃப்.ஏ (பேச்சிலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்), சேர்ந்து பரதம் பயின்றேன். கல்வி உதவித்தொகை மூலமா ஃபீஸ் கட்டிக்கிட்டேன். சாப்பாடு, மத்த செலவுகளுக்கு எல்லாம் பகுதி நேர வேலை பார்த்தேன். அந்தச் சமயத்துலதான் தம்பிச்சோழன் எனக்கு அறிமுகம் ஆனார்’’ என்று தன் போராட்ட காதல் அத்தியாயம் சொன்னார் ஷீலா.

‘‘நான் கிறிஸ்தவர். அவர் இந்து. மதங்கள் வேறு வேறா இருந்தாலும் எங்களோட உணர்வுப் பின்புலம் ஒரே மாதிரிதான் இருந்தது. தம்பிச்சோழனும் என்னைப்போலவே பெத்தவங்க ஆதரவு கிடைக்காம சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில படிச்சு, சென்னைக்கு வந்தவர். ஒரு ஹோட்டல்ல வேலைபார்த்து சமையல் கத்துட்டு, பிறகு முத்துசாமி சாரோட கூத்துப்பட்டறைக்கு சமையல் கலைஞரா போனார். அங்க நாடகத்தின் மேல அவருக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்த முத்துசாமி சார், அவருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தார். அதில் தன்னைப் பட்டைதீட்டிக்கிட்ட தம்பிச்சோழன், தான் இயக்கின ஆவணப்படத்துக்கு நடிகை தேவைப்பட்டப்போ, என்னோட கல்லூரிப் பேராசிரியர் மூலமா என்னைச் சந்திச்சார்.

ரெண்டு பேரும் காதலிச்சோம். பெத்தவங்க மூர்க்கமா எதிர்த்தாங்க. எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, நான் நேசிச்ச கலைக்காகவும், என் காதலுக்காகவும் வீட்டில் இருந்து விடுபடணும் என்ற முடிவை சூழ்நிலை என்னை எடுக்க வெச்சது. கட்டின துணியோட தம்பிச்சோழனை கரம் பிடிச்சு சென்னை வந்தேன்.

பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் மேல எனக்கும் தம்பிச்சோழனுக்கும் இருந்த அளவில்லா காதலால, எங்க கல்யாணத்தை நடுக்கடலில், படகில் நடத்தினோம். மிக முக்கியமான ஐந்து பேர் முன்னிலையில், வழக்கறிஞர் ஒருவர் எங்க திருமணத்தை முன்நின்று நடத்தினார். அலைகள் தாலாட்ட இந்து, கிறிஸ்தவ முறைப்படி நடந்த எங்க கல்யாணம், எங்களுக்குப் பேரனுபவம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச ஆவணப்படத்தை வெளியிடமுடியாத சூழல் ஏற்பட்டாலும், அந்தப் படத்துக்கான பணிச்சூழல்தான் இன்னிக்கு எங்க ரெண்டு பேரையும் வாழ்க்கையில் ஆவணப்படுத்தியிருக்கு’’ என்று அழகாகப் பேசிய ஷீலா,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலையும் காதலும் ஜெயிக்கும்!

‘‘கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமும் சமாதானம் ஆகாம, பெத்தவங்க எங்களைப் பிரிக்க காவல் நிலையம் வரை போனாங்க. தொடர்ந்து சிறைச்சாலை, மகளிர் காப்பகம்னு நாங்க ரெண்டு பேரும் நிறைய இன்னல்களைச் சந்திக்கவேண்டி வந்தது. எல்லாவற்றில் இருந்தும் மீண்டு வந்தப்போ, எங்க காதல் இன்னும் கூடியிருக்கவே செய்தது.

கல்யாணமான இந்த மூணு வருஷத்துல, அவரோட சேர்ந்து நிறைய நாடகங்களில் பங்கெடுத்திருக்கேன். எழுத்து, இயக்கம், நடிப்பு, நாட்டியம்னு இவையெல்லாம் குறித்த புரிதல் எனக்கு நிறையவே கிடைச்சது. தம்பிச்சோழன் இப்போ திரைத்துறையில் நடிப்புப் பயிற்சியாளரா இருக்கார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ‘நீங்களும் நடிக்கலாம்’ புத்தகத்துக்கு அவரோட சேர்ந்து நானும் பங்களிப்பு செஞ்சிருக்கேன். ‘சென்னை கலைக்குழு’ சார்பாக நாடகத்துறையில் அறிமுகமான நான் இப்ப, ‘இங்கிலாந்து’, ‘கூக்குரல்’ நாடகங்கள் மூலமா ஓரளவுக்கு மத்தவங்களால அறியப்பட்டு இருக்கேன்’’ என்னும் ஷீலா சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியொன்றில் நடன ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் சில பள்ளிகளிலும் பகுதி நேர நடன ஆசிரியராக பணியாற்றுகிறார்.

''சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிகள்ல 15 வயது வரையிலான குழந்தைகள்கூட 6 வயதுக்குரிய மனநிலையோடதான் இருப்பாங்க.அவங்களுக்கு நாட்டியம் மூலமா புத்துணர்வு கொடுக்கும்போது அத்தனை சந்தோஷமா இருக்கும். மனதளவில் அவர்கள் குழந்தையா இருந்தாலும் உடல் ரீதியா நம்மைவிட பலமடங்கு உற்சாகமா இருப்பாங்க. நாட்டியப் பயிற்சி முடிஞ்ச பிறகும் அவங்க தொடர்ந்து கைகால்கள் அசைக்குறதும், தலையை ஆட்டிக்கிட்டே இருக்குறதையும் பாக்கும்போது மனசுக்கு நிறைவா இருக்கும். இந்த குழந்தைகளின் மனதில் புகுந்து சிரிப்பை கொடுக்குற கலையை நான் செஞ்சுட்டு இருக்கேன்னு நினைக்குறதே பேரானந்தம்தான்'' என்று சொல்லும் ஷீலா தொடர்ந்து,

‘‘சீக்கிரமே குழந்தைகளுக்கான நடிப்புப் பட்டறை ஆரம்பிக்கணும். அதுல நடிப்பு, நாடகம், இசை, ஓவியம், சிலம்பம், பறைன்னு எல்லா கலைகளையும் சொல்லித் தரணும். பெத்தவங்களோட அரவணைப்பு அணைஞ்சு போனப்போவும், என்னைக் காப்பாத்தினது, நின்னு ஜெயிக்கவெச்சது நான் கத்துக்கிட்ட கலைதான். கலை வாழும், வாழவைக்கும்!’’

- தோள்கள் நிமிர்த்தி, கண்கள் அகல, உறுதியான குரலில் முடிக்கிறார் ஷீலா.

பொன்.விமலா படங்கள்:ஆ.முத்துக்குமார், உ.கிரண்குமார்