Published:Updated:

புதுமை ஆண்... செல்வம் !

புதுமை ஆண்... செல்வம் !
பிரீமியம் ஸ்டோரி
புதுமை ஆண்... செல்வம் !

சமூகம்

புதுமை ஆண்... செல்வம் !

சமூகம்

Published:Updated:
புதுமை ஆண்... செல்வம் !
பிரீமியம் ஸ்டோரி
புதுமை ஆண்... செல்வம் !

`இனி ஆண்களின் துறை என எதுவும் இல்லை’ என்று உரைக்கும் விதத்தில், ஏவுகணை விஞ்ஞானி வரை, பல்வேறு துறைகளில் பெண்கள் புகுந்து புறப்பட்டுவிட்டார்கள். இன்னொரு பக்கம், பெண்களின் வேலைகளை ஆண்கள் பொறுப்பேற்பதில் இன்னும் தயக்கங்கள் தகர்ந்தபாடில்லை. ஆனால், செல்வம்... ஒரு புதுமை ஆண். கடந்த மூன்று ஆண்டுகளாக பத்துப்பாத்திரம் துலக்குவது, வீடு பெருக்கித் துடைப்பது, துணி துவைப்பது என... கீழ்கட்டளை, மடிப்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் ‘மேல் மெய்டு’ ஆக கலக்கிக்கொண்டிருக்கிறார்.

புதுமை ஆண்... செல்வம் !

நன்மங்கலத்தில் வசிக்கும் செல்வம், நாம் தேடிச்சென்றபோது மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தார். குழாயின் வேகத்தைக் குறைத்துவிட்டு, அடிப் பிடித்திருந்த பாத்திரங்களில் தண்ணீர் தெளித்து ஊறவைத்துவிட்டு நம்மிடம் பேசினார்...

‘‘வீட்டுவேலைக்கு வர்ற என்னை எல்லாரும் ஆச்சர்யமா பாக்கும்போதும், அதைப்பத்தி எங்கிட்ட விசாரிக்கும்போதும், `அப்படி என்ன நாம பெருசா செய்றோம்’னு தோணும். இப்போ அவள் விகடன்ல இருந்தே வந்துட்டீங்க...’’

- குரலில் குதூகலம் செல்வத்துக்கு.

‘‘1987-ல நானும் என் மனைவி மல்லிகாவும் ரெண்டு புள்ளைங்களோட சென்னைக்குப் பொழைக்க வந்தோம். நான் கொத்துவேலை பாத்துக்கிட்டே, கட்டட வேலை செய்யுற எடத்துல வாட்ச்மேனாவும் இருப்பேன். எப்பவுமே வேலை இருக்கும்னு சொல்ல முடி யாது. வீட்டுவேலைக்குப் போன என் சம்சாரம் மல்லிகாதான், எப்பவும் எங்க குடும்பத்துக்கு பணக்கஷ்டம் வராமப் பாத்துக்கிட்டா. 15 வருஷத்துக்கு முன்னாடி, நன்மங்கலம் பக்கத்துல இடம் வாங்கி நாங்க வீடு கட்டியிருக்கோம்னா அதுல அவளோட பங்கும் பொறுப்பும் பெருசு. பையன் படிக்காட்டியும் அச்சகத்துல நல்ல வேலையில இருக்கான். பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சுட்டோம்’’ எனும் செல்வம், தங்கள் வீட்டின் சூழலும், தன் வேலைச்சூழலும் மாறியது பற்றித் தொடர்ந்தார்.

‘‘என்னோட சம்சாரத்துக்கு இதய நோய் வந்துருச்சு. மூணு வருஷத்துக்கு முன்னாடி அவளுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செஞ்சோம். அதுக்கு அப்புறம் அவளால வீட்டுவேலைக்குப் போக முடியல. அந்த நேரம் எனக்கும் சரியா கட்டட வேலை அமையல. இன்னொரு பக்கம், என் சம்சாரம் வேலைபார்த்த வீடுகளில் எல்லாம், ‘மல்லிகா மாதிரி எங்களுக்கு ஒரு ஆளு கிடைக்காதுப்பா... அப்புடி வேலைபாக்கும். உனக்குத் தெரிஞ்சு வேற யாராச்சும் இருந்தாலும் வேலைக்குச் சொல்லு’னு கேட்டுட்டே இருந்தாங்க. அதிலும் வயசான ஒரு அம்மா ரொம்ப கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு, ‘நீங்க வேற ஆள் பாக்குற வரைக்கும் நான் வந்து வீட்டுவேலை செஞ்சு தர்றேன்’னு சொன்னேன். அவங்களுக்கு என்னோட வேலை ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுமை ஆண்... செல்வம் !

அப்புடியே என் சம்சாரம் வேலை பாத்த வீடுகளில் எல்லாம் ‘நானே வர்றேன்’னு சொல்ல, அவங்களுக்கு ஆள் கிடைச்ச சந்தோஷம் ஒரு பக்கம்னாலும், பாத்திரம் தேய்ச்சு, வீடு கூட்டி, துடைக்கிறதை எல்லாம் ஒரு ஆம்பளை எந்தளவுக்குத் திருத்தமா செய்யமுடியும்னு கொஞ்சம் யோசிச்சாங்க. ஆனா, நான் வேலைபார்க்க ஆரம்பிச்சதும் அந்த சந்தேகம் எல்லாம் காணாமப் போயிருச்சு. புதுசா ரெண்டு, மூணு வீடுகளிலும் வேலைக்குச் சேர்ற அளவுக்கு, எனக்கு நல்ல பேரு கிடைச்சது.

வீட்டுவேலை ஒரு பக்கம்னா, சுவர்கள்ல ஏதாச்சும் பூச்சு வேலைகள், டேங்க் க்ளீன் செய்றது, ஒட்டடை அடிக்கிறது, பரண்ல ஏறி ஒதுங்கவைக்கிறதுனு ஆண்களோட வேலைகளையும் சேர்த்துச் செய்றதால, நான் வேலைபார்க்கும் வீட்டுக்காரங்களுக்கு எல்லாம் என் மேல ரொம்ப திருப்தி. சிலர், ‘பாத்திரம் தேய்க்கிறது மட்டுமில்லாம, அதை அடுக்கிவைக்கிறதுல இருந்து, வீடு துடைக்கும் மாப்ல ஈரம் வடிச்சு காயவைக்கிறது வரை பொண்ணுங்களைவிட நேர்த்தியா வேலைபார்க்குறே’னு ஆச்சர்யமாப் பாராட்டுவாங்க.

ஏங்க... அரசியல்ல இருந்து ஆகாயம் வரை ஆம்பளைங்களோட வேலைகளை பொம்பளைங்க கத்துக்கிட்டு கலக்கும்போது, நாங்க இதுகூடக் கத்துக்க மாட்டோமா?!’’ - சிரிக்கும் செல்வம், கடைசிப் பாத்திரமாக இருந்த வாணலியை தேய்த்துக் கழுவிக் கவிழ்த்துவிட்டு, மீதம் இருந்த பாத்திரம் தேய்க்கும் லிக்விட்டை வீணாக்காமல் ஒரு பாட்டிலில் கொட்டிவிட்டு, கைகளைக் கழுவி எழுந்துகொள்கிறார்.

செல்வம் வேலைபார்க்கும் வீட்டுக்காரர் களிடம் பேசினோம். ‘‘பொறுப்பா, சுத்தமா வேலை பார்ப்பார் செல்வம். எல்லா வேலையும் அவருக்கு அத்துப்பிடி. என்னிக்காச்சும் ஏதாச்சும் வேலை எக்ஸ்ட்ரா சொன்னாலும், முகம் சுளிக்காமப் பார்ப்பார். கறுப்புப் பிடிச்சுப் போயிருந்த எங்க வீட்டு தோசைக்கல்லை, இவர் தேய்க்க ஆரம்பிச்சத்துக்கு அப்புறம்தான் அதோட பொலிவே தெரிஞ்சது. நம்பிக்கையானவர். வெளியூர்போனாக்கூட இவரை நம்பி வீட்டை ஒப்படைச்சிட்டுப் போகலாம்’’ என்று புகழ்கிறார் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ரேணுகா விஸ்வநாதன்.

‘‘நேரத்துக்கு மோட்டர் போட்டு ஆஃப் செய்றதில் இருந்து, பாத்திரம் துலக்கி, துணி காயப்போட்டு, வீடு கூட்டி, துடைச்சு, அடுத்த வீட்டுக்கு வேலைக்குக் கிளம்பும்போது நம்ம குப்பையை எடுத்துட்டுப்போய் குப்பைத்தொட்டியில போட்டுட்டுனு... சிஸ்டமேடிக்கா, சிறப்பா வேலை பார்ப்பார். ஆரம்பத்துல, ஒரு ஆம்பளைகிட்ட எப்படி வேலைவாங்குறதுனு யோசிச்சோம். ஆனா, இவர்கிட்ட வேலை சொல்ல வேண்டியதே இல்லைங்கிற அளவுக்கு, அவரே தானா எல்லா வேலைகளையும் எடுத்துச் செஞ்சிடுவார். இப்போ குடும்பத்துல ஒரு ஆளா ஆயிட்டார்’’ என்கிறார் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த காஞ்சனா நம்பிக்கையும், நிறைவுமாக.

கட்டுரை மற்றும் படங்கள்:ச.சந்திரமௌலி